Published:Updated:

பிரதமர் பதவிக்கு ஆபத்து? - இம்ரான்கானை அதிர வைத்த இஸ்லாமாபாத் பேரணி

பாகிஸ்தானில் நடைபெறும் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என வலியுறுத்திப் பல ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் போராட்டம்
பாகிஸ்தான் போராட்டம் ( AP )

பாகிஸ்தானின் தெஹ்ரீக் - இ - இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் கடந்த வருடம் அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றதில் இருந்து தற்போதுவரை நிதி நெருக்கடி, உலக நாடுகளின் எதிர்ப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

பாகிஸ்தான் போராட்டம்
பாகிஸ்தான் போராட்டம்
AP

இதற்கிடையில், இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஜாமியத் உலேமா- இ - இஸ்லாம் என்ற கட்சியின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் கடந்த சில மாதங்களாக இம்ரானுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார். இம்ரான்கான் ஆட்சியில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் சீர்கெட்டுள்ளது. அவரின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தில்லுமுல்லு செய்து இம்ரான் வெற்றி பெற்றுவிட்டார் என்பதுதான் மவுலானாவின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில், இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று கடந்த மாதம் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ஒரு சிறிய பேரணியைத் தொடங்கினார் மவுலானா. அந்தப் பேரணி பல மாகாணங்களைக் கடந்து நேற்று இஸ்லாமாபாத்துக்கு வந்து சேர்ந்தது. நூற்றுக்கணக்கானவர்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பேரணி, இஸ்லாமாபாத்துக்கு வந்தபோது பல ஆயிரக்கணக்கானவர்களின் ஆதரவைப் பெற்றது. நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த பிரமாண்ட பேரணியில் மவுலானாவுடன் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான்
மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான்
AP

இதில் பேசிய மவுலானா, ``கடந்த வருடம் வந்த தேர்தல் முடிவுகள் போலியானவை. அப்போது வந்த முடிவையும், அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு நாங்கள் ஒரு வருடம் கால அவகாசம் அளித்தோம், ஆனாலும் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்... இம்ரான் கானை லெஃப்டில் அடிக்கும் ராணுவத் தளபதி!

இம்ரானுக்கு இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கிறோம் அதற்குள் அவரே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்தப் பேரணி அமைதியான முறையில் நடைபெறுகிறது, எங்கள் பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள். பிரதமர் ராஜினாமா செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இம்ரான்கான்
இம்ரான்கான்
AP

இதையடுத்து பல்திஸ்தான் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இம்ரான்கான், ``இஸ்லாமை பயன்படுத்தி ஒருவர் அதிகாரத்தைப் பெற்ற நாள்கள் போய்விட்டன. இது புதிய பாகிஸ்தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போராடுங்கள், போராட்டக் களத்தில் உங்களின் உணவு தீர்ந்துவிட்டால் நாங்கள் இன்னும் நிறைய அனுப்புகிறோம். ஆனால், ஒரு நாளும் உங்களுடன் சமாதானமாகப் போக மாட்டோம். உங்களுக்கு யாரிடம் இருந்து விடுதலை வேண்டும் எதற்காகப் போராடுகிறீர்கள். உங்களின் போராட்டத்தைப் பார்த்து நம் எதிரிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பதிலுக்கு மவுலானாவை தாக்கிப் பேசியுள்ளார் இம்ரான். தொடர் போராட்டத்தினால் இம்ரான்கான் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.