Published:Updated:

அதிபருக்கு எதிராய் அமெரிக்க அணுகுண்டுகள்!

ஜான் பால்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான் பால்டன்

ஜின் பிங்குடனான தனிப்பட்ட நட்பால் இது சாத்தியமானது என்கிறார் ட்ரம்ப்.

கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. பக்கத்து நாடான கனடாவில் தொற்று எண்ணிக்கை பெருமளவு குறைந்தாலும், ட்ரம்ப் ராஜ்ஜியத்தில் குறையவில்லை. இந்த நெருக்கடியையே தீர்க்க முடியாத ட்ரம்புக்கு இன்னொரு தலைவலி வந்திருக்கிறது, ஒரு புத்தகத்தின் மூலம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் அவரைக் குற்றம் சாட்டி பல புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது, ட்ரம்ப் சற்றும் எதிர்பாராதது. ட்ரம்ப் ஆட்சியில் 18 மாதங்கள் ‘தேசியப் பாதுகாப்பு ஆலோசக’ராக இருந்த ஜான் பால்டன் வெளியிட்டி ருக்கும் `எல்லாம் இந்த அறையில்தான் நிகழ்ந்தன’ (The Room where it happened) என்ற புத்தகம்தான் அது. ட்ரம்ப் பற்றிய பல உண்மைகளை வெளியிடும் அந்தப் புத்தகம் அமெரிக்காவில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

ஜான் பால்டன்
ஜான் பால்டன்

‘ட்ரம்பின் ஒரே குறிக்கோள் 2020. தேர்தலில் வெற்றிபெறுவது, அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர் தயாராக இருந்தார்’ என்பதுதான் புத்தகத்தின் சாராம்சம். தேர்தலில் வெற்றிபெற, சீன அதிபர் ஜின் பிங்குடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் ட்ரம்ப். சீனாவில் இஸ்லாமிய சிறுபான்மையினர்களை அடக்கியாள முகாம்களை அமைப்பதுதான் சரியான திட்டம் என பிங்குக்கு ஆலோசனை தருகிறார் ட்ரம்ப். (மெக்ஸிகோ சுவர் நாயகனுக்கு இப்படியான திட்டங்கள் எழாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!) ஹாங்காங் போராட்டங்கள், இஸ்லாமிய , திபெத்திய சிறுபான்மையினர்களைப் பெரிய அளவில் ஒடுக்குதல் போன்றவற்றில் கம்யூனிஸ்ட் ஜின் பிங்கின் சீன அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது. பின்னர் வேறொரு சூழலில், சீன மொபைல் நிறுவனமான ZTE பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக ஆதாரங்கள் சிக்குகின்றன. அந்த நிறுவனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், சீனாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைய வைக்கலாம் என முடிவு கட்டுகிறார்கள் ட்ரம்பின் ஆலோசகர்கள். எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு, ‘ZTE நிறுவனத்தை மீண்டும் முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஜின் பிங்குடன் பேசினேன். சீனாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல் உருவாகும். அதைத் தடுக்க வேண்டும்’ என அதற்கு முரணாக ட்விட் செய்கிறார் ட்ரம்ப். அதன் பின்னர் இந்தச் சீன நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிலிருந்து கருவிகள் வாங்கத்தொடங்குகிறது. எல்லாம் தன்னால்தான் எனப் பெருமைகொள்கிறார் ட்ரம்ப். ஜின் பிங்குடனான தனிப்பட்ட நட்பால் இது சாத்தியமானது என்கிறார் ட்ரம்ப்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ஜின் பிங்கின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சீனாவை பாதிப்பதில்லை. புதினின் தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் ரஷ்யாவை பாதிப்பதில்லை. ஆனால், ட்ரம்ப்பின் விருப்பங்கள் அமெரிக் காவை பாதிக்கின்றன. இறுதிவரையில் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் அரசியல் விருப்பங்களுக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியப் போவதில்லை’ எனக் குற்றம் சாட்டுகிறார் பால்டன். அதே போல், உக்ரைன் முறைகேடுகள், ஈரான் போர் குறித்த முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள். அது இந்தியா போன்ற நாடுகளை பாதிக்கும் என்றாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை என்பதும் பால்டனின் குற்றச்சாட்டுகள்.

சீனாவுக்கும் அமெரிக்கா வுக்குமான வர்த்தகப் போரில் யார் வெல்வார்கள் என உலகமே உற்று நோக்கும் வேளையில், ‘ட்ரம்ப்பையே அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கிறேன்’ என 2018-ல் நேசக்கரம் நீட்டு கிறார் ஜின் பிங். மரணிக்கும் வரையில் சீனாவின் அதிபர் ஜின் பிங்தான் என்பதை அறியாதவரில்லை ட்ரம்ப். அப்படியொரு வாய்ப்பை அமெரிக்க மக்களும் தனக்கு வழங்க விரும்புவதாகவும், அரசியல் சட்டங்களில் அதற்குண்டான மாற்றங் களைப் பரிசீலித்து வருவதாகவும் பதில் சொன்னாராம் ட்ரம்ப். ரஷ்யாவில் புதின் செய்திருக்கும் மாற்றத்தால் அங்கு 2036 வரை அவர்தான் அதிபர். ஜின் பிங், புதின் போன்று தானும் நிரந்தர அதிபராக இருக்க வேண்டும் என்பதுதான் ட்ரம்பின் ஆசையும். ஆனால் அமெரிக்காவின் அரசியல் சட்டமும் ஜனநாயகமும் அதை அனுமதிக்கப்போவதில்லை.

 மேரி,  டேவிட் என்ரிச்
மேரி, டேவிட் என்ரிச்

பால்டன் தான் ராஜினாமா செய்ததாகச் சொல்கிறார். ஆனால், ட்ரம்ப் தான்தான் பால்டனை வெளியேற்றியதாய்ச் சொல்கிறார்.இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள் இருவருக்கும் உண்டு. பால்டனும் ஒன்றும் புனிதர் இல்லை என்பதை அமெரிக்கா அறியும். 2005-ல் ஐக்கிய நாடுகள் சபைக்கு பால்டனை அமெரிக்காவின் தூதுவராக நியமிக்க முடிவெடுத்தபோது போராட்டங்கள் வெடித்தன. ஈரான் போர் நடந்தே தீர வேண்டும் என உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர், சீன வெறுப்பு நிரம்பியவர் என பால்டனின் வரலாற்றிலும் கறுப்புப் பக்கங்கள்தான் அதிகம்.

2019-ல் ஈரான், ஆளில்லா அமெரிக்க டிரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்துகிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை திருப்பித் தாக்கத் தயாராகிறது. ஆனால், ட்ரம்ப் திடீரென “150 ஈரானிய மக்கள் கொல்லப்படுவார்கள். அளவுக்கு அதிகமான உடல்கள்” எனக் குறிப்பிட்டு, அந்த மிஷனைக் கடைசி நொடியில் வேண்டாம் என முடிவு செய்கிறார். இப்படி முடிவெடுக்கும் ஒரு அதிபர் நமக்குத் தேவையா என்கிறார் பால்டன். ஆக ட்ரம்ப் தன் அரசியல் சுயநலத்துக்காக எடுத்த முடிவால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டாலும், பால்டனுக்கு அதில் உடன்பாடில்லை என்பது அவரை மனிதாபிமானமற்ற நிர்வாகியாகவே காட்டுகிறது. பால்டன் யோக்கியர் அல்லர். ஆனால் ட்ரம்ப் மீதானது அவரது குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துவிட முடியாது.

புத்தகத்தில் இறுதியாக பால்டன் சொல்வது இதுதான் , “ட்ரம்ப், அதிபர் வேலைக்கு லாயக்கில்லாத நபர். அதற்கான எந்தத் திறமையும் அவருக்கு இருப்பதாக நான் கருதவில்லை.”

பால்டன் இருக்கட்டும். கடந்த வாரம் ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி ‘Too Much and Never Enough’ என்ற புத்தகத்தை ‘உலகின் மிக மோசமான அயோக்கியனை எங்கள் குடும்பம்தான் அதிபராக்கியது’ என்ற அடைமொழியுடன் வெளியிட்டிருக்கிறார். பள்ளி நாள்களில் தன்னை அனைவரும் ட்ரம்ப் என விளித்ததை எண்ணிப் பெருமை அடைந்திரு க்கிறேன் எனக் குறிப்பிடும் மேரி, ஏப்ரல் 2017-ல் (ஜனவரியில் ஆட்சிக்கு வருகிறார் ட்ரம்ப்) முதல் முறையாக வெட்கித் தலை குனிந்தேன் என்கிறார். ட்ரம்ப் தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலிலிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வரி மோசடி செய்திருக்கிறார், கல்லூரி நாள்களில் டொனால்டு ட்ரம்ப், வேறு ஒருவரை அவருக்குப் பதிலாகத் தேர்வெழுத அனுப்பினார் என்று ஏகப்பட்ட குற்றச் சாட்டுகளை அடுக்குகிறார்.

அதிபருக்கு எதிராய் அமெரிக்க அணுகுண்டுகள்!

டூய்சய் என்னும் ஜெர்மன் வங்கியிடமிருந்து 1998-ல் 400 மில்லியன் டாலர் கடனாகப் பெறுகிறார் ட்ரம்ப். அதிபரா வதற்குள் 2 பில்லியன் டாலர்வரை கடன் பெற்றிருக் கிறார். அதிபர் ட்ரம்ப்பைவிட தொழிலதிபர் ட்ரம்ப் மோசமானவர். நிறுவனங் களை மூடுவது, சிறு இழப்பீடுகளை வாங்கிக் கொள்ள நிர்பந்திப்பதென ட்ரம்பின் தொழில் முகம் மோசடிகள் நிறைந்தது என்கிறது ஜூன் மாதம் வெளியான டேவிட் என்ரிச்சின் ‘டார்க் டவர்ஸ்’ புத்தகம்.

நாட்டை ஆள்பவர் மோசடிக்காரராகவும் பொய்யராகவும் நிர்வாகத் திறமையற்றவராகவும் இருந்தால் அந்த நாடு என்ன ஆகும், அவர் எப்படிப்பட்ட விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு அமெரிக் காவும் விதி விலக்கல்ல.