Published:Updated:

ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!

ட்ரம்ப்
News
ட்ரம்ப்

``ட்ரம்ப்புக்கு மருத்துவமனையில் இருப்பது சலிப்பை உண்டாக்கியது. தன் உடல்நலம் பற்றிய செய்திகளை மருத்துவமனையிலுள்ள தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்துவந்தது அவருக்குச் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.''

லுறுஅடாவடிகளுக்குப் பெயர்போனவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற காலம் தொட்டே பல வேடிக்கையான கருத்துகளைப் பகிர்ந்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவருகிறார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருந்த சமயத்தில், `மாஸ்க் அணிய மாட்டேன்’ என்று அடம்பிடித்தவர் ட்ரம்ப். ``பல்வேறு நாடுகளின் அதிபர்களும் மாஸ்க் அணிந்திருப்பதைப் பார்க்கும்போது அதைப் பற்றி யோசிக்கிறேன். ஆனால், நான் அணிய மாட்டேன் என்றே நினைக்கிறேன். அது எனக்கானது அல்ல'' என்று பேசி அனைவரையும் அசரடித்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Matt York

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்திலுள்ள நாடு அமெரிக்காதான். அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பட்டு மையம், மருத்துவ வல்லுநர்கள், அதிபரின் மனைவி மெலனியா ட்ரம்ப் உட்பட பலரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று பிரசாரம் செய்துவந்த நிலையிலும் மாஸ்க் அணியாமல் அமெரிக்காவைச் சுற்றி வந்தார் ட்ரம்ப். பொது இடங்களுக்குச் செல்லும்போதும், ஆலோசனைக் கூட்டங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் மாஸ்க் அணியாமல் இருந்துவந்த ட்ரம்ப், கடந்த ஜூலை மாதத்தில், காயம் ஏற்பட்டு வால்டர் ரீடு ராணுவ மருத்துவமனையில் (Walter Reed National Military Medical Center) சிகிச்சை பெற்றுவந்த ராணுவ அதிகாரிகளைப் பார்வையிடச் சென்றபோது மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். `முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்' என்று அந்தச் சமயத்தில் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தி ஆனது அந்தச் சம்பவம். `கொரோனா குறித்து எந்த பயமும் இல்லை என்பதுபோலச் சுற்றித் திரிந்தவர், மருத்துவமனை என்று வந்தவுடன் மாஸ்க் அணிகிறார்' என்ற விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டன. இது குறித்து விளக்கம் ஒன்றையும் அந்தச் சமயத்தில் தெரிவித்திருந்தார் அதிபர் ட்ரம்ப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எந்த இடத்தில், எந்தச் சூழலில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர்
ட்ரம்ப்
ட்ரம்ப்
AP
``அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே துணிச்சல் மிகுந்தவர்கள், உடல் வலிமை உடையவர்கள் என்பதை மக்களுக்குக் காட்டவே அதிபர் ட்ரம்ப் மாஸ்க் அணியாமல் இருந்துவந்தார்'' என்று ட்ரம்ப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துவந்தன.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிபர் ட்ரம்ப், அவருடைய மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ட்ரம்ப் - ஜோ பைடன் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிபர் தேர்தலுக்கான முதல் நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், கொரோனா பேரிடரை மோசமாகக் கையாள்வதாகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஜோ பைடன். அந்த விவாதத்தில் ட்ரம்ப்புடன் கலந்துகொண்ட அவரின் உயர்மட்ட ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இடைவெளி எதுவும் எடுக்காமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்த ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், எனக்கும் என் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்'' என்று பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்
ட்ரம்ப்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்
AP |Alex Brandon

சிறிது நேரத்தில், தனக்கும் தன் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டர் மூலம் தகவல் வெளியிட்டார் ட்ரம்ப். தாங்கள் இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறத் தொடங்கியிருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார் அவர். இதையடுத்து கடுமையான காய்ச்சல் மற்றும் லேசான கொரோனா அறிகுறிகள் தென்படுவதால் உயர்மட்ட சிகிச்சைக்காக, சனிக்கிழமை அன்று வால்டர் ரீடு ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப்
AP | Julio Cortez

வயது மூப்பும், அதிக உடல் எடையும்கொண்ட ட்ரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் (Mark Meadows) ட்ரம்ப் உடல்நிலை குறித்துப் பேசினார். ``அதிபர் ட்ரம்ப்பின் உடல்நிலை வெள்ளிக்கிழமை அன்று கவலைக்கிடமாக மாறியதால்தான் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர், கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடப்போகும் அடுத்த 48 மணிநேரம் மிக முக்கியமானது" எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து ட்ரம்ப்பின் மருத்துவ ஆலோசகர் சீன் கோன்லி (Sean Conely) ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரின் ஆக்ஸிஜன் அளவு இரண்டு முறை குறைந்தது. அதையடுத்து அவருக்கு வெளியிலிருந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. ஆன்டி வைரஸ் மருந்துகள் நரம்புவழியாகச் செலுத்தப்பட்டுவருகின்ரன. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சீன் கோன்லி, ட்ரம்ப்பின் மருத்துவர்

ட்ரம்ப்பின் மருத்துவர் சீன் கோன்லியும், வெள்ளை மாளிகை தலைமை ஆலோசகர் மார்க் மீடோஸும் கூறிய கருத்துகள் முரண்பாடாக இருக்கின்றன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து சில மணி நேரம் கழித்து `ட்ரம்ப் நலமாக இருக்கிறார்' என மார்க் மீடோஸ் தெரிவித்தார். மார்க் மீடோஸின் முந்தைய கருத்து ட்ரம்ப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால்தான் தற்போது மிடோஸ் மாற்றிப் பேசியிருக்கிறார் என்பது போன்ற செய்திகளும் வெளியாகின. இதைத் தொடர்ந்து அமெரிக்க பிரதிநிகள் சபையின் தலைவராக இருக்கும் நான்ஸி பெலோசி (Nancy Pelosi), ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்துத் தெளிவான விளக்கம் தர வேண்டுமென வலியுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில்,

நான் ஒரு சிறிய சர்ப்ரைஸ் விசிட் மேற்கொள்ளவிருக்கிறேன். சிகிச்சையின்போது கொரோனா தொற்று பற்றி நான் நன்றாக அறிந்துகொண்டேன். இதுதான் (மருத்துவமனை) உண்மையான பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியில் நான் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர்

கோட், சூட்- உடன் அந்த வீடியோவில் பேசியிருந்த ட்ரம்ப், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை வேளையில், கறுப்பு நிற SUV காரில் மாஸ்க் அணிந்துகொண்டு வால்டர் ரீடு மருத்துவமனைக்கு அருகேயுள்ள சாலையில் வலம்வந்தார் ட்ரம்ப். அமெரிக்க அதிபரின் ரகசிய சேவைப் பாதுகாப்பு வாகனங்களுக்கு நடுவே கறுப்பு நிற காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். மருத்துவமனைக்கு வெளியில் கூடியிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கிக் கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார். இந்தச் சம்பவம் அவருடைய ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், அமெரிக்காவைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

``அமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சத்திலிருந்தபோது மாஸ்க் அணிய மாட்டேன் என்றவர், தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் காரில் வலம்வருகிறார். அவர் பயணித்த வாகனத்தின் ஓட்டுநருக்கும், அவருடன் வாகனத்தில் பயணித்த பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியிருக்கையில் ஏன் இப்படிச் செய்துவருகிறார் ட்ரம்ப்... இது அலட்சியத்தின் உச்சம்'' என்று அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

``ட்ரம்ப்புக்கு மருத்துவமனையில் இருப்பது சலிப்பை உண்டாக்கியது. தன் உடல்நலம் பற்றிய செய்திகளை மருத்துவமனையிலுள்ள தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்துவந்தது அவருக்குச் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் தகவல் கூறியதாக அமெரிக்கச் செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து, `தனக்கு ஏற்பட்ட சோர்வைத் தீர்த்துக்கொள்ளத்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் நலன் குறித்துக் கவலைப்படாமல் காரில் பயணித்திருக்கிறார் ட்ரம்ப்' என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் ட்விட்டரில் எழத் தொடங்கின.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
AP

இது குறித்து விளக்கம் தெரிவித்திருக்கும் வெள்ளை மாளிகைத் தரப்பு, `` `அதிபர், காரில் பயணம் செய்வது பாதுகாப்பானதுதான்' என்று மருத்துவர்கள் தெரிவித்த பிறகுதான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிபர் உட்பட இந்தப் பயணத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடும், தகுந்த பாதுக்காப்போடும்தான் இதில் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாமல், அதிபர் ட்ரம்ப் சிறிது தூரம் மட்டுமே பயணம் மேற்கொண்டார்'' என்று கூறியது.

இந்தச் சம்பவம் குறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவர் ஜேம்ஸ்.பி.பிலிப்ஸ் (James P. Phillips) கூறுகையில்,

அதிபரின் எஸ்யூவி வாகனம் துப்பாக்கிக் குண்டுகள் மட்டும் நுழைய முடியாததல்ல; ரசாயனத் தாக்குதல்கள்கூட உள் நுழையாதபடி சீல் செய்யப்பட்டிருக்கும் வாகனம் அது. அந்த வாகனத்துக்குள் கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். இந்த பொறுப்பற்ற தன்மை அதிர்ச்சியூட்டுகிறது.
ஜேம்ஸ்.பி. பிலிப்ஸ், மருத்துவர்
ஜோ பைடன் - ட்ரம்ப்
ஜோ பைடன் - ட்ரம்ப்
AP | OLIVIER DOULIERY

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ட்ரம்ப், கொரோனா சிகிச்சை காரணமாகப் பிரசாரத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர், இன்று அல்லது நாளை குணமடைந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. ட்ரம்ப் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் குறைந்தது 10 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அப்படித் தனிமைப்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான இரண்டாவது நேரடி விவாதத்தில் ட்ரம்ப் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும். அந்த விவாதத் தேதி தள்ளிப்போகக்கூட வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அமெரிக்கத் தேர்தலில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் சிகிச்சை நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபடாததால் ஜோ பைடனுக்கு அதிகம் கவனம் கிடைக்கும் என்றும் சில செய்தி நிறுவனங்கள் கூறிவந்த நிலையில், சிகிச்சைக்கிடையே காரில் பயணித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் ட்ரம்ப். ``இந்தச் சிறிய பயணத்தின் மூலம், தன் உடல்நிலை குறித்து வெளியான போலிச் செய்திகளுக்கு விடை கொடுத்தது மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபருக்கான ரேஸில் தான் முன்னணியில் இருப்பதையும் நிரூபித்திருக்கிறார் ட்ரம்ப்'' என்று அவரின் ஆதரவாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள். இந்தநிலையில் `அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் ட்ரம்ப் முழுவதுமாக குணமடைவாரா, தன் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா?’ எனப் பல கேள்விகள் அமெரிக்க மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
``ட்ரம்ப் விஷயத்தில் எதையுமே சரியாகக் கணிக்க முடியாது. சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர் திடீரென காரில் வலம்வந்ததைப்போலத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன. இந்தத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.