Published:Updated:

``கொரோனா வைரஸ் ஒரு பயோ வார் கிடையாது..!" அடித்துக் கூறும் ஆய்வாளர்கள்

China Outbreak
China Outbreak ( AP / Xiao Yijiu )

ஷோஹாம், தன்னுடைய இந்தக் கூற்றுக்கு எந்த வலுவான பின்புலத்தையும் முன்வைக்காத போதிலும்கூட, வாஷிங்டன் டைம்ஸ் அதை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதவே, உடனடியாக இதர பத்திரிகைகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின.

கொரோனா வைரஸ்... இதுகுறித்துதான் உலகம் முழுக்கத் தற்போது தீவிரமாகப் பேசப்படுகிறது. உயிருக்கு மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் சமீபத்தில் சீனா முழுக்க திடீரென்று பரவத் தொடங்கியது. அதோடு சேர்த்து, அதுகுறித்துப் பல பொய்ச்செய்திகளும் போலியான தகவல்களும் கூடவே பரவின.

இதுவரை 9,800 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 180-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இதன் பரவலில் மையப்புள்ளியாகத் திகழ்வது, ஹுபேய் மாகாணத்திலுள்ள வூஹான் (Wuhan) என்ற பகுதிதான் என்று சொல்லப்படுகிறது. நிலைமை தீவிரமாகிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வாஷிங்டன் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. வுகானிலுள்ள ஒரு ராணுவப் பரிசோதனைக் கூடத்திலிருந்துதான் இந்த வைரஸ் வெளியே பரவியிருப்பதாகச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

ஹாங்காங்
ஹாங்காங்

அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் வுகான் வைராலஜி ஆய்வு நிறுவனத்தில் கொரோனா வைரஸை பயோ ஆயுதமாகப் போரின்போது பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருந்தது, அதிலிருந்துதான் இந்த வைரஸ் வெளியே பரவத் தொடங்கியிருக்கிறது; இந்தத் தாக்குதல் தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே வெளியே பரப்பப்பட்டதா என்று தெரியவில்லை என்று அந்தக் கட்டுரை பேசுகிறது.

இதற்கான அடிப்படையாக, இஸ்ரேலிய இன்டெலிஜென்ஸ் அதிகாரியும் உயிரியல் போர் யுக்திகளில் நிபுணருமான டேனி ஷோஹாம் கூறியதைத்தான் அது மேற்கோள் காட்டுகிறது. அவர் வாஷிங்டன் டைம்ஸிடம் பேசியபோது, ``வுகான் வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் சில பரிசோதனைக் கூடங்களில், சீன உயிரியல் போர் ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக அங்கு இந்த ஆய்வுகள் நடக்கின்றன. தவிர்க்க முடியாத சேதாரமாக அங்கிருந்து இந்த வைரஸ் பரவல் நிகழ்ந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

ஷோஹாம், தன்னுடைய இந்தக் கூற்றுக்கு எந்த வலுவான பின்புலத்தையும் முன்வைக்காத போதிலும்கூட, வாஷிங்டன் டைம்ஸ் அதை மேற்கோள்காட்டி கட்டுரை எழுதவே, உடனடியாக இதர பத்திரிகைகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின.

டொரொன்டோவில் உள்ள டல்லா லானா என்ற பொதுச் சுகாதாரக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியராகப் பணிபுரியும், நோய்த்தொற்றியல் தொடர்பான ஆய்வாளரும் பேராசிரியருமான டேவிட் ஃபிஸ்மேன், கொரோனா வைரஸ் முற்றிலும் புதியது என்று கூறியுள்ளார். மேற்கொண்டு ஃபாரின் பாலிசி என்ற இதழுக்கு அவர் பேசியபோது, ``இத்தகைய புதிய, வேகமாகப் பரவக்கூடிய வைரஸ்கள் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவது வழக்கமானதுதான். அந்தப் பீதி, புதிய புதிய கட்டுக்கதைகளுக்கு வழிவகுக்கின்றது" என்றும் கூறியுள்ளார்.

China Outbreak
China Outbreak
Photo: AP

கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமா அல்லது அது இயற்கையாகப் பரவியதா என்பதன் உண்மையறிய, நாம் முதலில் இந்த வைரஸ் தாக்குதல் எங்கிருந்து தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் வுகானில் பரவத் தொடங்கியதுமே, அதன் தொடக்கத்தை ஆய்வாளர்கள் தேடத் தொடங்கிவிட்டனர். அந்தத் தொடர் தேடுதல் வேட்டையை அடிப்படையாக வைத்து, தி லேன்செட் என்ற ஆய்விதழில் ஜனவரி 29-ம் தேதி ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தேதி வாரியாக முதலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 10 நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகளைப் பரிசோதித்தனர். அவர்களுக்குப் பரவியிருந்த வைரஸுடைய மரபணு மாதிரி 99.98 சதவிகித ஒற்றுமையைக் கொண்டிருந்தது. மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ்கள், மிக வேகமாக வளரவும் கூடியவை. அவை தொடர்ந்து பரவிக்கொண்டேயிருக்கையில் அவை அதே வேகத்தில் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும். ஆகவே, அந்தப் பத்துப் பேரின் மாதிரிகளில் செய்த பரிசோதனையில் கிடைத்த 99.98 சதவிகித மரபணு ஒற்றுமை மூலம், சமீபத்தில்தான் மனிதர்களிடம் அது பரவியிருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.

2019-nCoV என்ற அதன் தொடர் வரிசை (Sequence), பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளிடமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார், இந்த ஆய்வுக் குழுவின் துணைத்தலைவரான வீஃபெங் ஷி (Weifeng Shi). பல்வேறு பகுதிகளிலிருந்து தனித்தனியாக இந்த வைரஸ் பரப்பப்பட்டிருந்தால், அதன் மாதிரிகளில் இவ்வளவு ஒற்றுமை இருக்காது. ஆகவே, இதன்மூலம் ஒரேயொரு வழியாகத்தான் மனிதர்களுக்குப் பரவியிருக்க வேண்டும், அதுவும் மிகச் சமீபத்தில்தான் நடந்திருக்க வேண்டுமென்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனக் கணக்கின்படி, மனிதர்களிடம் தொற்றிய குறுகிய காலத்துக்குள்ளாகவே இது அதிவேகமாக 15 நாடுகளைச் சேர்ந்த 9,800 பேரைப் பாதித்துள்ளது, 180-க்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கியுள்ளது என்று தெரிகிறது. தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் சீனாவில் கடல் உணவுகளையும் பல்வேறு விலங்குகளையும் விற்பனை செய்யக்கூடிய, வுகானிலுள்ள ஹ்யூனான் கடல் உணவுச் சந்தையைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது அங்கு சென்று வந்தவர்களாகவோதான் இருந்துள்ளார்கள். அதனால், அங்கிருந்துதான் ஏதாவதொரு விலங்கின் வழியாக இது பரவியிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.

China Outbreak
China Outbreak
Photo: AP

இந்த வைரஸின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க, மேற்கொண்டு ஆழமாக ஆய்வு செய்தபோது 2019-nCoV வரிசையிலிருக்கும் வைரஸ், வௌவால்களில் தோன்றிய இரண்டு கொரோனா வைரஸ்களோடு 88 சதவிகிதம் நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதைக் கண்டனர். அதுமட்டுமின்றி, 2003-ம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸோடும் மெர்ஸ் (MERS) என்ற வைரஸோடும், இந்தக் கொரோனா முறையே 79 மற்றும் 50 சதவிகித ஒற்றுமையைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவையும், ஆரம்பத்தில் உயிரியல் ஆயுதமாக இருக்கக்கூடும் என்ற வதந்தி பரவி பின்னர், இல்லையென்று தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ஸ் ஒட்டகங்களிடமிருந்து பரவியது. மெர்ஸ் மர நாயிடமிருந்து பரவியது. அவற்றோடு இவை பெரிதும் ஒத்துப் போவதால் இவையும் பாலூட்டியிடமிருந்தே பரவியிருக்கலாம் என்றும், வௌவால்களின் மரபணு மாதிரிகளோடு இவை அதிகம் ஒத்துப்போவதால் அவற்றிடமிருந்து பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆய்வாளர்கள் இந்த முடிவுகளின் அடிப்படையில், 2019-nCoV வைரஸ் வௌவால்களிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது முதன்முதலில் மனிதர்களிடம் பரவியதாகச் சொல்லப்படும் ஹ்யூனான் சந்தையில் வௌவால்கள் விற்கப்படுவதில்லை. எனவே, கிடைத்திருக்கும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் வௌவால்கள் மூலமாக வேறு ஏதேனும் உயிரினத்துக்குப் பரவி அதனிடமிருந்து மனிதர்களிடம் பரவியிருக்கலாம் என்றொரு கருதுகோளை ஷேன்டாங் மருத்துவப் பல்கலைக்கழகம் முன்வைக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிக்கல் வைராலஜி என்ற மருத்துவ ஆய்விதழில் இதற்கும் முன்பாக வெளியான ஓர் ஆய்வில் கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்துதான் பரவுகிறது என்று கூறியிருந்தனர். உலகளவில் மற்ற பல வைராலஜி துறை வல்லுநர்கள், இந்த வைரஸால் பாம்புகளைப் போன்ற குளிர் ரத்தப் பிராணிகளில் பிழைத்திருக்க முடியாது. ஆகவே, அங்கிருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
cdc.gov/media

அப்படியே ஒருவேளை பாம்புகள் மூலமாகப் பரவியது என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டாலும், குளிர் ரத்தப் பிராணிகளிடமிருந்து ஒரு வைரஸ் எப்படி சூடான ரத்தத்தைக் கொண்ட பாலூட்டிகளிடையே பரவியது என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனென்றால், இதுவரை இப்படி எதுவும் பரவியதற்கான ஆதாரங்கள் இல்லை. அதுமட்டுமின்றி, இரண்டு வகை உயிரினங்களின் உடலமைப்புக்கும் இடையே பெரியளவில் வேறுபாடுகள் உள்ளன. இப்படியொரு முரண்பாடு இருக்கும் சூழலில், பாம்புகளிடமிருந்து அவை பரவியதற்கான மரபணு ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

அறிவியல் ஆதாரங்களுக்கும் நடைமுறைக்கும் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகளே, இந்த வைரஸ் உயிரியல் ஆயுதமாக இருக்கலாம், இது உயிரியல் போராக இருக்கலாம் என்ற கருதுகோளுக்கு வித்திட்டுள்ளது. இது இயற்கையாகப் பரவியிருக்கலாம் என்ற கூற்றுக்கு ஆதாரங்களாக இவ்வளவு கிடைத்துள்ளது. ஆனால், இதுவரைக்கும் இது உயிரியல் ஆயுதமாக இருக்கலாம் என்ற கூற்றுக்கு ஓர் ஆதாரம் உறுதியாகக் கிடைக்கவில்லை என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இது மரபணு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ்தான் என்று சமூக வலைதளங்களும், சில சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றின் கூற்றுக்கு முன்வைத்த ஒரேயொரு ஆதாரம், இஸ்ரேலிய ராணுவத் துறையைச் சேர்ந்த உயிரியல் ஆயுத நிபுணர் டேனி ஷோஹாமுடைய கருத்து மட்டுமே. அவரும் தன்னுடைய கருத்துக்கு வலுவான ஆதாரம் எதையும் முன் வைக்கவில்லை.

அதேநேரம் இந்தக் கூற்றை வழிமொழியும் மற்ற சிலர், ``இந்த வைரஸ் பெருகுவதற்கு உதவும் இதனுள் இருக்கும் ஒரு என்சைம், எச்.ஐ.வி வைரஸ் பரவுவதற்குப் பயன்படுத்தும் என்சைம் போலவே இருக்கிறது. ஆகவே, எச்.ஐ.வி-யில் சில வேறுபாடுகளைச் செய்து இதைப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கியிருக்கலாம்" என்று கூறுகின்றனர். ஆனால், இரண்டையும் பரிசோதித்துப் பார்த்த மற்ற வைராலஜி ஆய்வாளர்கள் யாருமே இதுவரைக்கும் இந்தக் கூற்றுக்கு உரிய ஆதாரத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம், அவர்களுடைய ஆய்வுமுடிவுகள் இதை வைரஸ்களில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சி மூலமும் மரபணு மாற்றங்களின் மூலமும் இயற்கையாக நிகழ்ந்ததாகத்தான் கூறுகிறார்கள்.

China Outbreak
China Outbreak
AP

உயிரியல் ஆயுதங்கள் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் பரவுவது இது முதல் முறையல்ல. 2003-ம் ஆண்டு சார்ஸ் (SARS) எனப்படும் காற்றில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் பரவத் தொடங்கியபோதும் இதேபோன்ற பீதிகளும் கிளம்பத் தொடங்கின. அதன்பின்னர், அது உயிரியல் போராகவோ, சார்ஸ் வைரஸ் உயிரியல் ஆயுதமாகவோ இருக்கலாம் என்ற கூற்று போலியானதென்று நிரூபிக்கப்பட்டது.

அதேபோலத்தான் இப்போதும் கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் போர் என்ற வதந்தி பரப்பப்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சீனாவின் மத்தியப் பகுதிகளில் ஒன்றாக, அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக அறியப்படும் வுகானில் இந்த வைரஸ் தாக்குதல் தொடங்கியிருப்பது, இதை மனிதர்களிடம் பரப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வௌவால்கள் அங்கு விற்பனைக்கு இல்லாதது போன்றவை, அங்கு இது எப்படி வந்திருக்கும் என்ற சந்தேகத்துக்கும் அடிகோலுகிறது.

தன்னுடைய மக்களையும் இதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். இதன் தோற்றத்தையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை, தனிப்பெரும் சக்தியாக ஆசிய கண்டத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் சீனாவின் பொருளாதாரத்தைச் சீரழிக்கச் சத்தமின்றி நடத்தப்பட்ட உயிரியல் ஆயுதம்தான் இது என்பதற்கு ஆதாரம் கிடைத்தால், அதன் அஸ்திவாரத்தையும் தகர்க்க வேண்டும். இப்போது உலகமே சீனாவைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அது விரைந்து செயல்பட்டாக வேண்டும்.

China Outbreak
China Outbreak
Photo: AP

ஏனெனில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது, 9,800 என்றிருந்தது. அதுவே, கட்டுரையின் முடிவை நெருங்கும்போது 11,374 ஆக உயர்ந்துவிட்டது. இதனால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்து விட்டது.

இதன் பரவல் எவ்வளவு வேகமாக நடக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மனித இனம் பல்வேறு அபாயங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அவை போதாதென இப்போது இதுவும் அந்தப் பட்டியலில் முழு வீரியத்துடன் இணைந்துள்ளது. இதை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால், அது உலகம் முழுவதும் மோசமான எதிர்வினைகளையும் சேதங்களையும் கொண்டுவரலாம். அது நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை, ஒவ்வோர் அரசுக்குமே உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு