Published:Updated:

காபூல்: தொடர் குண்டு வெடிப்பு; பெண்களைத் தாக்கும் `ஐஎஸ்ஐஎஸ் - கே' - தாலிபன்களோடு கூட்டணியா?

காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு
காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு

காபூல் விமான நிலையத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கீழ், ஆப்கன் பிரிவாகச் செயல்பட்டுவரும் ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கும் தாலிபன்களுக்கும் என்ன தொடர்பு?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முடிவுறாத போர், வன்முறை எனப் பல ஆண்டக்காலமாகக் கலவர பூமியாகவே இருந்துவருகிறது ஆப்கானிஸ்தான். கடந்த 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது ஆப்கன் உள்நாட்டுப் போர். இந்தநிலையில் ஆப்கனைக் கைப்பற்றிய தாலிபன்கள் ``ஆப்கன் போர் முடிந்துவிட்டது; இனி அமைதியான ஆட்சியைத் தருவோம்'' என்றார்கள். ஆனால், இன்றுவரையிலுமே ஆப்கனில் அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருக்கிறது.

நேற்று இரவு ஆப்கன் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இது தற்கொலைப் படைத் தாக்குதல் என்று தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் உயிரிழந்ததாக ஆப்கன் சுகாதாரத்துறை அறிவித்தது. தங்கள் நாட்டு மக்களை மீட்க வந்த அமெரிக்கப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்தது. உயிரிழந்த 60 ஆப்கன் மக்களில் சுமார் 28 பேர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றது தாலிபன்.

காபூல் விமான நிலைய தாக்குதல்
காபூல் விமான நிலைய தாக்குதல்
வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!

இப்படியாகத் தகவல் வந்துகொண்டிருக்க, காபூலில் மேலும் மூன்று இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஏற்கெனவே, `காபூல் விமான நிலையத்தில் தாக்குதல்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும்' என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்தநிலையில்தான் காபூல் விமான நிலையப் பகுதியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தத் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

தாலிபன்கள் நிகழ்த்திய தாக்குதல்?

`ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம். நாங்கள் அமைதியான ஆட்சியைத்தான் வழங்குவோம்' எனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தது தாலிபன் அமைப்பு. ஆனால், ஆப்கன் மக்கள் பலரும் `எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்' என்ற முடிவில் காபூல் விமான நிலையத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர். இதன் காரணமாகத் தாக்குதல் நடந்தவுடனேயே, ``ஆப்கன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கு, தாலிபன்கள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்தான் இது. இனி மக்கள் காபூல் விமான நிலையத்தை நெருங்கவே தயங்குவார்கள் என்ற தாலிபன்களின் எண்ணமே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது'' என்றெல்லாம் செய்திகள் சமூக வலைதளங்களில் சுற்றிவந்தன.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஐ.எஸ்.ஐ.எஸ் - கே பொறுப்பு!

இந்தநிலையில், காபூலில் நிகழ்ந்த தொடர் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கீழ், ஆப்கன் பிரிவாகச் செயல்பட்டுவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் - கே பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம், பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இயங்கிவரும் ஜிஹாதிகளிடமிருந்து தங்கள் இயக்கத்துக்கான ஆட்களைச் சேர்த்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தாலிபன்கள் படையிலிருந்து விலகி வருபவர்களையும் இந்த இயக்கம் சேர்த்துக்கொள்வதாகத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொடூர இயக்கம்?

பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கத்தின் முக்கிய வேலை எனச் சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பள்ளியில் பயிலும் மாணவிகளையும், மருத்துவமனைகளில் வேலை செய்யும் பெண் செவிலியர்களையும் குறிவைத்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறது இந்த இயக்கம்.

`பெண்கள் வெளியில் வரவே கூடாது' என்கிற நோக்கத்தில் இந்தத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம் செய்துவருவதாகத் தெரிகிறது.
Taliban fighters in Kabul
Taliban fighters in Kabul
AP Photo/Rahmat Gul

ஐ.எஸ்.ஐ.எஸ் - கே - தாலிபன் தொடர்பு!

தாலிபன்களின் கீழ் இயங்கும் ஹக்கானி பிரிவோடு ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கத்துக்கு நல்ல தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தாலிபன்களின் ஹக்கானி நெட்வொர்க், ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம், பாகிஸ்தானில் இயங்கும் பிற அமைப்புகள் இணைந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிகிறது.

அதேநேரத்தில், சில காலமாக ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம் தாலிபன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. சில காலத்துக்கு முன்பாக, ``மேற்கத்திய நாடுகளுடன் ஆடம்பர ஹோட்டல்களில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் தாலிபன்கள். ஜிஹாத்தையும், போர்க்களத்தையும் மறந்துவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் தாலிபன்கள் ஈடுபடுவது மிக மிகத் தவறானது'' என்று ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இது குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், ``ஏற்கெனவே அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் ஈடுபடுவதை ஐ.எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், தாலிபன்கள் தலைமையிலான ஆட்சியில், `பெண்கள் சுகாதாரத்துறையில் வேலை செய்யலாம்; பத்திரிகையாளர்கள் செயல்படலாம்; பெண்கள் படிக்கலாம். நாங்கள் மாறிவிட்டோம்' என்றெல்லாம் பேசியது தீவிரவாத இயக்கங்களைச் சூடேற்றியிருக்கும். அதனால்தான் இது போன்ற தாக்குதல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இனிதான் தாலிபன்களுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன'' என்கிறார்கள்.

யார் காரணம்?

இந்தத் தாக்குதல்கள் நடந்ததற்குக் காரணமாக ஒரு தரப்பினர் தாலிபன்களையும், இன்னொரு தரப்பினர் அமெரிக்காவையும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

ஆகஸ்ட் 15-ம் தேதியன்று தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றிய பிறகு, அங்கிருக்கும் சிறைகளிலிருந்த ஐ.எஸ் அமைப்பு, அல்-கொய்தா அமைப்பிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ததாகச் செய்திகள் வந்தன. தாலிபன்கள் செய்த இந்த வேலையால் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக ஆப்கன் மண்ணில் சுற்றித் திரிந்ததாகத் தெரிகிறது. இதனால்தான் காபூல் விமான நிலையத் தாக்குதல்களை எளிதாக ஐ.எஸ்.ஐ.எஸ் - கே செய்து முடித்திருப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
`உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?

இன்னொரு தரப்பினர், ``காபூல் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டைத் தங்களது கைகளுக்குள் வைத்திருக்கின்றன அமெரிக்கப் படைகள். அதேபோல காபூல் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் வெளிப்புறப் பகுதியின் கட்டுப்பாட்டை தாலிபன்கள் வசம் ஒப்படைத்திருக்கிறது அமெரிக்கா. அந்தப் பகுதிகளையும் அமெரிக்காவே தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும். அமெரிக்கா தாலிபன்களை நம்பியதால் நடந்த தாக்குதல்கள்தான் இவை'' என்று குற்றம்சுமத்துகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ``தாலிபன்கள்மீது நம்பிக்கையெல்லாம் வைக்கவில்லை. அதேநேரத்தில் இந்தத் தாக்குதலை நிகழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவுக்கும், தாலிபன்களுக்கும் இடையே, இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக எந்தவொரு கூட்டுமில்லை என்றே களத்திலிருக்கும் அமெரிக்க ராணுவப் படை சொல்கிறது. தாக்குதல்கள் நடைபெற்றிருந்தாலும், ஆப்கனிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் தொடரும். காபூலில் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் வேட்டையாடுவோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஜோ பைடன் |
ஜோ பைடன் |
Andrew Harnik
``தாக்குதலுக்கு யார் காரணம் என்பதைவைத்துச் சண்டையிட்டுக்கொள்ளாமல், இதற்கு மேல் இன்னொரு தாக்குதல் நடக்காமலிருக்க என்ன வழி என்பதை ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு