Published:Updated:

`அமெரிக்க ராணுவ லேப்; வுகானுக்கு எடுத்துவந்த வீரர்!’ -அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சீனா #Corona

கொரோனா
கொரோனா

சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம், சீனாவில் இறைச்சி விற்கும் சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதாக தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சீனா அமெரிக்காவைக் குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா குறித்த பேச்சுதான். முதன்முதலாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது ஒட்டுமொத்த உலகத்தின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது. இந்தியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள், தங்கள் நாட்டில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாகப் போராடி வருகின்றனர். எனினும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் இரு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் இந்தக் கொரோனாவுக்குக் காரணமானவர்கள் யார் என்னும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் தகவல் வெளியானது முதலே அமெரிக்கா இந்த வைரஸை `சீன வைரஸ்’ என்று குறிப்பிட்டு வருகிறது. இவ்வாறு அழைப்பதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறது, சீனா.

``முதன்முதலாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் உண்மையே தவிர, இந்த வைரஸ் உருவானது சீனாவில்தான் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை” என சீனா தெரிவித்து வந்தது.

அமெரிக்க  அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

எனினும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் என்று உச்சரித்ததைவிட, சீன வைரஸ் என்று உச்சரித்ததுதான் அதிகம் என்று சொல்லும் அளவுக்குத் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் சீனா, `கொரோனா வைரஸை `சீன வைரஸ்’ எனக் குறிப்பிடக்கூடாது. அத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக நீங்கள் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்’ எனக் கோரிக்கை வைத்தது.

`குறுகிய மனப்பான்மை இருக்காது என நம்புகிறோம்!’-இந்தியாவுக்கு சீனாவின் கோரிக்கை #Corona

மேலும் இந்த வைரஸ் எப்படி, எங்கு உருவானது என்பதனைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது சீனா. இந்தநிலையில் சீன அரசின் ஆங்கில நாளிதழான `க்ளோபல் டைம்ஸ்’ இந்த வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானது எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு புதிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இந்தக் கட்டுரையை ஜார்ஜ் வெப் என்பவர் எழுதியுள்ளார்.

கொரோனா
கொரோனா
Freepik

அதில், SARS-CoV-2 வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானதாகவும், வுகான் நகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தைய வீரர் ஒருவர் பரப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த வைரஸ் ஹூபே மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹூபே மாகாணத்தில்தான் வுகான் நகரமும் இருக்கிறது. எனினும் வைரஸுக்கும் சைக்கிள் பந்தைய வீரருக்கும் என்ன தொடர்பு என்பதை அந்தச் செய்திக் குறிப்பு விளக்கவில்லை.

மேலும், இதில் அடிப்படை ஆதாரங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக சீனா இப்படி அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதாகக் கூறப்படுகிறது. மேலும் சீனாவின் சமூக வலைதளங்களிலும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதற்கு அமெரிக்காதான் காரணம் போன்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

கொரோனா
கொரோனா

முன்னதாக சீனாவின் மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம், சீனாவில் இறைச்சி விற்கும் சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதாக தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சீனா அமெரிக்காவைக் குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளது. இதனால் இது அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவும், தற்போது வரை சீனாவில் இருந்து வைரஸ் உருவானதற்கு ஆதாரங்களைக் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு