Published:Updated:

இலங்கை : ராமாயணத்திலிருந்து அணையாத நெருப்பு; யார் பொறுப்பு! என்னதான் தீர்வு? |Long Read

இலங்கை

அவர்களுடைய உடமைகளும் எரிக்கப்பட்டன. எல்லாமே தவறான அரசியலின் விளைவுகள். இந்தத் தவறான அரசியலை இலங்கை எப்படி, எப்போது சீர்செய்யப்போகிறது.

இலங்கை : ராமாயணத்திலிருந்து அணையாத நெருப்பு; யார் பொறுப்பு! என்னதான் தீர்வு? |Long Read

அவர்களுடைய உடமைகளும் எரிக்கப்பட்டன. எல்லாமே தவறான அரசியலின் விளைவுகள். இந்தத் தவறான அரசியலை இலங்கை எப்படி, எப்போது சீர்செய்யப்போகிறது.

Published:Updated:
இலங்கை
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனப் போராடிய லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி அங்கே நிலை கொண்டுள்ளனர். ஜனாதிபதியோ எங்கோ தலைமறைவாகியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்குமே தெரியாத புதிரின் – மர்மத்தின் - மேல் இலங்கை இருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செயலிழந்த படை அதிகாரம்!

இவ்வளவுக்கும் ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியுமாவார். ஆனால், ஜனாதிபதி மாளிகையை நோக்கி, மக்கள் படையாகத் திரண்டு வரும்போது அவரால் அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. படையினருக்குக் கட்டளையிடவும் முடியவில்லை. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது படைச்செயலராக கட்டளைகளைப் பிறப்பித்துப் போரில் வெற்றியடைந்தவர் கோத்தபய. இங்கேயோ அது செல்லுபடியற்றதாகி விட்டது. மக்கள் திரண்டு வரும்போது படைகள் செயலிழந்து போயின. சில படையினர் மக்களோடு தாமும் இணைந்து கொண்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி நடந்தனர். ஒரே நாளில் – ஆறு மணி நேரத்தில் - அதிகார மாற்றம் அதிசயமாக நிகழ்ந்துள்ளது.

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே

இலங்கையில் ஜனாதிபதிக்கான அதிகாரம் மிக உச்சம். இலகுவில் வீழ்த்த முடியாதது. அதனால்தான் பாராளுமன்றச் சூளுரைகளால், மாபெரும் கட்சிகளால், மூத்த அரசியல் தலைவர்களால், சட்ட மேதைகளால், அரசியல் நிபுணர்களால் தோற்கடிக்க முடியாத நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை மக்கள் வீழ்த்தியது முக்கியமடைந்திருக்கிறது.

கொடுத்ததைத் திருப்பி எடுத்த மக்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 64 வீத (அதிகமும் சிங்கள) மக்களுடைய வாக்குகளைப் பெற்றுப் பதவியேற்றவர் கோத்தபய. தானொரு ‘நவீன துட்டகெமுனு’ என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பதவியேற்பை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அனுராதபுர நகரில் செய்தார். இலங்கையின் வரலாற்றில் – சிங்கள மக்களிடையே - துட்டகெமுனு மன்னனுக்குப் பெரிய மதிப்புண்டு. இதே அனுராதபுரத்தில் தமிழ் மன்னனாகிய எல்லாளனைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியவர் கெமுனு. அதை நினைவுபடுத்தும் விதமாகவே கோத்தபய அவ்வாறு பதவியேற்றார். இதை அப்பொழுது சிங்கள மக்களும் பெருமிதத்தோடு ஏற்றுக் கொண்டனர்.

மகிந்தா ராஜபக்‌சே  - கோத்தபய ராஜபக்‌சே
மகிந்தா ராஜபக்‌சே - கோத்தபய ராஜபக்‌சே

சிங்கள மக்களின் இந்த அங்கீகாரத்தையும் ஆதரவையும் தமக்கான அதிகார பலமாக எடுத்துக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தினர், முற்றுமுழுதாகவே சிங்கள மக்களை மையப்படுத்திய அரசியலில் இறங்கினர். குடும்ப ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு, பொருளாதாரத்தில் கைவைத்தனர். இதன் விளைவாக நாடு இரண்டு ஆண்டினுள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. மக்கள் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையையே நடத்த முடியாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி வலுத்தது. எதற்கும் தெருவிலே நீண்ட க்யூவில் காத்து நிற்க வேண்டும். அப்படி நின்றாலும் எதுவும் சீராகக் கிடைக்காது. பதிலாக மரணங்களும் துயரங்களுமே கிடைக்கும் என்ற நிலை வலுத்தது. இதற்குத் தீர்வு காணாமல் அரசாங்கம் பொருத்தமற்ற வேறு நடவடிக்கைகளில் – கட்டுப்பாடுகளிலும் தடைகளிலும் - ஈடுபட்டது. இது ராஜபக்சக்களின்மீது மக்களுக்கு எல்லை மீறிய கோபத்தை உண்டாக்கியது.

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்
Eranga Jayawardena

இதனால் நேரடி அரசியல் சாராத இளைய தலைமுறை 'Go Home Gota' என்று கோத்தபயவை வீட்டுக்குப் போகுமாறு கோரிப் போராட்டத்தை ஆரம்பித்தது. மக்கள் இந்தப் போராட்டத்துக்குப் பேராதரவை வழங்கினார்கள். கொழும்பு நகரில் பிரதமருடைய அலரி மாளிகைக்கு முன்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், மே 09-ம் தேதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து விரட்டியது. ஆனாலும் தோற்றுப் போன ஜனாதிபதியாக, தான் பதவி விலகப்போவதில்லை என்ற கோத்தபய, எது வந்தாலும் அசையப்போவதில்லை என்று இதை எதிர்த்தே நின்றார். அந்த நவீன கெமுனுவே இன்று ஆட்சி நடத்த முடியாமல் தோற்று ஓடியிருக்கிறார்.

எந்தத் தலைவரும் இலகுவாகப் பதவியை இழக்க விரும்புவதில்லை. இறுதியில் மதிப்பிழந்து மடிவர், அல்லது தோற்று ஓடுவர் என்ற வரலாற்று அனுபவத்தையே இது மெய்ப்பித்திருக்கிறது. மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. மக்களுடைய எழுச்சியின் முன்னே நிறைவேற்று அதிகாரமெல்லாம் தூசு என்பதை நிரூபித்திருக்கிறது இந்த வரலாற்றுச் சம்பவம்.

பதவி மாற்றமும் ஆட்சி மாற்றமும் தீர்வைத் தருமா?

தலைமறைவாகியிருக்கும் ஜனாதிபதி 13.07.2022 அன்று பதவி விலகுவார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி மட்டுமல்ல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர் கேட்டுள்ளனர். இருவரும் பதவி விலகினால் நாட்டிலே அதிகார வெற்றிடம் ஏற்படும். அது இலங்கை இப்பொழுது சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடிகளில் மேலும் சிக்கல்களையே ஏற்படுத்தும். (இவர்கள் இருந்தாலும் எதுவும் தீரப்போவதில்லை) இதைத் தீர்க்க வேண்டுமென்றால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதற்குப் புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவது அவசியம். 'அந்த அரசாங்கம் எப்படியானது, அதற்குப் பொருத்தமானவர்கள் யார்' என்ற கேள்விகள் எழுகின்றன. இதெல்லாம் இப்போதுள்ள சூழலில் அவ்வளவு இலகுவானதுமல்ல.

ரணில் விக்கிரமசிங்க
ரணில் விக்கிரமசிங்க

இலங்கை அரசியலமைப்பின் 40-வது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி ஜனாதிபதி பதவி விலகினால், பிரதமரே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க வேண்டும். இங்கே பிரதமருக்கும் சிக்கல் இருப்பதால் அடுத்த நிலையில் உள்ள சபாநாயகரே பொறுப்பு வகிக்க முடியும். இதுவும் ஒரு தற்காலிக ஏற்பாடே. விதியின்படி அடுத்த ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட்டு பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாகப் பொறுப்பு வகிக்க வேண்டும். அதுவும் இலகுவானதல்ல.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் அரசியல் பாரம்பரியமானது, தேசியப் பிரச்சினை எதற்கும் இணைந்து தீர்வைக் காண்பதாகவோ, தேவையான வேளைகளில் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுச் செயல்படுவதாகவோ இல்லை. ஆகவே இதிலும் கடுமையான போட்டிகளும் இழுபறிகளுமே நிகழும். அப்படி ஏதாவது அதிசயம் நடந்தாலும் இன்றைய இலங்கைக்குப் பொருத்தமான ஆளுமை இல்லை. இருக்கின்ற அனுரகுமார திஸநாயக்க போன்றவர்களை சர்வதேசமும் உள்நாட்டுச் சூழலும் அனுமதிக்குமா என்ற கேள்வியுண்டு.

தீர்வுக்கான பாதை!

இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் அவசரமாகக் கூடிப் பேசியிருக்கின்றன. இதன்போது அனைத்துத் தரப்பும் பங்கேற்கக்கூடிய ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதிலும் சிக்கல்கள் உண்டு. சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கக் கூடிய உத்தரவாதம் இருந்தால் மட்டுமே இந்தத் தேசிய அரசாங்கத்தைக் குறித்துச் சிந்திக்க முடியும் என்று தெரிவித்துள்ளன. அவற்றின் ஆதரவின்றித் தேசிய அரசாங்கத்தை அமைப்பது கடினம்.

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

ஏனென்றால் ராஜபக்சக்களின் செல்வாக்குக்கு உட்பட்ட ‘பொதுஜன பெரமுன’ கட்சியே இன்னும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது. அவர்கள் எத்தகைய முடிவை எடுப்பர் என்று சொல்ல முடியாது. எவ்வளவு தூரம் மக்கள் எதிர்ப்பு இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவர்களாக அவர்களில்லை. அப்படி இருந்திருந்தால் மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரெல்லாம் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்திருப்பார்கள். ஆகவே இந்த மோசமானவர்களை வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்றால் சிறுபான்மைத்தரப்பின் ஆதரவு தேவை.

பொதுஜன பெரமுன கட்சி
பொதுஜன பெரமுன கட்சி

ஆக எப்படியிருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சரவை, புதிய அரசாங்கம் என்ற ஒரு தொடர் நிகழ்ச்சித்திட்டம் நிகழவுள்ளது. இப்பொழுதுள்ள அமைச்சரவையிலிருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இது மேலும் அதிகரிக்கக் கூடும். ஆனால் இதெல்லாம் எந்தளவுக்கு நாட்டின் நெருக்கடி நிலையைத் தீர்க்க உதவும் என்பது கேள்வியே.

இலங்கை இப்போது சந்தித்துவரும் நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டுமானால், அரசு உருவாக்கிய நெருக்கடிகளுக்கு அது தீர்வு காண வேண்டும்.

சர்வதேசத்தின் நிலைப்பாடு!

இலங்கையின் தற்போதைய நிலவரத்தை அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய கூடுதலான அக்கறையைக் கொண்டிருப்பதாக இந்திய உயரதிகார மட்டங்களிலிருந்து தெரியவந்துள்ளது. மாற்றங்கள் வேண்டும். அவை அமைதியான முறையில் இருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக ஜனநாயக மேம்பாடு அவசியம். மக்களுடைய அடிப்படை உரிமைகள் தொடக்கம் அவர்கள் முன்னிறுத்தியிருக்கும் பிரச்னைகள் - காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சிறைப்படுத்தப்பட்ட அரசியலாளர்களின் விடுதலை, போராடும் சுதந்திரம் எனப் பலவாக அது இருக்க வேண்டும்.

இலங்கை
இலங்கை
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது ஆட்சியாளர்களின் தவறுகளால் நேர்ந்த பிரச்னைகள். அதற்கெதிரான போராட்டங்கள். இதற்குப் பின்னணியாக – இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பிராந்திய, சர்வதேச சக்திகளும் இலங்கையில் தங்களுடைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா இதில் முதல்நிலைப் பாத்திரத்தை வகிக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிப்போரால் புரிந்துகொள்ள முடியும். இது ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்பதன் வழியாக நாட்டின் இறைமை, தனித்தன்மையையும் பாதிக்கக் கூடியது. இதைப் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய அரசியல் தலைமை – ஆளுமை இலங்கையில் இப்போது இல்லை. எனவே இன்று ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களோ, ஆட்சியாளர்களின் பதவி விலகல்களோ ஆட்சி மாற்றமோ எந்தப் பெரிய நன்மைகளையும் தந்து விடப் போவதில்லை. இதற்கும் இலங்கையில் ஒரு பாரம்பரியம் உண்டு.

மாற்றம் போலொரு தோற்றம்!

ஏற்கெனவே பல வெற்றிகரமான போராட்டங்கள் இலங்கையில் நடந்ததுண்டு. 'இதோ மாற்றம் நிகழ்கிறது' என்ற தோற்றம் ஏற்பட்டதுமுண்டு. 1971-ல் ஜே.வி.பி கிளர்ச்சி, பின்னர் விடுதலைப்புலிகளின் எழுச்சி, அதில் ஆனையிறவு படைத்தளம், கட்டுநாயக்க விமானப்படைத்தளம் ஆகியவற்றின் வெற்றி, இந்திய அமைதிப்படையின் வருகை, ஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவைக் கட்டிய சந்திரிகா குமாரதுங்கவின் வெற்றி எனப் பல வெற்றித் தோற்றங்கள்.

ஜே.வி.பி கிளர்ச்சி
ஜே.வி.பி கிளர்ச்சி

இவை எல்லாம் வெறும் தோற்றமாக அமைந்தனவே தவிர, மக்களுடைய பிரச்னைகள் தீரக் கூடிய அளவுக்கு மாற்றங்களாக – நிரந்தர வெற்றிகளாக அமையவில்லை. ஆனால், அவ்வப்போது பேரெழுச்சியாகவும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியவையாகவும் இருந்தன. இப்போதைய எழுச்சி – இந்த மக்கள் போராட்டத்தின் வெற்றியும் அப்படிச் சுருங்கிக் காணாமற் போய் விடுமா என்ற கேள்வி எழுகிறது.

மக்களுக்கான வெற்றி என்பது...

'அப்படியென்றால் இலங்கையில் எத்தகைய வெற்றி சாத்தியம், அது எப்படி அமைய வேண்டும்' என்ற கேள்விகள் எழுகின்றன. முதலில் இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற மனவோட்டத்திலிருந்து சிங்கள மக்கள் விடுபட வேண்டும். பதிலாக பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற அடிப்படையில் பன்மைத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும். அது பேணப்பட வேண்டும். மேலும் தொடரும் இனப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்னை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சிறைப்படுத்தப்பட்டிக்கும் விடுதலை, படைக்குறைப்பு, வினைத்திறனும் பாரபட்சமுமில்லாத ஆட்சி, ஊழல் மோசடியைக் கட்டுப்படுத்தல், ஜனநாயக மேம்பாடு, நடந்தவற்றுக்கான பொறுப்புக் கூறுதல் எனப் பலவற்றில் மாற்றங்கள் அவசியம். இவை நிகழ்ந்தால் முதலாவது வெற்றி ஏற்படும்.

இலங்கை
இலங்கை

சர்வதேச சமூகம் இன்று மறைமுகமாக விதித்திருக்கும் அல்லது கட்டுப்படுத்தியிருக்கும் பொருளாதாரத் தடைகள் எல்லாற்றிலும் ஒரு மெல்லிய தளர்வு ஏற்படும். அது அடுத்த கட்டத்தில் முன்னேற்றமாகப் பரிணமிக்கும். அதற்கு அனைவரும் விரும்பக்கூடிய நெகிழ்ச்சிமிக்க – புதுமையும் விரிவுமுள்ள ஆட்சி அவசியம். அதற்கான அரசியலமைப்பு வேண்டும். அதைச் செய்ய வேண்டும். அதொன்றும் பெரிய விடயமே இல்லை. இதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்துகிறது. அது இவ்வளவு காலமும் விட்டுப்பிடித்தது. அதை ஏமாற்றி விடலாம் என்று இலங்கையர்கள் எண்ணினர். ஆனால் இதற்கு மேலும் தம்மை ஏய்க்க முடியாது என்பதை இன்று வெளியுலகம் உணர்த்தியிருக்கிறது.

இனியும் இவற்றைச் செய்யாமல் இந்த நெருக்கடியிலிருந்து இலங்கை மீளவே முடியாது. ராஜபக்சக்களை வீழ்த்தி மைத்ரிபால சிறிசேனாவை அமர்த்திய கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்புத் திருத்தம், பகை மறப்பு, நல்லிணக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இருந்தன. ஒப்பீட்டளவில் அந்த ஆட்சியில் தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையகத் தரப்புகளின் பங்கேற்பு அல்லது முழுமையான ஆதரவு இருந்தது. ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை.

இலங்கை
இலங்கை
ட்விட்டர்

அந்தப் பலவீனங்களின் வழியே - ஏமாற்றுகளின் வழியே - தவறுகளின் வழியேதான் இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். இதில் அதிக தவறும் பொறுப்பும் மக்களுக்கே உண்டு. தேர்தல் ஒன்று வந்து விட்டால் பழையபடி இந்த இனவாத – மக்கள் விரோதக் கட்சிகளுக்கே வாக்களிப்பர்.

இப்பொழுது செய்ய வேண்டியது, போராட்டத்தை முன்னெடுப்போர் வலியுறுத்துவதைப்போல அடிப்படை மாற்றமே (system Change). அது நிகழாமல் எதுவுமே சாத்தியமில்லை. ஆனால் அதற்கு அவகாசம் வேண்டும்.

மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது

மக்களுடைய பிரச்னைகளையும் அவர்களுடைய உணர்வுகளையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவே இவ்வளவு நெருக்கடிகளுமாகும். கடந்த மே 09-ல் ஏற்பட்ட எதிர்ப்பலையோடு ராஜபக்சக்கள் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. அதிகார ஆசை இலகுவில் எதையும் இழக்க விரும்பாது.

ராஜபக்சே
ராஜபக்சே

கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் பலவிதமான அரசியற் குழப்பங்களை இலங்கை சந்தித்துள்ளது. 2018-ல் இருந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச சதி செய்தார். அப்போதிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விரட்டி விட்டு அரசியமைப்புக்கு மாறாக பதவியைக் கைப்பற்றினார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மகிந்த ராஜபக்ச பதவியை இழக்க நேரிட்டது. இருந்தாலும் அந்த ஆட்சி தொடர ராஜபக்சவினர் விடவில்லை. ஆட்சிக்காலத்துக்கு முன்பாகவே அரசாங்கம் கலைக்கப்பட்டு 2020-ல் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றியடைந்த ராஜபக்சவினர், ஆட்சிக்கு வந்து தவறிழைத்தனர். மக்கள் விரட்டியடித்து இப்பொழுது புதிய ஆட்சிக்கான வழியைத் திறந்திருக்கிறார்கள்.

இலங்கை கலவரம்
இலங்கை கலவரம்

ராமாயண காலத்திலிருந்து இலங்கை எரிகிறது. அண்மையில் (09.07.2022) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் எரிக்கப்பட்டுள்ளது. சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலருடைய வீடுகளும் சொத்துகளும் எரிக்கப்பட்டன. அதற்கு முன்பு தமிழ் மக்களுடைய வீடுகள், கடைகள், நகரங்கள் எரிக்கப்பட்டன. 1981-ல் யாழ்ப்பாண நூலகம் உட்பட யாழ்ப்பாண நகரமே எரியூட்டப்பட்டது.

1983-ல் கொழும்பில் தமிழர்கள் எரிக்கப்பட்டனர். அவர்களுடைய உடமைகளும் எரிக்கப்பட்டன. எல்லாமே தவறான அரசியலின் விளைவுகள். இந்தத் தவறான அரசியலை இலங்கை எப்படி, எப்போது சீர்செய்யப்போகிறது. அதைச் செய்யப் போகிற அந்த மகா கனவான் - மகா மேதை யார்?

- கருணாகரன்