கட்டுரைகள்
Published:Updated:

இந்தியா - சீனா... எப்போது முடியும் எல்லைப்பிரச்னை?

ஜெய்சங்கர் - வாங் யீ-உம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெய்சங்கர் - வாங் யீ-உம்

கருத்து வேற்றுமைகள் சர்ச்சைகளாகிவிடக் கூடாது. எல்லையில் பதற்றம் நிலவுவது இரண்டு நாடுகளுக்கும் உகந்தது அல்ல. முந்தைய ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும்.

இரண்டு அண்டை நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார்கள்; கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு சாதாரண நிகழ்வாக இது கடந்து போயிருக்க வேண்டும். ஆனால் உலகம் முழுக்கக் கவனித்தது. சந்திப்பு மாஸ்கோவில் நடந்தது. நாள் செப்டம்பர் 10. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்பது, சீனாவும் ரஷ்யாவும் மத்திய ஆசிய நாடுகளும் ஆண்டுதோறும் சந்தித்துக்கொள்வதற்காக நடத்தப்படு கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவும் ஷாங்காய் கூட்டமைப்பில் உறுப்பினர் ஆகியிருக்கிறது. இந்த ஆண்டு மாநாடு கவனிக்கப்பட்டதற்குக் காரணம் அதன் வழமையான நிகழ்ச்சி நிரல் அல்ல. மாநாட்டு வளாகத்தில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்களான ஜெய்சங்கரும் வாங் யீ-உம் சந்தித்துக்கொண்டதுதான்.

கடந்த நான்கரை மாதங்களாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ராணுவ, ராஜதந்திர, அரசியல் மட்டங்களில் உரையாடல்கள் நடந்த வண்ணம் உள்ளன என்றாலும், வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நிகழும் முதல் சந்திப்பு இதுதான். சந்திப்பின் முடிவில் அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையும் வெளியிட்டனர். கருத்து வேற்றுமைகள் சர்ச்சைகளாகிவிடக் கூடாது. எல்லையில் பதற்றம் நிலவுவது இரண்டு நாடுகளுக்கும் உகந்தது அல்ல. முந்தைய ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டும். துருப்புகள் ஒருவரை ஒருவர் சுட்டுவிடும் தூரத்தில் நிற்கக்கூடாது என்று நீள்கிறது அறிக்கை. இதில் எழுதப்பட்ட வரிகளுக்கு இடையில் எழுதப்படாத சில வரிகளும் ஊர்வது அரசியல் நோக்கர்களுக்குப் புலப்பட்டது. பதற்றம் மே மாதம் தொடங்கியது. அதற்கு முன்பு நடப்பிலிருந்த எல்லையைச் சீனத்துருப்புகள் தாண்டக்கூடாது என்று இந்தியா வலியுறுத்திவந்தது. இந்தக் கூட்டறிக்கையில் அது குறித்த வாசகங்கள் எதுவும் இல்லை. அதாவது சீனா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று யூகிக்க இடமிருக்கிறது.

இந்தியா - சீனா... எப்போது முடியும் எல்லைப்பிரச்னை?

இந்த எல்லைப் பிரச்னையின் கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நமது வரைபடங்களில் சீன ஆக்கிரமிப்புக் காஷ்மீர் என்று சுட்டப்பட்டிருக்கும் பகுதி அக்சை-சின் என்றழைக்கப்படுகிறது. இந்தியா அதை லடாக்கின் பகுதியாகப் பார்க்கிறது. சீனாவோ சின்ஜியாங் மாநிலத்தின் பகுதியாகப் பார்க்கிறது. உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் வசிக்கும் மாநிலம் சின்ஜியாங். அக்சை-சின் ஒரு புறம் சின்ஜியாங்கை ஒட்டியும் மறுபுறம் திபெத்தை ஒட்டியும் இருப்பதால் சீனாவிற்கு இது பூகோள ரீதியாக முக்கியமானது. சர்சைக்குரிய இன்னொரு முக்கியப் பகுதி வடகிழக்கில் உள்ள தவாங். அருணாசலப் பிரதேசத்தின் ஒரு பகுதி. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சீனா உரிமை கோருகிறது.

1954-ல் இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கையில் ஒப்பமிட்டன. அதே ஆண்டில் அக்சை-சின்னையும் அருணாசலப் பிரதேசத்தையும் உள்ளடக்கிய வரைபடத்தை இந்தியா வெளியிட்டது. சீனா இதை ஏற்க மறுத்தது. தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் உரசல்கள் தொடங்கின. 1959-ல் சீனப் பிரதமர் சூ-யென்-லாய் தில்லிக்கு வருகை தந்தார். நேருவும் சூவும் ஏராளமான ஆவணங்களையும் வரைபடங்களையும் முன்வைத்துக்கொண்டு மணிக்கணக்காகப் பேசினார்கள். நீண்ட வாதங்களின் முடிவில் சூ ஒரு சமரசத்தை முன் மொழிந்தார்.

மேற்கேயுள்ள அக்சை-சின் சீனாவிற்கு முக்கியமானது, அதை இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும்; பதிலுக்கு கிழக்கேயுள்ள தவாங் உள்ளிட்ட அருணாசலப் பிரதேசத்தை சீனா விட்டுக்கொடுக்கும். இதன் உட்பொருள் என்னவென்றால், மேற்கே இந்தியாவின் கோரிக்கை பலமானது. ஆனால், இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும். கிழக்கே சீனாவின் கோரிக்கை வலுவானது. என்றாலும் சீனா விட்டுக்கொடுக்கும்.

நேரு இந்தச் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. கருத்து வேறுபாடுகள் சர்சைகளாக வளர்ந்தன. 1962-ல் போராக வெடித்தது. சீனா, அக்சை-சின்னைக் கடந்து லடாக்கிலும், மக் மோகன் கோட்டைக் கடந்து அருணாசலப் பிரதேசத்திலும் நுழைந்தது. முடிவில் அருணாசலப் பிரதேசத்திலிருந்தும் லடாக்கிலிருந்தும் பின்வாங்கிக்கொண்டது. அக்சை-சின் சீனாவின் வசமானது. அருணாசலப் பிரதேசம் இந்தியாவிடம் தங்கியது.

போருக்குக் கால் நூற்றாண்டுக்குப்பிறகு 1988-ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சீனத் தலைவர் டெங்-சியோ-பிங்-கைச் சந்தித்தார். எல்லைப் பிரச்னைகளை அப்போதைக்கு ஒதுக்கி வைப்பது என்று முடிவானது. வணிகம் தழைத்தது. 1993-ல் நரசிம்ம ராவ் - சீனப் பிரதமர் லீ பெங் இடையில் உருவான எல்லைச் சமாதான உடன்படிக்கையும் முக்கியமானது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கோடு என்பது இல்லை. 1959 முதலே சீனா நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு (line of actual control-LAC) என்றொரு சொற்றொடரைப் பயன்படுத்தி வந்தது. யார் யாரிடம் எந்தெந்தப் பகுதிகள் உள்ளனவோ அவை அவரவரின் கட்டுப்பாட்டில் நீடிக்கும். அப்படியான பகுதிகளின் எல்லையைப் பிரிக்கும் கோடுதான் நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு. 1993 உடன்படிக்கையானது நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடே மறு தீர்மானம் வரும்வரை எல்லைக் கோடாக நீடிக்கும் என்று ஏற்றுக்கொண்டது. இந்தப் பகுதிகளில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்றும் இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைப் பகுதிகளிலும் அவ்வப்போது உரசல்கள் நிகழவே செய்தன. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, மூன்றுமுறை உரசல்கள் நடந்து, எல்லைப்பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது. 2014-ல் கிழக்கு லடாக்கில் சுமார் (Chumar) என்கிற இடத்தில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றபோது இந்திய ராணுவம் தடுத்தது. படைகள் நேருக்கு நேர் நின்றன. 16 நாள்கள் நீடித்த இறுக்கம் ராஜிய, ராணுவ மட்டத்திலான பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தணிந்தது. 2015-ல் லடாக்கின் வடபகுதியில் புர்ட்சே என்கிற இடத்தில் சீன ராணுவம் அமைத்த குடில் ஒன்றை எல்லைப்புறக் காவல்படை அகற்றியதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் துருப்புகள் குவிக்கப்பட்டன. எனினும் களத்தில் உள்ள ராணுவ மட்டத்திலேயே நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பலன் இருந்தது. ஒரு வார முடிவில் படைகள் பின்வாங்கிக் கொண்டன.

இந்தியா - சீனா... எப்போது முடியும் எல்லைப்பிரச்னை?

இந்த இரண்டு சம்பவங்களோடும் ஒப்பிடுகையில், 2017-ல் நிகழ்ந்த தோக்லாம் உரசல் தீவிரமானது. 73 நாள்கள் நீடித்தது. தோக்லாம் 100 சதுர கி.மீ பரப்பளவுள்ளது. பள்ளத்தாக்குகளும் சமதளங்களும் நிரம்பியது. இந்திய- சீன- பூடான் முத்தரப்பு எல்லையில் பூடான் பகுதியில் உள்ளது. இங்கே சீனா சாலை அமைக்க முயன்றது. இந்தியா தடுத்தது. இரு தரப்பு வீரர்களும் கண்ணோடு கண் நோக்கும் தூரத்தில் நின்றுகொண்டனர்.

அந்தச் சூழலில்தான் பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜிங் பிங்கும் வுகான் நகரில் சந்தித்தனர். வுகான் சந்திப்பின் நட்புணர்வு 2019-ல் நடந்த மாமல்லபுரம் சந்திப்பிலும் தொடர்ந்தது. எனவே இனி மோதல் போக்கு இருக்காது என்று நம்பப்பட்டது. ஆனால் அது பொய்த்துவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா தனது பகுதியில் சாலைகள் அமைக்க முற்பட்டதுதான் இப்போதைய பதற்றத்தின் தொடக்கப்புள்ளி. இப்போதையச் சூழல் முந்தைய உரசல் சம்பவங் களிலிருந்து பெரிதும் மாறுப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் இந்திய சீன எல்லைப் பகுதிகள் குருதியால் நனைந்ததில்லை. இங்கே தோட்டாச் சத்தமும் கேட்டதில்லை. ஆனால் இந்த மோதலின்போதோ 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தன் தரப்பில் ஏற்பட்ட இழப்புகளைச் சொல்ல மறுத்துவருகிறது.

நான்கரை மாதங்களாக நிலவும் பதற்றச் சூழலில், இரண்டு அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டது நிச்சயமாக ஒரு ஒளிக் கீற்றுதான். ஆனாலும் பிரச்னை முழுமையாக முடிவுக்கு வந்ததாகச் சொல்ல முடியாது. இந்தச் சூழலில் இந்தியா என்ன செய்யலாம்?

இந்தியா - சீனா... எப்போது முடியும் எல்லைப்பிரச்னை?

முதலாவதாக, அரசு எல்லையில் உள்ள நிலவரத்தை மக்களுக்கு வெளிப்படையாகத் தெளிவுபடுத்தலாம். இரண்டாவதாக, இது நிச்சயமாக யுத்தத்திற்கான நேரமில்லை. ராஜிய வழிகளில் தீர்வுகளை மேற்கொள்வதே நல்லது. அதே வேளையில் அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பணியாது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மூன்றாவதாக, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் பலவும் சீனாவின் உற்பத்தியையும் அதன் விநியோகச் சங்கிலியையும் அதிகமாகச் சார்ந்திருக்கின்றன. இதை ஒரு நாளில் நேர் செய்துவிட முடியாதுதான். ஆனால் சீனச்சார்பு இல்லாமல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும். இவற்றைச் சாத்தியமாக்குவதன் மூலம் இந்தியா சீனப்பிரச்னையைக் கையாளலாம்.