Published:Updated:

எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் தொடர் மோதல்... சிக்கிம் சிக்கல் தீராதா?

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள் ( Photo: AP (File) )

பல ஆண்டுக்காலமாக எல்லைப் பிரச்னை இரு நாடுகளுக்குமிடையே உள்ளது. எல்லைப் பிரச்னையைத் தீர்க்க 400 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை.

1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது. இந்தப் போருக்குப் பிறகு, இந்தியாவின் `ஏழு சகோதரி மாநிலங்கள்' என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் மீது சீனா ஒரு கண் வைத்தது. அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், நாகலாந்து, மிஸோரம், மணிப்பூர் ஆகியவைதான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள். இந்த மாநிலங்கள் இனம், கலாசாரத்தில் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புகொண்டவை. அதனால்தான் இவை `சகோதரி மாநிலங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன. இதில், சிக்கிம் மாநிலம் கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் இணக்கப்பட்டது.

இந்தியாவுடன் சிக்கிம் இணைவதற்கு முன், 1975-ம் ஆண்டு வரை தனி நாடாகவே இருந்தது. இந்த மாநிலத்தை ஆண்ட கடைசி மன்னர் பெல்டன் தோண்டுப் சாக்யால். இவரின் மனைவி ஹோப் கூக், அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்கா ஆதரவுடன் சிக்கிம் தனி நாடாக இருக்க வேண்டுமென்பது சாக்யால் மனைவியின் ஆசை. ஆனால், தனது ஆசை நிறைவேறாது என்பதை அறிந்துகொண்ட ஹோப் கூக், விலையுயர்ந்த பொருள்களுடன் சிக்கிமை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்துபோன சாக்யால், இந்தியாவுடன் சிக்கிமை இணைக்க ஒப்புக்கொண்டார். 1975- ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் இந்தியாவின் 22 -வது மாநிலமான சிக்கிம் அங்கீகரிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு சாக்யால் புற்றுநோயால் மரணமடைந்தார். சிக்கிமின் கடைசி மன்னரும் மண்ணைவிட்டு மறைந்து போக, இந்தியாவின் ஓர் அங்கமாக சிக்கிம் அமைதியாக இருந்து வருகிறது.

ஆனால், அவ்வப்போது சீன ராணுவத்தினர் சிக்கிமில் அத்துமீறலில் ஈடுபட்டு அமைதியை குலைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஏற்கெனவே, திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி அருணாசலப் பிரதேசத்தை தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிக்கிமில் பூடான் எல்லையையொட்டிய டோக்லம் பகுதியில் சாலை போட சீன ராணுத்தினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ராணுவ வீரர்களிடத்தில், சீன வீரர்கள் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து டோக்லம் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களைக் குவித்த நிலையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், 73 நாள்களுக்குப் பிறகு இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அமைதியாக இருந்த நிலையில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சிக்கிமில் மீண்டும் இந்திய ராணுவத்தினருடன் சீன வீரர்கள் சண்டையிட்டுள்ளனர்.

China
China

கடந்த 11-ம் தேதி வடக்கு சிக்கிமில் நாதுலா பகுதியில் பாங்ஹாங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் வெடித்துள்ளது. இந்திய தரப்பில் 100 பேரும் சீனா தரப்பில் 150 வீரர்களும் சண்டை நடந்த இடத்தில் இருந்துள்ளனர். `சிக்கிம் உங்களுக்குச் சொந்தமில்லை எங்களுக்குச் சொந்தமானது' என்று சீன வீரர் ஒருவர் வாய்த்தகராறில் ஈடுபட, இந்திய ராணுவ வீரர் ஒருவர் சீன வீரரின் முகத்தில் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து மோதல் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. இரு தரப்புக்கிடையே கைகலப்பு ஏற்பட்டு சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. பின்னர், அதிகாரிகள் மட்டத்தில் தலையிட்டு சமாதானத்தில் முடிந்துள்ளது. கைகலப்பில் நான்கு இந்திய வீரர்களும் ஏழு சீன வீரர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தியா, சீனாவுடன் ஜம்மு - காஷ்மீர் முதல் அருணாசலப் பிரதேசம் வரை 3,488 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது. பல ஆண்டுக்காலமாக எல்லைப் பிரச்னை இரு நாடுகளுக்குமிடையே உள்ளது. எல்லைப் பிரச்னையைத் தீர்க்க 400 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. கடந்த 10 நாள்களுக்குள் இந்திய வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இரண்டு முறை மோதல் வெடித்துள்ளது. மே 5-ம் தேதியும் சிக்கிம் லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் சண்டையிட்டுள்ளனர்.

இந்தச் சமயத்தில், சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய எல்லையையொட்டி பறந்து சென்றுள்ளது. இதையடுத்து, இந்திய விமானப்படையும் சுகோய் -30 ரக விமானத்தை அந்தப் பகுதியில் ரோந்து மேற்கொண்டதையடுத்து சீன ஹெலிகாப்டர்கள் மாயமாகியுள்ளன. ஆனால், எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமாக ரோந்துப் பணிதான் இது, சீன ராணுவத்தின் அத்துமீறிய செயலாகப் பார்க்க முடியாது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Xi Jinping and Modi
Xi Jinping and Modi

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லம் விவகாரத்தையடுத்து, கொரோனாவுக்கு பிரசித்தி பெற்ற வுஹான் நகரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு 2018-ம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது, எல்லையில் மோதல் போக்கை கைவிட்டு, அரசியல்ரீதியாக தீர்வு காணப்பட வேண்டுமென்று இரு தலைவர்களும் முடிவெடுத்தனர். வுஹான் சந்திப்பையடுத்து, மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்தாலோசித்தனர். தற்போது, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா நாடுகளை கொரோனா தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, `கொரோனா நோயைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்' என்று சீன அரசு கூறியது. ஆனால், எல்லையில் மோதல் போக்கை சீனா தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கொரோனா பிரச்னை தீர்ந்தாலும் இந்த எல்லைப்புற மோதல்கள் மட்டும் தீராது போலும்!

அடுத்த கட்டுரைக்கு