Published:Updated:

`ட்ரம்ப்பிடம் என்ன சொன்னார் மோடி?' கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஆ.பழனியப்பன்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீடித்துவரும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு மோடி தன்னிடம் கூறினார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய விவகாரம், இந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பை இம்ரான் கான் சந்தித்தார். அப்போது, பயங்கரவாத ஒழிப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். பின்னர், இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "இரு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன். அவர், காஷ்மீர் விவகாரம் நீண்டகாலமாக இருந்துவருவதாகவும், அதில் மத்தியஸ்தம் செய்ய உங்களுக்கு விருப்பமா என்றும் என்னிடம் கேட்டார்" என்று ட்ரம்ப் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதற்கு இரு நாடுகளும் அழைத்தால் தாம் தயாராக இருப்பதாகக் கூறினார்.

மோடி
மோடி

அப்போது ட்ரம்ப் அருகில் அமர்ந்திருந்த இம்ரான் கான், "காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்தால், அதை பாகிஸ்தான் வரவேற்கும்" என்றார். இந்த விவகாரம், இந்திய அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் அவ்வாறு கூறியதற்கு, உடனடியாக இந்தியா மறுப்பு தெரிவித்தது.

ஆனாலும், இந்த விவகாரத்தை நேற்று (ஜூலை 23), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பின. மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, "காஷ்மீர் பிரச்னையில் அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா?" என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார். ஆனந்த் சர்மா, "ட்ரம்ப்பிடம் பிரதமர் என்ன சொன்னார் என்பதை நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

மோடி - இம்ரான் கான்
மோடி - இம்ரான் கான்

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பாகிஸ்தான் உடனான அனைத்துப் பிரச்னைகளும், இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்படும்" என்றார்.

மேலும், ``இந்தியா சார்பில் அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் எதையும் வைக்கவில்லை. பாகிஸ்தான் உடனான அனைத்துப் பிரச்னைகளும் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நடைபெறும். இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. இதில் மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் என்பது இருக்காது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமென்றால், எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் ஆகியவையே இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அடிப்படையாக இருக்கும்” என்று ஜெய்சங்கர் கூறினார்.

அமைச்சர் ஜெய்சங்கரின் இந்தப் பதிலால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திருப்தியடையவில்லை. எனவே, பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதே பிரச்னையை மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். மாநிலங்களவைக் கூடியவுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுதொடர்பாகக் கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ள நிலையில், நேரடியாக மோடி பதிலளிப்பாரா என்பது தெரியவில்லை.