Published:Updated:

கொரோனா அச்சுறுத்தல் - மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசரநிலை பிரகடனம்!

மலேசியா
மலேசியா ( Vincent Thian )

மலேசியா நாட்டின் மன்னர், 50 வருடங்களுக்குப் பிறகு நாடு தழுவிய அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்திருக்கிறார். இது ஆக்ஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், மலேசிய நாடாளுமன்றக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படும்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவரும் இந்த வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறுகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன.

பிரிட்டன், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் ஒன்பது கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மலேசியாவிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதைத் தொடர்ந்து, மலேசியா முழுவதும் இரண்டு வார காலத்துக்கு ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மலேசியா
மலேசியா
Vincent Thian

இந்நிலையில், மலேசியா நாட்டின் மன்னர் 50 வருடங்களுக்கு பிறகு நாடு தழுவிய அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்திருக்கிறார். இது ஆக்ஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், மலேசிய நாடாளுமன்றக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படும். தற்போதைய பிரதமர் முஹைதீன் யாசின் தொற்றுநோய் முடிவுக்கு வரும் வரை தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழலை அவசரநிலை பிரகடனம் உருவாக்கியிருக்கிறது.

மலேசிய பிரதமர் முஹைதின் யாசின் (Muhyiddin Yassin) தலைமையிலான அமைச்சரவைப் பரிந்துரையை ஏற்று அந்நாட்டில் அவசரநிலையை மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா பிரகடனப்படுத்தியிருக்கிறார். மலேசியாவின் அவசரநிலை அறிவிப்பு, தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் உட்பட கோவிட் -19 வைரஸ் தொற்று பரவலைச் சமாளிக்க பிரதமர் முஹைதீனின் நிர்வாகத்துக்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது. மேலும், காவல்துறை மற்றும் ராணுவத்தை பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவ அனுமதிக்கவும் வழிவகை செய்கிறது.

இது குறித்துப் பேசிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், ``பொருளாதார நாசவேலைகளைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம். அவசரநிலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும். நோய் தொற்று விரைவில் குறையாது. தொற்றுநோய் குறைந்துவிட்டதாக குழு அறிவித்தவுடன் தேர்தல்கள் நடத்தப்படும். அப்போதுதான் வாக்களிப்பது பாதுகாப்பானதாக இருக்கும்" என்றார்.

மலேசியா
மலேசியா
Vincent Thian

மேலும், தற்போதைய அவசரநிலை பிரகடனத்தால் கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்கச் செயல்பாடுகளிலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதிப்பு இருக்காது. அவசரநிலை என்பது ராணுவ அதிகார கட்டுப்பாட்டைக் குறிப்பதும் ஆகாது. அவசரநிலை தொடர்பாக மாமன்னருக்கு ஆலோசனை வழங்க எம்.பி-க்கள், சுகாதார அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்" என்றார் பிரதமர் முஹைதீன் யாசின்.

மலேசியாவின் அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறாது என்றும், பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது என்றும், அதேநேரத்தில் நீதிமன்றங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னரின் அவசரநிலை அறிவிப்புக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் (Ringgit) மற்றும் நாட்டின் முக்கியப் பங்குகளின் குறியீடுகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு