Published:Updated:

திருந்தாத ட்ரம்ப்... அமெரிக்க அவமானம்!

அமெரிக்கா
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்கா

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதில் நம்பிக்கையில்லாமல், பொய்களைக் காற்றில் விஷமெனப் பரப்பிக்கொண்டிருந்த ட்ரம்பின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது.

திருந்தாத ட்ரம்ப்... அமெரிக்க அவமானம்!

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதில் நம்பிக்கையில்லாமல், பொய்களைக் காற்றில் விஷமெனப் பரப்பிக்கொண்டிருந்த ட்ரம்பின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது.

Published:Updated:
அமெரிக்கா
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்கா

உலகத்தின் எந்த மூலையில் பிரச்னை என்றாலும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற முதல் ஆளாய் மத்தியஸ்தம் செய்யப்போகும் அமெரிக்காவைப் பார்த்து தற்போது உலகமே சிரித்துக்கொண்டிருக்கிறது. மோசமாகத் தோற்றபிறகும், ‘‘என் வெற்றியைத் திருடப் பார்க்கிறார்கள்’’ என ட்ரம்ப் பொய் சொல்லி வன்முறையைத் தூண்டிவிட, நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து வரலாற்றின் அவமானப் பக்கங்களில் ட்ரம்புடன் தங்களையும் இணைத்துக்கொண்டிருக்கின்றனர் ட்ரம்பின் ஆதரவாளர்கள்.

திருந்தாத ட்ரம்ப்... அமெரிக்க அவமானம்!

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதில் நம்பிக்கையில்லாமல், பொய்களைக் காற்றில் விஷமெனப் பரப்பிக்கொண்டிருந்த ட்ரம்பின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரி 20-ம் தேதிக்கு இன்னும் சில நாள்களே மீதம் இருக்கின்றன. அன்று ஜோ பைடன் பதவியேற்றாக வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாளும் அதிகார துஷ்பிரயோகங்களின் வழியாகக் காய்களைத் தவறாக நகர்த்திவந்தார் டொனால்டு ட்ரம்ப். ஜார்ஜியா மாகாண தேர்தல் அதிகாரியிடம், முடிவுகளை மாற்றி அறிவிக்கும்படி ட்ரம்ப் கட்டளையிட்ட ஆடியோ ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜியா அதிகாரி பிராட் ரேஃப்ன்ஸ்பெர்கரிடம், “நான் இன்னும் 11,780 ஓட்டுகளைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அது கிடைத்தால் நான் இதை வென்றுவிடுவேன்” என ஒலித்தது அந்த ஆடியோ. 11,779 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வென்றதாக முடிவை அறிவித்திருந்தது ஜார்ஜியா.

ஒரு ஜனநாயகத்தில் ஓட்டுகளைக் கண்டுபிடிக்கவோ, தேடவோ முடியாது. மக்கள் வாக்களிக்க வேண்டும்; அதிகாரிகள் அந்த வாக்குகளை எண்ண வேண்டும்; முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் நம்புவது இதற்கு நேரெதிர். எங்கோ தவறு நடந்துவிட்டதாகத் தீர்க்கமாக நம்பினார். வாக்குப் பெட்டிகளுக்குள் தன் தலையை மட்டும்தான் விட்டுத் துழாவவில்லை. மற்ற எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்றே, ‘தான் முன்னிலையில் இருக்கும்போது, எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்’ என அறிவித்தவர் ஆயிற்றே! வேறென்ன அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும். ட்ரம்ப் என்னும் மகுடி வாசிப்பாளரின் ஆட்டத்துக்கு அப்படியே ஆடிய ஆதரவாளர்கள், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நாடாளுமன்ற வளாகத்தையே தாக்கியிருக்கின்றனர்.

ட்ரம்பின் பொய்களுக்குக் கை கால் முளைத்து ஆதரவாளர்கள் என்னும் பெயரில் உள்ளே புகுந்தனர். கிட்டத்தட்ட நம்ம ஊர் சட்டமன்ற அத்துமீறல் காட்சிகள், சபாநாயகரின் மைக் பிடுங்கி எறியப்படுவது போன்ற காட்சிகள் அங்கு அரங்கேறின. இதைச் செய்தவர்களை ‘தேசபக்தர்கள்’ என ட்ரம்ப் அழைத்தார். வன்முறை மிக மோசமாக மாறி, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ‘அதிபருக்கு ஆதரவாக வன்முறை செய்யும் நம்மைக் குறிவைத்தும் போலீஸ் துப்பாக்கிகள் திரும்பும்’ என்பதை அவர்கள் கடைசி நிமிடம் வரை நம்பவில்லை.

சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர்களால் கைவிடப்பட்ட நிலையில், இந்த வன்முறையைக் கண்டித்தார் ட்ரம்ப். பதிவு செய்யப்பட்டு வெளியான ட்ரம்ப்பின் கண்டன வீடியோவில் துளிகூடக் குற்ற உணர்ச்சியில்லை. ஒரு சால்ஜாப்புக்காகக்கூட அவரால் மனதார வருத்தம் தெரிவிக்க முடியவில்லை. ‘வாங்கி வைத்திருக்கும் கடன்களும், அதிபராகச் செய்த துஷ்பிரயோகங்களும் தன் கழுத்தை நெருக்கப்போகின்றன’ என்பதை மட்டும்தான் சிந்திப்பவராகக் காணப்பட்டார்.

யானைக்கு அடி சறுக்கினால், எறும்புகள்கூட ஏறி மிதிக்கும். உலக நாடுகள் பலவும் இப்போது அமெரிக்காவில் நிகழும் ‘ஜனநாயகப் படுகொலை’யைக் கண்டிக்கின்றன. ஹாங்காங்கின் சட்டசபை வளாகத்தினைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது, ‘‘என்னவோர் அற்புதக் காட்சி’’ என எள்ளி நகையாடினார் அமெரிக்காவின் சபாநாயகரான நான்சி பெலோசி. தற்போது நடந்த கலவரத்தில், ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர் பெலோசியின் அலுவலகத்துக்குள் நுழைந்து அவர் நாற்காலியிலேயே அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் கர்மா எனச் சிரிக்கிறது சீன மீடியா. போதாக்குறைக்கு வட கொரிய மீடியாவோ, ‘இதுவரையில் எங்கள் அதிபரின் ஒரு ட்வீட்டைக்கூட யாரும் அழித்ததில்லை’ எனப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறது. ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்னும் விஜய் பட வசனத்தை அமெரிக்காவுக்குச் செயல் வடிவில் காட்டிக்கொண்டிருக்கின்றன சீனாவும் வட கொரியாவும்.

திருந்தாத ட்ரம்ப்... அமெரிக்க அவமானம்!

ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் ட்ரம்ப்பின் அக்கௌண்டுக்குத் தடை விதித்துத் தங்கள் நடுநிலையைக் காப்பாற்றிக்கொண்டன. உண்மையில் ட்ரம்ப்பை அதிபராக உருவாக்கிய காரணிகளில் ஃபேஸ்புக்கும் ஒன்று. எல்லாம் முடிந்தவுடன் கரங்களை வெட்டி பொம்மலாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றன பெரிய டெக் நிறுவனங்கள், அவ்வளவே. ‘டிக்டாக்கைத் தடை செய்தே தீருவேன்’ என முழங்கிக்கொண்டிருந்தார் ட்ரம்ப். தற்போது ‘ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையை விதைக்கிறார்கள்’ என அவர்களது வீடியோக்களை நீக்கிவருகிறதாம் டிக்டாக்.

உண்மையில் ட்ரம்ப் தனக்கான அரசியல் பாதையை மட்டும் குறுக்கிக்கொள்ளவில்லை. ‘மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஓடி வந்து கட்டிப்பிடிப்பேன்’ கதையாக தற்போது குடியரசுக் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியில் நிற்கிறது. அதனால்தான் களங்கத்தை முற்றிலுமாய்த் துடைத்தெறியும் முடிவில் இருக்கிறார்கள் அவர்கள். அவர் நியமித்த நீதிபதிகள், அவர் கட்சியைச் சார்ந்த தலைவர்களே ட்ரம்புக்கு எதிராகக் குரல் எழுப்பிவருகிறார்கள். துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்கூட ட்ரம்ப் பின்னால் இல்லை.

ஜனவரி 20-ம் தேதி வரை காத்திராமல், அதற்கு முன்பாகவே ட்ரம்ப்பை அரியணையிலிருந்து அகற்ற முயற்சி எடுக்கிறார்கள். வெறுப்பு அரசியலாலும் பொய்களாலும் ஒரு தேசத்தையே பிளவுபடுத்திய ட்ரம்ப், உண்மையில் இப்படிப்பட்ட தண்டனைக்குத் தகுதியானவரே!

அரியணையில் இருக்கும் ஒரு அதிபர் இப்படியான வன்முறையைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்த்தது பெரும் அவமானம் என்பதை வரலாறு என்றும் நினைவில் கொள்ளும். ஆனால், ‘இப்படியெல்லாம் நடக்கவில்லை என்றால்தான் நாம் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும்’ எனத் தன் கண்டன அறிக்கையில் தெரிவித்திருந்தார் முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா. அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து, ஜோ பைடனுக்காக விலகிய பெர்னி சாண்டர்ஸ்கூட, இதை அப்போதே யூகித்துப் பேட்டியளித்திருந்தார். ‘முதலில் வாக்குகள் எண்ணப்படும். பின்புதான் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால், அதற்கு முன்பே தான் வெற்றிபெற்றதாக அறிவிப்பார் ட்ரம்ப். இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது எளிதான விஷயம். ஆனால், ட்ரம்ப்பை அங்கிருந்து அகற்றுவதென்பது லேசுபட்ட காரியம் அல்ல’ என்றார். பெர்னி சாண்டர்ஸின் வார்த்தைகளை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் ட்ரம்ப்.

முன்பு ஒருமுறை சீன அதிபரிடம் பேசும்போது ட்ரம்ப், ‘‘உங்களைப் போல், ரஷ்யாவின் புதினைப் போல், என்னையும் என் நாட்டு மக்கள் இறுதிவரை அதிபராக வைத்து அழகு பார்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், அமெரிக்கச் சட்டங்கள் அதற்கு இடமளிப்பதில்லை. சட்டங்களை மாற்றியமைக்க நான் பரிசீலனை செய்துவருகிறேன்’’ என்றாராம். அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரான ஜான் பால்டன் தன் புத்தகத்தில் இவ்வாறாக எழுதியிருப்பார்.

ட்ரம்ப் தனி உலகத்திலேயே வாழ்ந்துவந்திருக்கிறார். அவரால், தற்போது நடக்கும் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பெரும் பிரச்னை. ஹிட்லர், இடி அமீன் என எல்லோருக்கும் இருந்த அதே பிரச்னை. ‘நாம் எல்லாவற்றையும் சரியாகத்தானே செய்தோம். எங்கு வழுக்கியது’ என யோசிக்கும் முன்னரே முடிந்துவிடும் வாழ்க்கை இது. ட்ரம்ப் இதை விரைவில் உணர்ந்துகொள்வார்.

திருந்தாத ட்ரம்ப்... அமெரிக்க அவமானம்!

‘ஒரு சுயநலவாதியின் வறட்டு வீராப்புக்கான விலையை அமெரிக்கா கொடுத்திருக்கிறது’ என்கிறார், குடியரசுக் கட்சியின் உட்டா மாகாண செனட்டரான மிட் ரோம்னி. சூழ்நிலைகள் எப்போதும் ஒரு மனிதனை உருவாக்காது. மனிதனின் சுயரூபத்தை அவை வெளிப்படுத்தும். ட்ரம்ப் இந்த இரண்டு மாத காலமும் தன் சுயரூபத்தையே வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். ‘அரசியல் என்பது தேர்தல் அறுவடைக்காலம் மட்டுமல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கின்றன’ என்பதைக் காலம் ட்ரம்புக்கு உணர்த்தும்.

ஒரு ஜனநாயக தேசத்தின் ஆட்சியாளர் சர்வாதிகாரியாக மாறி, தன் இருக்கையில் நிரந்தரமாக அமர நினைக்கும்போது இவையெல்லாம் நிகழும். அமெரிக்கா பக்குவப்பட்ட ஜனநாயகம் என்பதால், அவரை நாற்காலியிலிருந்து தூக்கி எறிய முடிந்திருக்கிறது. மக்கள் கருத்தை நிராகரித்துவிட்டு, தாங்கள் உருவாக்கிய பொய்களின்மீது நாற்காலியைப் போட்டு ஆளும் எவருக்குமே ட்ரம்ப் ஒரு பாடம்.