Published:Updated:

`முல்லா பராதர் டு சிராஜுதீன் ஹக்கானி வரை' - ஆப்கனை ஆளப்போகும் தாலிபன் தலைவர்களின் பின்னணி?!

தாலிபன் தலைவர்கள்
தாலிபன் தலைவர்கள் ( twitter images )

`ஆப்கனின் அடுத்த அதிபர் அப்துல் கானி பராதர்தான்' எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தாலிபன்கள் அமைப்பைத் தொடங்கிய நால்வரில் இவரும் ஒருவர். மறைந்த தாலிபன் தலைவர் முல்லா ஒமரின் சகோதரியைத்தான் முல்லா பராதர் மணந்திருக்கிறார். - தாலிபன் தலைவர்களின் பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கிறார்கள் தாலிபன்கள். `தாலிபன்களின் ஆட்சியிலிருந்து தப்பிடவிட வேண்டும்' என ஆப்கன் மக்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேற முயலும் சூழலில், சீனாவும் பாகிஸ்தானும் தாலிபன்கள் ஆட்சி அமையவிருப்பதை வரவேற்றிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் ஆப்கனை ஆட்சி செய்யவிருக்கும் தாலிபன்களின் முக்கியத் தலைவர்களைப் பற்றியும் அவர்களது பின்னணி பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்!

தாலிபன்
தாலிபன்
தாலிபன்கள் வசமான ஆப்கன்; தப்பியோடும் மக்கள்! கதறி அழும் பெண்கள்! - ஆப்கன் மக்களின் மனநிலை என்ன?!
மெளலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா (Mawlawi Hibatullah Akhunzada)

தாலிபன்களின் உச்சபட்ச தலைவர் ஹிபத்துல்லா. எந்தவொரு விஷயத்திலும் இறுதி முடிவுவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர். 2016-ம் ஆண்டு, அமெரிக்கர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார் அப்போதைய தாலிபன்கள் தலைவர் அக்தர் மன்சூர். அவர் உயிரிழப்பதற்கு முன்பாக எழுதிய உயிலில், ஹிபத்துல்லாவைத் தனது வாரிசாக அறிவித்திருந்ததாகத் தெரிகிறது. இதனால், மன்சூரின் மறைவுக்குப் பின்னர் தாலிபன்களின் தலைவரானார் ஹிபத்துல்லா.

இஸ்லாமிய அறிஞரான இவர், ஆப்கனின் கந்தஹார் பகுதியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக நம்பப்படும் ஹிபத்துல்லா, இஸ்லாமிய மதம் சார்ந்து பல்வேறு புத்தகங்களை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாலிபன் உருவாவதற்கு முன்பாகவே, ஹிபத்துல்லா பல்வேறு கிளர்ச்சிகளில் முக்கியப் பங்காற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஆப்கன் கிளர்ச்சியில் பங்குவகித்தவர் ஹிபத்துல்லா. போர் வீரனாக அறியப்படுவதைவிட, மத அறிஞராகவே அறியப்படுகிறார் இவர்.

மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா
மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா
`விசுவாசிகளின் தலைவர்' என தாலிபன்களால் புகழப்படும் ஹிபத்துல்லா, ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டும் வெளியில் தலைகாட்டுவாராம். சுமார் 60 வயதாகும் இவர், ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்துவருவதாகக் கூறப்படுகிறது.
முல்லா அப்துல் கானி பராதர் (Mullah Abdul Ghani Baradar)

`ஆப்கனின் அடுத்த அதிபர் அப்துல் கானி பராதர்தான்' எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆப்கனில் தாலிபன்கள் அமைப்பைத் தொடங்கிய நால்வரில் இவரும் ஒருவர். தாலிபன் அமைப்பின் நிறுவனர் முல்லா ஒமரின் கீழ் துணைத் தலைவராகச் செயலாற்றியவர் பராதர். 2018-ம் ஆண்டு, தாலிபன்களின் அரசியல்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் இவர்.

முல்லா பராதர் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் எனச் சொல்லப்படுகிறது. தாலிபன் அமைப்பைத் தோற்றுவித்த தலைவர் முல்லா ஒமரின் சகோதரியைத்தான் முல்லா பராதர் மணந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முல்லா அப்துல் கானி பராதர்
முல்லா அப்துல் கானி பராதர்
Twitter/@AbdulhaqOmeri

முல்லா ஒமர் உயிருடன் இருந்தபோது தாலிபன்களின் நிதித் திரட்டல், ராணுவ விவகாரங்களைக் கண்காணித்தவர் பராதர். ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மிகத் தீவிரமான தாக்குதல்களை பராதர் நிகழ்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முல்லா முகமது யாகூப் (Mullah Mohammad Yaqoob)

தாலிபன் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்தான் முல்லா முகமது யாகூப். தாலிபன் ராணுவப் படையின் தளபதியான இவர், பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்.

2016-ல் அக்தர் மன்சூர் மறைவுக்குப் பிறகு, முல்லா ஒமரின் மகன் என்ற முறையில் இவர்தான் தாலிபன்களின் தலைவராக்கப்படவிருந்ததாகவும், ஆனால், அப்போது மிகவும் சிறு வயதில் இருப்பதால் ஹிபத்துல்லாவை தலைவராக முல்லா யாகூப்பே முன்மொழிந்ததாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

முல்லா யாகூப்புக்கு 30-லிருந்து 35 வயதுக்குள்ளாக இருக்குமெனக் கூறப்படுகிறது. தற்போது தாலிபன்களின் துணைத் தலைவராகச் செயல்பட்டுவரும் இவர், பல்வேறு நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தே செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது.

சிராஜுதீன் ஹக்கானி
சிராஜுதீன் ஹக்கானி
twitter/@Soumyadipta
சிராஜுதீன் ஹக்கானி (Sirajuddin Haqqani)

முஜாஹிதீன் அமைப்பில் முக்கியத் தலைவராக இருந்த ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்தான் சிராஜுதீன் ஹக்கானி. தற்போது தாலிபன் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் இவர், ஹக்கானி பிரிவின் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். தாலிபன்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், ராணுவப் பொருள்களைப் பாதுகாப்பதற்குமான பிரிவுதான் ஹக்கானி.

2008-ம் ஆண்டு காபூலிலுள்ள ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு அமெரிக்கர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் சிராஜுதீன் ஹக்கானி முக்கியப் பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. இதனால் அமெரிக்கா இவரை வெகு காலமாகத் தேடிவந்தது.

2008-ம் ஆண்டில், ஆப்கன் அதிபராக இருந்த ஹமீது கர்சாயைக் கொல்ல தாலிபன்களால் திட்டமிடப்பட்டது. அந்தத் திட்டமிடலில் முக்கியப் பங்காற்றியவர் சிராஜுதீன் ஹக்கானி எனச் சொல்லப்படுகிறது. தற்போது இவருக்கு 47-லிருந்து 55 வயதுக்குள்ளாக இருக்குமெனத் தெரிகிறது.

முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Mohammad Abbas Stanikzai)

ஆப்கானிஸ்தானில், 2001-ம் ஆண்டுக்கு முன்பான தாலிபன் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் முகமது அப்பாஸ். 10 ஆண்டுகளுக்கு மேலாக கத்தாரின் தோஹாவில் வாழ்ந்துவந்த முகமது அப்பாஸ், 2015-ல் அங்கிருக்கும் தாலிபன் அலுவலகத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கன் அரசுடன் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருக்கிறார் இவர். பல்வேறு நாடுகளில் நடந்த கூட்டங்களுக்கு, தாலிபன்களின் பிரதிநிதியாகவும் சென்றிருக்கிறார்.

முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய்
முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய்
@SMMAfPak
அப்துல் ஹக்கிம் ஹக்கானி (Abdul Hakim Haqqani)

தாலிபன்கள் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் அப்துல் ஹக்கானி. இவர் தாலிபனின் நிழல் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். மத அறிஞர்களின் கவுன்சிலுக்கு தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். தற்போதைய தாலிபன் தலைவர் ஹிபத்துல்லாவின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் இவர்தான் எனவும் சொல்லப்படுகிறது.

மேற்கண்டவர்கள்தான் தாலிபன்களின் முக்கியத் தலைவர்கள். ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சி முறையாக அமைக்கப்படும்போதுதான் இவர்களில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்பது தெரியவரும்!
யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1

(தாலிபன் தலைவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளைவைத்து எழுதப்பட்டிருக்கின்றன.)

அடுத்த கட்டுரைக்கு