Published:Updated:

இலங்கை அதிபர் தேர்தல்... அந்தரத்தில் தமிழர்கள்!

ராஜபக்சே
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜபக்சே

‘இனப்பிரச்னையே இலங்கையில் முற்றாக ஒழிந்துவிட்டது போன்ற நிலைப்பாட்டில் இலங்கை அதிபர் தேர்தல் களம் இருக்கிறது’ என வருத்தப்படுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.

இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தில், ஈழத் தமிழர்களுக்கான தீர்வுகள் பற்றியோ அவர்களுக்கான தேவைகள் பற்றியோ பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை வாய் திறக்காமல் இருப்பதே இந்த வருத்தத்துக்குக் காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இலங்கை அதிபராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய அதிபருக்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். உண்மையான போட்டி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும், அந்தக் கட்சியின் துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசாவுக்கும், மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி வேட்பாளரான கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையேதான்.

ரணில் விக்கிரம சிங்கேவுடன் சஜித் பிரேமதாசா
ரணில் விக்கிரம சிங்கேவுடன் சஜித் பிரேமதாசா

2009-ம் ஆண்டு இலங்கை இனப்படுகொலையில் முக்கிய பங்குவகித்தவர் கோத்தபய ராஜபக்சே. அவர்மீது சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இந்த நிலையில்தான், அவரை இலங்கையின் அதிபர் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அவரின் அண்ணன் மகிந்த ராஜபக்சே. மறுபுறம் இலங்கையில் உள்ள பௌத்தர்களின் ஆதரவில் எப்படியாவது அதிபர் ஆகிவிடலாம் எனத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார் சஜித் பிரேமதாசா. இவருக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, தமிழர்களையும் இலங்கை முஸ்லிம்களையும் தன் கட்சிக்கு ஆதரவாக மடைமாற்றும் உத்தியைக் கையிலெடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் அதிபர் பதவிக்கு களத்தில் நிற்கும் சஜித், ‘‘இலங்கையின் அதிபராக நான் வந்தால், நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வேன். மக்களின் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்த்து வைப்பேன்’’ என்று பொதுப்படையாகச் சொல்கிறாரே தவிர, ‘தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வுகாண்பேன்’ என்றோ, ‘போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்’ என்றோ சொல்லவில்லை. வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கான தீர்வு பற்றி மறந்தும்கூட வாய் திறப்பதில்லை.

மற்றொருபுறம் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே கோத்தபய, ‘‘தேர்தலில் நான் வெற்றிபெற்றால், பல்வேறு குற்றச்சாட்டு களின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவத்தினரை மறுதினமே விடுதலை செய்வேன்’’ என்று பகிரங்கமாக உத்தரவாதம் கொடுக்கிறார். பத்து ஆண்டுகளுக்கும்மேலாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளின் நிலை குறித்து, தப்பித்தவறி ஒரு வார்த்தைகூட அவர் பேசுவதில்லை.

ரணில் விக்கிரமசிங்கே, ‘‘வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் எங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு தமிழ்க் கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவளித்தால், புதிய அரசு அமைந்த பிறகு தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவோம்’’ என்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவை சஜித் பிரேமதா சாவுக்குப் பெறவே இந்த அறிவிப்பை வெளி யிட்டிருப்பதாக ஈழத்தமிழர்கள் குமுறுகின்றனர். ‘‘ஐந்தாண்டுகள் பிரதமராக இருந்த ரணில், இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்துவிட்டார்?’’ என்று கொந்தளிக்கின்றனர் தமிழ்க் கூட்டமைப்பினர்.

தமிழர்களின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்தாலும், அதை நேரடியாகக் கேட்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்கள் பிரச்னைக்கான தீர்வு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ் மக்கள் சொல்லும் தீர்வை தேர்தல் அறிக்கையில் அறிவித்தால், ‘தமிழ் மக்களுக்கு தனி நாடு வழங்க சஜித் முடிவுசெய்துவிட்டார். தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவு அதற்காகவே பெறப் பட்டுள்ளது’ என்று இலங்கையின் பெரும்பான்மை யினரான சிங்களவர்களை கோத்தபய உசுப்பேற்றி விடுவார் என்று ரணில் தரப்பு அஞ்சுகிறது. இது தமிழ்க் கூட்டமைப்புக்கும் நன்றாகத் தெரிந்துள்ளது.

மகிந்த ராஜபக்‌சேவுடன் கோத்தபய ராஜபக்‌சே
மகிந்த ராஜபக்‌சேவுடன் கோத்தபய ராஜபக்‌சே

இதனால், தேர்தல் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள், ‘பொருளாதாரத்தை மேம்படுத்து வோம், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம்’ போன்ற வழக்கமான வாக்குறுதிகளை மட்டுமே தருகின்றனர். எல்லோருடைய தேர்தல் அறிக்கையிலும் பரப்புரையிலும் பொருளாதாரம் மையப்பொருளாக இருப்பதற்கு பல காரணங்களும் இருக்கின்றன.

2009-ம் ஆண்டு இலங்கை இனப்படுகொலை முடிந்தவுடன், ‘‘இலங்கை, இனி புதிய வளர்ச்சிப் பாதையைக் காணும்’’ என்றார் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் இலங்கையிலிருந்து 25 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாட்டுக்குப் பறந்துள்ளனர். அவர்கள் மீ்ண்டும் இலங்கை திரும்பும் வாய்ப்பே இல்லை என்று இலங்கையின் மனிதவள அமைச்சகமே வருத்தப்பட்டிருக்கிறது. இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, யாரை வைத்து புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி எழுப்பப் படுகிறது.

இலங்கையின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இலங்கைப் பெண்கள் பலர், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வீட்டுவேலை செய்யச் சென்றிருக் கின்றனர். போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் தங்களுக்கான சுதந்திரமோ அரசியல் தீர்வோ கிடைக்காத விரக்தியில் உள்ள தமிழர்களும், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிவிட வேண்டும் என்றே நினைக்கின்றனர். இவர்களை அரவணைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அந்த ஆதரவு பெரும்பான்மையினரின் வாக்குகள் பறிபோகக் காரணமாகிவிடுமோ என அஞ்சுகின்றனர்.

தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் சமூகத்தினர் ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்கே மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழர்களின் வாக்குகள் அனைத்தும் சஜித்துக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் இலங்கையில் உள்ள ஐந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதன் தலைவர்கள், தங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இசைவு தரும் வேட்பாளர்களையே தாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்திருக்கின்றனர். களத்தில் நிற்கும் எந்த வேட்பாளரும் இதுவரை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இதனால், யாருக்கு வாக்களிப்பது என்பதில் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. சிறுபான்மையினரான முஸ்லிம்களும் இதேபோன்ற குழப்பத்தில்தான் இருக்கின்றனர். இந்த இரண்டு சிறுபான்மையினரின் ஆதரவை எந்தக் கட்சி பெற்றாலும் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மையினரான சிங்களவர்களின் வாக்குகள் கிடைக்காது என்பதும் திட்டவட்ட மாகத் தெரிகிறது. இது முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழ்நிலை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதுவரை நடந்துள்ள இலங்கை அதிபர் தேர்தல்களில் எல்லாம், ‘இனப்பிரச்னைக்குத் தீர்வு’ என்ற முழக்கமே ஓங்கி ஒலிக்கும். இந்த முறை முற்றிலுமாக அதை மழுங்கடிக்கும் நிலைப்பாட்டில் அனைத்து வேட்பாளர்களும் இருக்கின்றனர். இதனால், ‘இப்போது இருக்கும் உரிமைகளும் பறிபோகுமோ? இனப் பிரச்னைக்கு இனி தீர்வே கிடைக் காதா?’ என்ற அச்சம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள இலங்கை அதிபர் தேர்தல்களில் எல்லாம், ‘இனப்பிரச்னைக்குத் தீர்வு’ என்கிற முழக்கமே ஓங்கி ஒலிக்கும். இந்த முறை முற்றிலுமாக அதை மழுங்கடிக்கும் நிலைப்பாட்டில் அனைத்து வேட்பாளர்களும் இருக்கின்றனர்.

‘‘இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு குறித்தோ, முஸ்லிம்களின் நலன்கள் பற்றியோ எந்தக் கட்சியும் பேசப் போவதில்லை. இதைப் பற்றிப் பேசாமலே இந்த மக்களிடம் வாக்குகளை வாங்குவது எப்படி என்பதையே இரண்டு முக்கிய வேட் பாளர்களும் சிந்தித்து வருகிறார்கள்’’ என்கிறார்கள் இலங்கை அரசியல் நிபுணர்கள்.

‘இழப்பதற்கு இனி எங்களிடம் எதுவும் இல்லை. இனி எங்களின் எதிர்காலம், நிரந்தரமான தீர்வில்தான் இருக்கிறது. அதற்கு இலங்கை அரசியல் கட்சிகள் உதவ வாய்ப்பில்லை. சர்வதேச சமூகம்தான் இந்த இனப்பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.

அவர்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல!