Published:Updated:

`தனியார் வீடு.. 8 லட்சமாக உயர்ந்த சம்பளம்?'- சர்ச்சையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

`எனக்கு முன்னால் இருந்த பிரதமர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செலவழிக்கும் தொகையைவிட பத்து மடங்கு குறைவாகத்தான் நான் செலவழிக்கிறேன்' என்று இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

உலகின் பல நாடுகளிலும் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சம்பளம் அந்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில், பாகிஸ்தானில் தொழிலதிபர்களுடன் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இம்ரான் கான், ``பிரதமர் மாளிகையின் செலவுகளை நாங்கள் 40 சதவிகிதம் குறைத்துள்ளோம். தனியார் வீடு ஒன்றில் நான் வசிக்கிறேன். எனது வருமானத்திலிருந்தே தேவையான செலவுகளைக் கவனித்துக்கொள்கிறேன். இவை அனைத்தையும் கவனித்துக்கொள்ள எனக்கு வழங்கப்பட்டும் அதிகாரபூர்வமான சம்பளம் போதுமானதாக இல்லை" என்று கூறியிருந்தார்.

இம்ரானுடன் முராத் சயீத்
இம்ரானுடன் முராத் சயீத்

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் பிரதமரின் மொத்தச் சம்பளம் 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பிரதமரின் செய்தித்தொடர்பாளர் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``அரசின் செலவினங்களைக் குறைப்பதற்காகத் தனது சொந்தச் செலவுகளைப் பார்த்துக்கொள்வது தொடர்பாக பிரதமர் பிரசாரம் ஒன்றை மேற்கொள்ளும் நேரத்தில் இதுமாதிரியான ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவது துரதிஷ்டவசமானது. மக்களின் கடின உழைப்பிலிருந்து வரும் பணத்திலேயே அரசின் செலவுகள் நடத்தப்படுகின்றன. குறைந்த அளவில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றே முயற்சி செய்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

`தவறுகளை மீண்டும் செய்யப் போவதில்லை!’ -அமெரிக்கா, இரான் விவகாரத்தில் இம்ரான் கான்

இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தபால் சேவைத்துறை அமைச்சர் முராத் சயீத், ``இம்ரான் கான் பிரதமராக இருந்தபோதிலும் அவர் தனியார் இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டுக்குச் செல்லும் சாலைகளைச் சீரமைக்க தனது சொந்தப் பணத்தைச் செலவிடுகிறார்" என்று கூறியிருந்தார். மேலும், இந்தக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் தன்னுடைய செலவு குறித்துப் பேசுகையில், ``எனக்கு முன்னால் இருந்த பிரதமர்கள் வெளிநாட்டுப் பயணத்திற்குச் செலவழிக்கும் தொகையைவிட பத்து மடங்கு குறைவாகத்தான் நான் செலவழிக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு இவ்வாறு அவர் பேசினார். அதில், மிகவும் மலிவான தொகையைச் செலவழித்துச் சென்று வந்ததாகவும் இந்தப் பயணத்துக்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் இக்ரம் சேகல் மற்றும் இம்ரான் சௌத்ரி ஆகியோர் நிதியுதவி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பிரதமரின் சம்பளம் தொடர்பான சர்ச்சைகள் எழுவது இது முதல்முறை அல்ல. மத்திய மற்றும் மாநில அமைச்சர்களைவிட பிரதமர் குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார் என்று கடந்த ஆண்டும் இதுதொடர்பான சர்ச்சைகள் எழுந்தது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு வழங்கப்பட்ட சம்பளச்சீட்டின் படி, மொத்தச் சம்பளமாக ரூ.2,01,574 வழங்கப்படுகிறது. இதில், வருமான வரி மற்றும் இதரக் கழிவுகளுக்குப் பிறகு ரூ.1,96,979 பெறுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகப் பொருளாதார மாநாட்டில் இம்ரான் கான், ``வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நாங்கள் கடந்து வந்துள்ளோம். மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். அரசால் எடுக்கப்பட்ட சில பொருளாதார முடிவுகளால் இப்போது சீரான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க உள்ளோம்" என்று பேசியதும் கவனிக்கத்தக்கது.

இம்ரான் கானுக்கு வழங்கிய தனது விமானத்தை சவுதி இளவரசர் பிடுங்கினாரா?
அடுத்த கட்டுரைக்கு