Published:Updated:

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்... சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் ரேஸ்!

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

- ‘நம்பர் 10 டவுணிங் ஸ்ட்ரீட்’டில் குடியேறப்போவது யார்?

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்... சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் ரேஸ்!

- ‘நம்பர் 10 டவுணிங் ஸ்ட்ரீட்’டில் குடியேறப்போவது யார்?

Published:Updated:
ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

`நம்பர் 11 டவுணிங் ஸ்ட்ரீட்’ என்பது இங்கிலாந்தின் நிதியமைச்சர்கள் தங்கும் இல்லத்தின் முகவரி. இந்த முகவரியில் ஜூலை 5-ம் தேதி வரை இருந்த ரிஷி சுனக், தற்போது `நம்பர் 10 டவுணிங் ஸ்ட்ரீட்’டுக்கு (பிரதமர் இல்ல முகவரி) முன்னேற முயன்றுகொண்டிருக்கிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடத்தைப் பிடிக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் எட்டு பேர் மோதிக்கொண்டனர். அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும், பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸும் இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் யார் பிரதமர் அரியணை ஏறப்போகிறார்கள்?

ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன்!

2019-ம் ஆண்டு நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில், 365 இடங்களைக் கைப்பற்றி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தது. பிரிட்டனைப் பொறுத்தவரை வெற்றிபெறும் கட்சியின் தலைவர்தான் பிரதமராகச் செயல்படுவார். அதன்படி, அப்போது கட்சியின் தலைவராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரதமரானார். கொரோனா உச்சத்திலிருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறி தனது பிறந்தநாளை, பிரதமர் அலுவலகத்தில் கொண்டாடி சர்ச்சையில் சிக்கினார் ஜான்சன். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளும், சொந்தக் கட்சியினரும் அவருக்கு எதிராகக் கிளம்ப, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தப்பிப் பிழைத்த ஜான்சன், பல்வேறு பாலியல் வழக்குகள் பாய்ந்திருக்கும் கிறிஸ் பின்ச்சரை அரசின் துணை கொறடாவாக்கி அடுத்த சர்ச்சையில் சிக்கினார். ஜான்சனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவியை ராஜினாமா செய்ய, ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியின்றி ஜூலை 7 அன்று, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜான்சன்.

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்... சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் ரேஸ்!

கட்சித் தலைவர் தேர்தல்!

கன்சர்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை, கட்சித் தலைவர் தேர்தலில் ஒருவர் போட்டியிடக் குறைந்தது 20 எம்.பி-க்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த வகையில், எட்டு பேருக்கு எம்.பி-க்களின் ஆதரவு கிடைத்தது. இந்த எட்டு பேருக்குமிடையே சுற்றுவாரியாக கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி-க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகள் பெறுபவர் `நாக்-அவுட்’ முறையில் வெளியேற்றப்பட்டார். கடைசியாக நடந்த ஐந்தாவது சுற்றில் ரிஷி சுனக் 137 வாக்குகளும், லிஸ் ட்ரஸ் 113 வாக்குகளும், பென்னி 105 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, ரிஷியும், லிஸ் ட்ரஸ்ஸும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகினர். இந்த ஐந்து சுற்றுகளிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்தான் முன்னிலை வகித்தார்.

இறுதிச்சுற்றைப் பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியிலுள்ள 2,00,000 உறுப்பினர்களில், குறைந்தது 1,60,000 பேராவது வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, அதற்கான முடிவுகள் செப்டம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும்.

யார் அடுத்த பிரதமர்?

`பிரிட்டன் பிரதமருக்கு உங்கள் சாய்ஸ் யார்?’ என்று `YouGov’ சர்வே நிறுவனம், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், 62 சதவிகிதம் பேர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவாகவும், 38 சதவிகிதம் பேர் ரிஷிக்கு ஆதரவாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். ``எம்.பி-க்கள் மத்தியில் ரிஷிக்கு ஆதரவு இருந்தாலும், கட்சியினர் மத்தியில் லிஸ் ட்ரஸ்ஸுக்குத்தான் ஆதரவு அதிகமிருக்கிறது. இதையடுத்து, லிஸ் ட்ரஸ்ஸின் வரிக் கொள்கைகள் பற்றிக் கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் ரிஷி. ஆனால், அது எந்த அளவுக்குக் கட்சியினர் மத்தியில் எடுபடும் என்பது தெரியவில்லை’’ என்கிறார்கள் பிரிட்டன் அரசியல் நோக்கர்கள்.

ஒருவேளை, இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றிபெற்றால், `பிரிட்டனின் இளம் பிரதமர்’, `வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர்’, `இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர்’ போன்ற பெருமைகளைப் பெறுவார். அதேபோல, இந்தியாவை ஆட்சிசெய்த பிரிட்டனை, இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட ஒருவர் ஆட்சி செய்கிறார் என்ற பெருமையும் கிடைக்கும். ஆனால், அவர் வெற்றிபெறுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள, செப்டம்பர் 5 வரை நாம் காத்திருக்க வேண்டும்!

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்... சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் ரேஸ்!

ரிஷி சுனக் யார்?

இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டனில் பிறந்த ரிஷி, ஸ்டான்ஃபோர்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் படித்தவர். இவரது குடும்பம் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக்கொண்டது. 2009-ல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியைக் காதலித்து, கரம்பிடித்தார் ரிஷி. முதன்முறையாக 2014 பொதுத் தேர்தலில் வென்று எம்.பி ஆனவர், 2020-ல் பிரிட்டனின் நிதியமைச்சரானார். கொரோனா காலத்தில் தனது பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நிதித்துறையைத் திறம்படக் கையாண்டு, மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றார். பிரிட்டன் குடியுரிமை பெறாமல் அங்கு வசிப்பவர்கள், வெளிநாட்டிலிருந்து ஈட்டும் வருமானத்துக்கு வரிகட்டத் தேவையில்லை. ரிஷியின் மனைவி அக்‌ஷதா இன்ஃபோசிஸ் பங்குகள் மூலம் தனக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாய்க்கு வரி கட்டவில்லை என்ற விஷயம் வெளிவரவே, `வரி கட்டாமல் தவிர்க்கவே அவர் குடியுரிமை பெறவில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பின. இது நிதியமைச்சரான ரிஷிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது!