Published:Updated:

`ஹூபேயில் நோ புதிய நோயாளிகள்; வீட்டுக்குச் செல்லும் மருத்துவர்கள்’- இயல்புநிலைக்குத் திரும்பும் சீனா

சீனா
சீனா ( AP )

வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு புதிய நோயாளிகூட அனுமதிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து முதன்முதலாகப் பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலக நாடுகளுக்கும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 2,02,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,010 ஆக அதிகரித்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,813 ஆக உள்ளது.

கொரோனா
கொரோனா

இதுவே சீனாவில் மட்டும் 80,894 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 3,237 உயிரிழந்துள்ளனர். தற்போது சீனாவில் வைரஸின் நிலை சற்றே குறைந்துள்ளது. உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக வந்துள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகவே அங்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன. கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கள் குடும்பங்களை விடுத்து 24 மணி நேரமும் பணியிலிருந்த மருத்துவ பணியாளர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

`குழந்தைகளை முத்தமிடக்கூட முடியாது!' - கேரள கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியரின் அனுபவம்

இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாகக் கருதப்படும் ஹூபேயில் ஒரு புதிய வைரஸ் நோயாளிகூட அனுமதிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி மி ஃபெங் (Mi Feng) தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ``கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணம் ஹூபே. இங்கு உள்ள வுகான் நகரத்துக்கு வெளியே தொடர்ச்சியாகக் கடந்த 13 நாள்களாக முதன்முறையாக எந்தப் புதிய வைரஸ் நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

சீனா
சீனா
AP

இந்த நாள்களில் சுமார் 896 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது அங்கு மொத்தமாக 7,336 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களில் 2,077 பேர் சற்று கடுமையான நிலையிலும் 503 பேர் மிகக் கடுமையான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஹூபே மருத்துவமனைகளில் வேலை செய்த பணியாளர்கள் மெதுவாக வீடு திரும்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மூடப்படும் சிறப்பு மருத்துவமனைகள்?; அதிபரின் வுகான் பயணப் பின்னணி! -  மீண்டுவிட்டதா சீனா? #Corona

இதற்கிடையில் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சீனாவின் ஷிஜியாஜுவாங் (Shijiazhuang) நகரத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, கடந்த ஒரு மாதமாக ஹூபே மாகாணத்தில் தங்கியிருந்து அங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார். அவர் சில தினங்களுக்கு முன்பு தன் சொந்த நகருக்குத் திரும்பியுள்ளார். இந்த தகவல் அறிந்ததும் செவிலியரின் மகன், முன்னதாகவே தன் தாயை வரவேற்கச் சாலையில் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்.

அங்கு வேனில் கூட்டமாக வந்து இறங்கிய நிறைய பணியாளர்களில் தன் தாயைத் தேடிப்பிடித்துக் கட்டியணைத்து கண்ணீர் விடுகிறான். இந்தத் தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் அடங்கிய வீடியோதான் சமூக வலைதளத்தில் வெளியாகிக் காண்போர் மனதை உருக வைத்துள்ளது. `நான் வெளியில் சென்று 29 நாள்கள் ஆகிவிட்டன. இத்தனை நாள்கள் என் மகனைப் பிரிந்து இருந்ததில்லை. இதுவே முதல்முறை’ என்று கூறும் அந்த செவிலியர், தன் மகனிடம் `நான் வந்துவிட்டேன், மீண்டும் வந்துவிட்டேன்’ என்று கூறி கட்டியணைத்துக்கொள்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு