Published:Updated:

`கற்கள், கம்புகள், முள் கம்பிகள்...!’ -லடாக் எல்லையில் முறையற்ற தாக்குதலில் ஈடுபட்ட சீன ராணுவம்?

இந்தியா சீனா எல்லை
இந்தியா சீனா எல்லை ( Representational Image )

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று படைத் தளபதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போது சீனா, எல்லைப் பகுதியில் சுமார் 5,000 வீரர்களைக் குவித்து முகாம் அமைத்திருக்கிறது.

உலகமே கொரோனா என்னும் கொடிய வைரஸுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகிறது. கொரோனா வைரஸ் முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவின் வுகான் மாகாணத்தில்தான். அதைத்தொடர்ந்து அந்த நகரம் மூடப்பட்டது. பின்னர் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பல உலக நாடுகள் சந்தேகம் கிளப்பிய போதும், லாக் டெளனை தற்போது முழுமையாக விலக்கியுள்ளது சீனா. இதனால் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளுக்காக வெளியே சென்று வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த சில நாள்களாக இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த வாரத்தில் லடாக் பகுதியில் சீன ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியானது. உடனடியாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களும் அந்தப் பகுதியில் வட்டமிட பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் தரப்பில், `இது வழக்கமான ரோந்துப் பணி’ என என விளக்கம் தரப்பட்டது. என்றாலும் இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் சற்றும் குறையவில்லை.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

எல்லைகளில் சீனா தொடர்ந்து படைகளை அதிகரித்து வந்தது. இந்தியா - சீனா இடையே ஆன எல்லைப் பிரச்னை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. என்றாலும் தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. சீனாவுடன் மிகப் பெரிய அளவில் எல்லையில் இந்தியா பகிர்ந்துள்ள நிலையில், அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது.

இதற்கிடையே, இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா, எல்லைப் பதற்றம் ஆகியவற்றை மனதில் வைத்து இந்தியாவில் சிக்கி இருக்கும் சீனர்களைத் திரும்ப அழைத்திருக்கிறது சீன அரசு. மீண்டும் சீனா திரும்ப விரும்பும் மக்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என இந்தியாவில் இருக்கும் சீன தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா-சீனா
இந்தியா-சீனா
`கொரோனா அச்சம்; எல்லையில் பதற்றம்!’ - இந்தியாவிலிருந்து தங்கள் மக்களை திரும்ப அழைக்கும் சீனா

இதற்கிடையே, இன்று லடாக் அருகே இருக்கும் பாங்கோங் ஏரி அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது முறையற்ற தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்கள் இருந்தும் இந்தியா ராணுவத்தின் மீது, கற்கள், கம்பு, முள்வேலி கம்பிகள் முதலியவற்றை எறிந்து தாக்குதல் நடத்தியாதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்திருக்கிறது.

சீனாவின் இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும், அவர்களின் இந்த நெறிமுறையற்ற தாக்குதல் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. வழக்கமாக எல்லைப்பகுதியில் சீனா அதிக அளவில் படைகளைக் குவித்து பதற்றத்தை அதிகரிக்கும். ஆனால், இந்த முறை கற்கள், கம்புகள், மற்றும் காயங்களை ஏற்படுத்தும் முள் கம்பிகள் கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காஷ்மீர் எல்லை வீரர்கள்
காஷ்மீர் எல்லை வீரர்கள்

அவர்கள் இந்திய வீரர்களை சீண்டுவதற்காக இத்தகைய தாக்குதலை முன்னெடுத்தார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனிடையே, சீன ராணுத்தின் ஆதரவுடன் பாகிஸ்தானியர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார்களா என்ற விவாதமும் நடக்கிறது. இந்திய ராணுவமும் சீன ராணுவமும் நேருக்கு நேர் சந்தித்த இந்த மோதலில் சீனர்களுக்கு ஆதரவான வாய்ப்புகள் எத்தனையோ இருந்தும் அவர்கள் முறையற்ற தாக்குதல் நடத்தியது இன்று பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

`உங்கள் திறமையின்மையாலேயே இவ்வளவு மரணங்கள்!’ - தொடரும் அமெரிக்கா - சீனா வார்த்தைப் போர்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று படை தளபதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போது சீனா, எல்லைப் பகுதியில் சுமார் 5,000 வீரர்களைக் குவித்து முகாம் அமைத்திருக்கிறது. எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பிரதமர் மோடியும் தீவிர ஆலோசனையின் ஈடுபட்டுள்ளார்.

' ராஜ்நாத் சிங்
' ராஜ்நாத் சிங்

இதனிடையே இன்று ஊடகங்களிடம் சமூகவலைதளம் மூலமாக பேசிய ராகுல் காந்தி, லடாக்கில் நடப்பது தொடர்பாக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு