Published:Updated:

`ஐரோப்பிய நாடுகளில் குறையும் பாதிப்பு; இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில்..?’ -உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

போராட்டங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத நகரங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் விதைத்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. உலகம் முழுவதும் தற்போது வரையில் 66,92,686 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,92,286 மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர். 32,42,111 மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் சுமார் 22,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 19,24,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் மட்டும் 1,10,173.

தற்போது பிரேசில் நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிக வீரியம் கொண்டு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் மட்டும் 31,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 6,15,870 பேர் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 34,039 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

கொரோனா பாதிப்பில் பிரேசிலுக்கு அடுத்த இடங்களில் ரஷ்யா(3), ஸ்பெயின்(4), பிரிட்டன்(5), இத்தாலி(6) ஆகிய நாடுகள் இருக்கிறது. எனினும் இந்த நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், 7 -வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் தற்போது தினமும் 9,000 -க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது வரை இந்தியாவில் 2,26,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 1,08,450 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 6,075 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர்.

சீனாவில்தான் முதல் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா. தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்தியாவில் பொருளாதார நடவடிக்கையாக அன்லாக் 1 அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் தங்களின் தேவைகளுக்கு வெளியே வரத் தொடங்கிவிட்டார்கள். இதனால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் நிலவுகிறது.

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்
AP

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் மரணத்துக்கு நீதி கேட்டு பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத நகரங்களிலும் போராட்டம் வலுபெற்று வருகிறது. இது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் விதைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு