Published:Updated:

புதிய அமெரிக்காவை உருவாக்கினாரா ட்ரம்ப்..?! ஓர் உலகம், ஓர் அதிபர், ஒரேயொரு ட்ரம்ப் - 11

ட்ரம்ப்

ட்ரம்ப் தன் கொள்கைகளுக்கு நெருக்கமானவர்களை நீதித்துறை முழுவதும் நிரப்ப ஆரம்பித்தார். ஒரு நீதிபதி பதவி காலியானால் ட்ரம்ப் அதிகம் சிரமப்படுவதில்லை. பழைமைவாத வலதுசாரி இயக்கங்களிலிருந்து தனக்குத் தேவையான நபரை எளிமையாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்.

புதிய அமெரிக்காவை உருவாக்கினாரா ட்ரம்ப்..?! ஓர் உலகம், ஓர் அதிபர், ஒரேயொரு ட்ரம்ப் - 11

ட்ரம்ப் தன் கொள்கைகளுக்கு நெருக்கமானவர்களை நீதித்துறை முழுவதும் நிரப்ப ஆரம்பித்தார். ஒரு நீதிபதி பதவி காலியானால் ட்ரம்ப் அதிகம் சிரமப்படுவதில்லை. பழைமைவாத வலதுசாரி இயக்கங்களிலிருந்து தனக்குத் தேவையான நபரை எளிமையாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்.

Published:Updated:
ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்பின் முதன்மை அஜெண்டாக்களில் ஒன்று அமெரிக்க நீதி அமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்பதுதான். தனி மனித விருப்பம், உரிமை, சுதந்திரம் போன்றவற்றை எல்லா விஷயங்களிலும் எதிர்பார்க்கக்கூடாது. இது அமெரிக்கா. இந்த மண்ணிற்கென கலாசாரம், பண்பாடு மற்றும் தனித்துவம் உள்ளது. அதை மீட்டெடுத்து, நம் நீதித்துறையைப் பாரம்பரிய ஒன்றியமாக உருவாக்க வேண்டும் என்று சொல்பவர் ட்ரம்ப். எனவே, நீதிமன்றங்களுக்கும் ட்ரம்ப்பின் ஆட்சி கலகமாகவே இருந்தது.

ஒரு நாட்டின் நிலையைப் பற்றி நீதித்துறை கருத்துசொல்வது இயல்பு. ஆனால், அவற்றில் துளி தன் ஆட்சிக்கு எதிராக இருந்தாலும் ஆக்ரோஷமாகிவிடுவார் ட்ரம்ப். நடப்பு நிகழ்வுகள் மீது எதிர்மறையாகக் கருத்து தெரிவிக்கும் நீதிபதிகள் ட்ரம்ப்பால் ஏகபோகத்திற்கு விமர்சிக்கப்பட்டுள்ளனர். இதைப் பல நீதிபதிகள் வேதனையுடன் பதிவு செய்துள்ளனர். கருத்தரங்கு ஒன்றில் பேசிய மாவட்ட ஒன்றிய நீதிபதி 'பால் ஃப்ரீட்மேன்' (Paul Friedman) இவ்வாறு பதிவு செய்கிறார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"அதிபரின் நிலைப்பாடுக்கு யாரெல்லாம் எதிராக இருக்கிறார்களோ மற்றும் யாருடைய முடிவுகள் அதிபருக்கு இணங்காதவாறு இருக்கிறதோ அவர்களெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம். குறிப்பாக, தனிப்பட்ட விதத்தில் குறிவைக்கப்படுகிறோம். இது நீதித்துறை முழுவதும் தனக்குக் கீழ் இல்லை என்ற அதிகாரத்தின் வெளிப்பாடேயாகும். தான் விரும்பியது நடக்கவில்லை என நீதிபதிகளைத் தாக்குவது தாமஸ் ஜெஃபர்சன் முதல் ஒபாமா வரை நடந்தேறியுள்ளது. ஆனால், இன்று நாம் எதிர்கொள்வது முற்றிலும் வேறாக உள்ளது. 'அவர் ஒரு மெக்ஸிகன் நீதிபதி', 'அவர் பெயருக்குத்தான் நீதிபதி', 'இவர் நீதித்துறைக்கே பேரழிவு' என்று நீதிமன்றத்தின் மீது ட்ரம்ப் தொடர் தாக்குதல் நிகழ்த்துவது ஜனநாயக்கத்தின் பரிந்துரைகளையே மீறுவதாகும்" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் கூறும்போது, "நாங்கள் நீதிபதிகளாக இருக்க வேண்டுமே தவிர, ட்ரம்ப் நீதிபதி, ஒபாமா நீதிபதி, புஷ் நீதிபதி என்று இருக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாற்றாக ட்ரம்ப் தன் கொள்கைகளுக்கு நெருக்கமானவர்களை நீதித்துறை முழுவதும் நிரப்ப ஆரம்பித்தார். ஒரு நீதிபதி பதவி காலியானால் ட்ரம்ப் அதிகம் சிரமப்படுவதில்லை. பழைமைவாத வலதுசாரி இயக்கங்களிலிருந்து தனக்குத் தேவையான நபரை எளிமையாகத் தேர்ந்தெடுத்துவிடுவார். இது பெரிய குற்றச்சாட்டாக எழுந்தது. "ட்ரம்ப் நமது நீதித்துறையைத் தனது அதிகாரத்தின் மூலம் அபகரிக்க முயல்கிறார். அவர் பதவி முடிந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் முற்போக்கு திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோடும் வேலையில் இறங்கிவிட்டார்" என மூத்த நீதிபதி கிரிஷ் காங் எச்சரித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தன்னுடைய ஆட்சி அதிகபட்சம் எட்டு ஆண்டுகள்தான். தான் பதவியிலிருந்து வெளியேறிய பிறகும் தன்னுடைய ட்ரம்பிஸ பழமைவாதக் கொள்கை நீடிக்க வேண்டும். அதற்கு தன் ஆட்கள் மற்றொரு அதிகாரமான நீதித்துறையை ஆள வேண்டும். ஆகவேண்டிய காரியங்களை விரைவுபடுத்தினார் ட்ரம்ப். ஒபாமா எட்டு ஆண்டுகளில் செய்ததை விட ட்ரம்ப் மூன்று ஆண்டுகளில் நீதிபதிகளை நியமித்ததும் மாற்றியதும் அதிகம். ஒபாமா ஆட்சிக்காலம் முழுவதும் 55 ஒன்றிய நீதிபதிகளை நியமித்தார். ட்ரம்ப் தனது மூன்றே ஆண்டில் 48 பேரை நியமித்துவிட்டார். எந்த அதிபரும் செய்யாத 'சாதனை' இது. கொலை, கொள்ளை போன்ற மக்களை நேரடியாக பாதிக்கும் மாவட்ட நீதிமன்றங்களிலும் இதே நிலைதான். இதுவரை 112 பேர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் முக்கியமான விஷயம், ட்ரம்ப்பால் நியமனம் செய்பவர்கள் பெரும்பாலும் அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாதவர்கள். அதாவது, 50 வயதிற்குக் குறைவானவர்களே அதிகம். பலருக்கும் தகுதியே இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், தன் பதவிக்குப் பிறகுத் தனது கொள்கை மற்றும் ஆதிக்கம் நீண்ட காலத்திற்கு அமெரிக்காவை ஆளவேண்டும் என்று நினைத்த ட்ரம்ப், எதிர்ப்புகளை பெரிதுபடுத்தவில்லை. ஒபாமா தன் ஆட்சியில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார். பெரிதும் சலனமில்லை. ஆனால், ட்ரம்ப் உச்சநீதிமன்றத்திற்கு நியமித்த ஒரு நீதிபதியால் மொத்த அமெரிக்காவும் களேபரமானது. மாதக்கணக்கில் நாளிதழ் பக்கங்களை நிரப்பி விவாத பொருளாகிய அவரின் பெயர் ப்ரெட் கவனா (Brett Kavanaugh).

Brett Kavanaugh
Brett Kavanaugh
Photographer, Fred SchillingTaken for Supreme Court, Public domain, via Wikimedia Commons

அமெரிக்க உச்சநீதிமன்ற இணை நீதிபதியாக ப்ரெட் கவனா நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு எதிர்மறை கருத்துகள் அவரை சூழ்ந்தது. குறிப்பாக, முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டர் 'உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதற்கு கவனா 'அன்ஃபிட்' ஆனவர்' எனக் காட்டமாகக் கடிந்தார். சட்டம் படித்த கவனா, 1990-ல் 'வால்ட்டர் கிங் ஸ்டாப்லெட்டான்' என்ற நீதிபதிக்கு எழுத்துப்பணிக்காகச் சேர்ந்தார். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் பணியாற்றியவர், 2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடா மாகாணத்தின் வாக்கெடுப்பு சர்ச்சையின்போது ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஆதரவான சட்டக்குழுவில் பணியாற்றினார். 2001-ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக புஷ் பதவியேற்க, 2003-ல் புஷ்ஷின் உதவியாளராகவும், வெள்ளை மாளிகைப் பணியாளர்களின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

நெருக்கமான பழக்கம் காரணமாக 'கொலம்பிய மேல் முறையீட்டு நீதிமன்றத்தின்' நீதிபதியாக கவனாவைப் பரிந்துரைக்கிறார் புஷ். 2006-ம் ஆண்டு நீதிபதியாகப் பதவியேற்ற கவனா, 2018 வரை பதவியில் தொடர்ந்தார்.

பில் கிளிண்டனின் பாலியல் சர்ச்சை வழக்கில் கவனாவின் வாதங்கள் முக்கிய பேசுபொருளாக அமைந்தது. ஆனால், தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக அறிவித்தபோது, பள்ளி, கல்லூரி சக மாணவிகள் மற்றும் உடனிருந்த நண்பர்கள் கவனா மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். மகளிர் அமைப்புகள் உட்பட நாடு முழுவதும் கவனா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படக் கூடாது எனப் போராட்டங்கள் நடந்தது. ட்ரம்ப் தன் முடிவில் உறுதியாக இருந்தார். ''எதிர்கட்சிகாரர்கள் திட்டமிட்டுப் பொய் பரப்புரை செய்கிறார்கள்'' என்றார். அனைத்து எதிர்ப்பையும் கடந்து நீதிபதியாகப் பதவியேற்றார் கவனா.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் கவனாவை விட்டுக்கொடுக்காததற்கு முக்கிய காரணம் கவனா ஒரு பழைமைவாதி. ட்ரம்ப் வார்த்தையில் சொல்வதென்றால், 'என்னைப்போல் கவனாவும் இயற்கை விரோதமற்றவர் (Pro Life)'. நீதித்துறையின் செயல்பாடுகளையே அதிகம் விமர்சிக்கும் சர்ச்சை நாயகன் கவனா. குடியேற்ற ஆவணம் இல்லாத மெக்சிகோ அகதி பெண் ஒருவர் கருக்கலைப்பு செய்ய விரும்பியதால், அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதை எதிர்த்தார் கவனா. 'குற்ற வழக்கு விசாரணை மற்றும் குடிமை வழக்கிலிருந்து ஆளும் அதிபருக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று 2009-ம் ஆண்டு இவரின் 'மினசோட்டா' சட்ட மறு ஆய்வுக்கட்டுரையில் எழுதியிருந்தார். 'இது தவறு செய்பவர்களைப் பாதுகாப்பதுபோல் அமைந்துவிடும்' என கவனாவின் வாதம் கண்டிக்கப்பட்டது. ஜனநாயக கட்சி உட்பட மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கவனா போன்ற ஒருவர் நீதித்துறை தலைமையாக இடம்பெறுவதை விரும்பவில்லை.

இன்றோ முக்கால்வாசி தன்னுடைய பிரதிநிதிகளை நீதித்துறையில் அமர்த்திவிட்டார் ட்ரம்ப். அமெரிக்கச் சட்டத்தை வரையறை செய்யும் செனட் சபையில் ஆதரவு இல்லாதபோது, நீதித்துறையில் அதைச் சாதித்துவிடலாம். ட்ரம்ப் மீது பதவிநீக்க தீர்மானம் கீழவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதே நாளில், செனட் தலைவர் மெக்கானலால் 13 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டது தற்செயலானது எனக் கடக்க முடியாது. ஆவணமற்ற குடியேற்றம், கருக்கலைப்பு, சுற்றுச்சூழல், தனிநபர் ஆயுதம் கையாளுதல் போன்ற அமெரிக்காவின் அடிப்படை பிரச்னைகளில் ஜனநாயக பங்களிப்பைத் தவிர்த்து ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதே ட்ரம்ப் உருவாக்கும் 'புதிய அமெரிக்கா!'

தனிநபர் ஆயுதப் போர்!

வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
AP

எல் பெசோவில் இருக்கும் அந்த வால்மார்ட் காலை நேரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். சுற்றுவட்டாரங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகளும், குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு அதிகம் சந்திக்கும் இடமாக இருந்தது. காலை 10.40 மணிக்கு சூப்பர் சென்டருக்குள் நுழைந்த அந்த இளைஞனின் கையில் WASR-10 எனப்படும் Ak47 வகையைச் சார்ந்த துப்பாக்கி இருந்தது. கூட்டத்தைப் பார்த்து சரமாரியாக அவன் சுடப் பலரும் செய்வதறியாது அலறி ஓடினர். அருகிலிருந்த வட்டார போலிஸ், எஃபிஐ வரும்வரை 6 நிமிடங்களில் அனைத்தும் நடந்து முடிந்தது. மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் படுகாயமடைந்தனர். கொலை செய்த அந்த இளைஞன் துளி குற்ற உணர்வும் அடையவில்லை. மாறாகத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். ஏனெனில், அவன் குறிவைத்த அனைவரும் மெக்ஸிகர்கள்.

'பாட்ரிக் உட் குருசியஸ்' (Patrick wood Crusius) என்ற 21 வயதுடைய அமெரிக்க வெள்ளை இனவெறி இளைஞன் மெக்ஸிகர்கள் மீது கொண்ட வெறுப்பின் வெளிப்பாடாக 'எல் பெசோ படுகொலையை' நிகழ்த்தினான். நியூசிலாந்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட 'Christ Church' துப்பாக்கி சூடு, குருசியசிற்கு முன்னுதாரணமானது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்ற இச்சம்பவம் அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வெறுப்பு படுகொலைகளில் ஒன்று. ''அவர்கள் எங்கள் நாட்டில் நுழைந்து எங்கள் கலாசாரங்களையும் பாரம்பரியங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்'' எனக் கொலைக்கான காரணத்தைக் கூறினான் குருசியஸ். இத்தகைய மனநிலையில் குருசியஸ் அன்று கூறியது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் அமெரிக்க அதிபரே அவ்வாறுதான் பேசிக்கொண்டிருப்பார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

அதிபராவதற்கு முன்பே ட்ரம்ப்பின் மெக்சிகர்கள் மீதான வெறுப்பு உலகமறிந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது ''மெக்சிகர்கள் அனைவரும் ரேபிஸ்ட்'' என்றார். மெக்சிகர்கள் அனைவரும் கிரிமினல்கள், போதை கடத்தல்காரர்கள், போதைப்பொருளைத் திட்டமிட்டுப் பரப்புவார்கள், நம் பொருளாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் நம் நண்பர்கள் ஆகிவிட முடியாது, மெக்சிகோ அரசு மற்றும் நீதிமன்றங்கள் முற்றிலும் பழுதடைந்துள்ளது, அவர்கள் அமெரிக்காவிற்கு மக்களை அனுப்பவில்லை, மாறாக பிரச்னைகளையே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் போன்ற ட்ரம்ப்பின் வார்த்தை முழுவதும் வெறுப்பு பிரசாரமாகவே ஒலித்தது. மேலும், அமெரிக்காவில் குடியேறும் மெக்சிகர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' (Illegal Immigrants) என்றே முத்திரை குத்தி வருகிறார். ஐநா சபை, மனித உரிமை மற்றும் அகதிகள் அமைப்பு 'சட்டவிரோத குடியேறிகள்' என்ற குற்றம் சுமத்தும் சொல்லாடல்களைப் பயன்படுத்தத் தடை விதித்தும் ட்ரம்ப் 'சட்டவிரோதமாகவே' பேசிவருகிறார். அடைக்கலம் தேடி வருபவர்களை 'ஆவணமற்ற குடியேறிகள்' (Undocumented Immigrants) என்று அழைப்பதே சரி. ஆனால், ட்ரம்ப்பின் நோக்கம், சட்டவிரோதமானவர்கள் என்பதன் மூலம், குடியேறிகள் குற்றவாளிகள் என்ற அச்சுறுத்தலை அமெரிக்கரிடம் விதைக்க வேண்டும்.

நிகரகுவா, ஹாண்டுராஸ், மெக்சிகோ என மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகளைத் தடுக்க எல்லையில் சுவர் எழுப்புவதில் உறுதியாக இருந்தார் ட்ரம்ப். தேர்தல் பிரசாரத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டு, மெக்சிகோ அரசின் பங்குக்கு நிதி கேட்டார். இதற்கு முன்னால் மெக்சிக அதிபர் 'வின்சென்ட் ஃபாக்ஸ்' ட்ரம்ப்பை 'தற்போதைய ஹிட்லர்' என்றார். குடியேற்ற அதிகாரிகள் குடியேறிகளைக் கட்டுப்படுத்த சுவர் அவசியம் என்று கூறுகிறார்கள்' என்றார் ட்ரம்ப். ஜனநாயக கட்சி மற்றும் மனித உரிமை அமைப்புகள் ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராக இருந்தார்கள்.

சுவர் பணி தொடங்கினால் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற அச்சமும் ஒருபுறம் இருந்தது. ஆனால், ''சுவர் எழுப்புவதற்காக அரசின் செலவுகளை நிறுத்திவைக்கவும் தயார்'' என்றார் ட்ரம்ப். இடைப்பட்ட காலத்தில் 35 நாட்கள் வரை அரசை முடக்கி வைத்தார். எல்லையில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரைக் குவித்தார். சுவருக்கு நிதி ஒதுக்கக் காங்கிரஸ் அனுமதி தரவில்லை. 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் அவசர நிலையை அறிவித்து ராணுவ நிதியைப் பயன்படுத்தினார். காங்கிரசின் தலையீட்டை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்தார். இறுதியில் நீதிமன்றம் அனுமதி தர எல்லைச்சுவர் பணி நடந்து வருகிறது.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ
AP

சுவருக்கு முன்பே எல்லை மீறியது ட்ரம்ப்பின் கெடுபிடிகள். குடியேறிகளைக் கையாள்வதில் புதிய விதிகளை உருவாக்கினார். வழித்தடங்களில் காட்டிய கடும் போக்கு ஆறு, பாலைவனம், கடல் என மோசமான பாதைகளுக்கு மக்களை திசைதிருப்பியது. 'நீங்கள் செத்துப்போங்கள்' என்பதையே தன் சட்டத்தின் மூலம் ட்ரம்ப் சொல்லவருகிறார் என மனித உரிமையாளர்கள் கண்டித்தனர். மேலும், ட்ரம்ப் அரசு ஆதரவு தேடி வருபவர்களை அணுகுவது, அவர்களைத் தடுப்பு முகாம்களில் முறையற்று நடத்துவது என அனைத்தும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலேயே இருப்பதாகக் குற்றம் சாட்டினர். தடுப்பு முகாம்களிலுள்ள குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து வைப்பது, பாலியல், உடல், உளவியல் என அனைத்து வகைகளிலும் தாக்குவது எனக் குடியேறிகளுக்குச் செய்யும் கொடுமைகள் தொடர்கிறது.

மெக்சிகோ அரசும் ட்ரம்ப்பிற்கு உடன்பட்டே வருகிறது. இந்த மூன்றாண்டில் தனது நெருக்கடியின் போதெல்லாம் லத்தீன் அமெரிக்கர்கள் வெறுப்பைக் கையிலெடுப்பது ட்ரம்ப்பின் வாடிக்கை. ஆனால், ட்ரம்ப்பிற்கு இணையாகச் சொந்த நாட்டு மக்கள் மீது கடுமை காட்டும் மெக்சிகோ அரசு, மெக்சிகர்கள் மீதான ட்ரம்ப்பின் வெறித்தனத்திற்கு சலனமடைந்ததுகூட இல்லை. மெக்சிகர்கள் அதிகமுள்ள இரண்டாவது நாடு அமெரிக்கா. ஆனால், தற்போதைய சூழலில் 'மெக்சிகர்கள் சட்டவிரோத குடியேறிகள்' என்ற உளவியல் மெக்சிகர்களுக்குள்ளே நம்பவைக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டிற்குப் பிறகு மெக்சிகர்கள் மீதான வெறுப்பு குற்றம் இரட்டிப்பாகியுள்ளது. மெக்சிகர்களை அதிகம் கொண்ட கலிஃபோர்னியா மாகாணத்தில் அவர்களுக்கு எதிரான 80% வெறுப்பு குற்றங்கள் நடைபெறுகிறது. பத்திற்கு நான்கு பேர் வெறுப்பு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

ஜோ பைடன் - ட்ரம்ப்
ஜோ பைடன் - ட்ரம்ப்
AP | OLIVIER DOULIERY

ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு எதிராக மெக்சிகோவின் அதிபரான சாண்டா அனா காலத்தில்தான் அமெரிக்கா-மெக்சிகோ போர் (1846-1848) தொடங்கியது. மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்த 'டெக்சாஸை' அமெரிக்கா கைப்பற்றியது. போரின் முடிவில் கலிஃபோர்னியா, நியூ மெக்சிகோ என மெக்சிகோவின் பகுதிகள் அமெரிக்கா வசமாகின. இதன்பிறகு, அமெரிக்க ஆங்கிலேயர்களின் குடியேற்றமும் அவர்களின் அதிகார வலையமுமே இப்பகுதிகளை ஆண்டது. இதில், 'நிலத்தின் சொந்தக்காரர்களான' ஸ்பானிஷ் மெக்சிகர்கள் இரண்டாந்தர குடிமக்களாக மாற்றப்பட்டனர். இன்று சட்டவிரோத குடியேறிகளாக வரையறுக்கப்படுகிறார்கள்.

ட்ரம்ப் அதிபராகத் தொடர்வாரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

- முடிந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism