Published:Updated:

``முத்தையா முரளிதரனுக்கு ஆளுநர் பதவியா?''- கொதிக்கும் தமிழ் மக்கள்!

இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முரளிதரன்
முரளிதரன்

இலங்கையில் நடந்த தேர்தலில் அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். `சிங்கள மக்களின் ஆதரவு எனக்கு முழுமையாகக் கிடைத்தது. சிறுபான்மையினரிடம் ஆதரவு கேட்டேன். ஆனால், அவர்கள் எனக்கு ஆதரவு தரவில்லை. எனினும், நான் அனைவருக்குமான ஆட்சியாளராக இருப்பேன்' என்று வெற்றிக்குப் பிறகு கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். முக்கியமாக தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய நிலையும் கோத்தபய ராஜபக்சேவுக்கு இருக்கிறது.

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

இலங்கை தமிழர்கள், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் என்று இரு பிரிவாக அங்கே தமிழர்கள் வசிக்கின்றனர். இலங்கையில் கண்டியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் இந்தியத் தமிழர் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முரளிதரனின் முன்னோர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக இலங்கை சென்று குடியேறியவர்கள். இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண கவர்னர் பதவியை முரளிதரனுக்கு வழங்க ராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், `ராஜபக்சே தரும் கவர்னர் பதவியை முரளிதரன் ஏற்க கூடாது' என்று தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

`அசுரன் படத்தின் வெற்றி மிக முக்கியமானது.. ஏனென்றால்..!’- காரணம் பகிரும் பா.இரஞ்சித்

இது குறித்து கண்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கூறுகையில், `` இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று மறுப்பவர் முரளிதரன். இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூற இவர் யார்? முரளிதரனும் ஒரு தமிழர்தானே. ராஜபக்சே சகோதரர்களுக்கு நற்சான்று தர இவர் யார்? ராஜபக்சே சகோதரர்களால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 சதவிகித தமிழ் மக்கள் ராஜபக்சேவுக்கு வாக்களிக்கவில்லை. கவர்னர் பதவியை ஏற்றால் தமிழர்கள் முரளிதரனை வெறுப்பார்கள் '' என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணம்
இலங்கையின் வடக்கு மாகாணம்

கோத்தபயவுக்கு நெருக்கமானவர்கள் , ``முரளிதரனுக்கு ஏதாவது பதிலுக்கு செய்ய கோத்தபய விரும்புகிறார். அதனால், ஏதாவது மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம். வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது'' என்கின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ``இந்தச் செய்தி ஏற்கெனவே எங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால், வடக்கு மாகாணத்தில் எதிர்ப்பு இருப்பதால் அங்கே கவர்னராக நியமிக்கப்படும் வாய்ப்பு குறைவு'' என்று கூறுகிறார்.

இலங்கையின் வடக்கு மாகாணம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கியது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறா, திரிகோணமலை மாவட்டங்கள் உள்ளன. இந்த இரு மாகாணங்களிலும் இலங்கைத் தமிழர்கள் அதிளவில் வசிக்கின்றனர்.