Published:Updated:

உக்ரைன் அதிபருடன் ரகசிய உரையாடல்... ட்ரம்ப் பதவிக்கு ஆபத்தா?

டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடென், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி ஆகியோரின் முக்கோண சர்ச்சை கதையே இன்றைய களேபரத்துக்கான காரணம்.

உலக அரசியல் என்று நாம் சொல்கையில், ஏறத்தாழ 60 சதவிகிதம் அது அமெரிக்க அரசியலையே குறிக்கிறது. அப்படி உலக நாடுகளுக்கெல்லாம் ஏகோபித்த மன்னனாக விளங்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் இன்றைய அதிமுக்கியப் பிரச்னை அந்நாட்டு அதிபரால் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மீது தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க அதிபர்மீது இத்தகைய அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறை. அமெரிக்க அதிபரை இவ்வளவு சிக்கலில் மாட்டவைத்தது எது? அப்படி உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு? உக்ரைன் அதிபரிடம் அமெரிக்கா அதிபர் என்ன பேசினார்? இனி என்ன நடக்கும்? பார்ப்போம்...

அமெரிக்கா - அதிபர் தேர்தல்:

இன்றைய உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பதவி என்றால் அது அமெரிக்கா அதிபர் பதவிதான். அமெரிக்கா அரசியலமைப்பின்படி அதிபர் பதவிக்கான காலம் 4 ஆண்டுகள். அதுமட்டுமன்றி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்க முடியும். 1992-ல் தொடங்கி கிளின்டன், புஷ், ஒபாமா என அனைவரும் இருமுறை வெற்றிகண்டு, ஒவ்வொருவரும் எட்டாண்டுகள் அதிபராக ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். ஆனால், 2016-ல் அதிபர் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நான்காண்டுகள்கூட ஆட்சியில் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கும் வரவிருக்கும் அதிபர் தேர்தல்தான் அடிப்படைக் காரணம். அமெரிக்காவில், அடுத்த அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடென், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி ஆகியோரின் முக்கோண சர்ச்சைக் கதையே இன்றைய களேபரத்துக்கான காரணம்.

டொனால்டடு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
வேட்டையாடப்பட்ட பாக்தாதி...     ‘லைவ்’வில் ரசித்த ட்ரம்ப்!

பதவியேற்றது முதலே சர்ச்சைக்குரியவராகத்தான் இருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்பதற்கு முன், அவர் ஒரு தொழிலதிபர். அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம்... அவ்வளவே. எந்த வித அரசியல் பின்புலமோ, முன் அனுபவமோ இல்லாது, அரசு அதிகாரத்திலோ... ராணுவத்திலோ பணியாற்றாது அமெரிக்காவின் அதிபர் ஆனது இவர் மட்டுமே. ரஷ்யா உதவியோடு முறைகேடுகளில் ஈடுபட்டு அமெரிக்கா அதிபர் ஆனார் என்று அவரது தேர்தல் வெற்றியிலிருந்தே சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. அதைத் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் ட்ரம்ப் எடுத்த பெரும்பாலான கொள்கை முடிவுகளில் தொடங்கி, அவரது பேச்சுகள், கருத்துகள், செயல்பாடுகள் எல்லாமே சர்ச்சைக்குள்ளாயின. அதன் உச்சக்கட்டமாகத்தான் உக்ரைன் அதிபருக்கு அரசியல் சுயலாபத்துக்காக அழுத்தம் கொடுத்ததாகத் தற்போது அவர்மீது தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி

கிழக்கு ஐரோப்பியக் கண்டத்தில், ரஷ்யா, பெலாரஸ், போலந்து உள்ளிட்ட ஏழு நாடுகளையும் கருங்கடலையும் எல்லைகளாகக் கொண்ட நாடு, உக்ரைன். நமக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் போல உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பிரச்னையாக இருப்பது கிரிமீயா எனும் பகுதி. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான எல்லைப் போர், நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கிறது. இதில் 2014-ம் ஆண்டு, உக்ரைன் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கிரிமியா நாட்டில் போராட்டம் வெடித்தது. அப்போது, ரஷ்யா தனது ராணுவத்தை அந்நாட்டுக்குள் அனுப்பி, கிரிமியா நாட்டைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், ஏப்ரல் 20-ம் தேதி உக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், சின்னத்திரை நகைச்சுவை நடிகரான விளாடிமிர் செலென்ஸ்கி, குறுகிய அவகாசத்தில் எந்த முன் அரசியல் அனுபவமும் இல்லாதபோதும் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விளாடிமிர் செலென்ஸ்கி
விளாடிமிர் செலென்ஸ்கி

அமெரிக்கா - உக்ரைன் உறவு

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையே அமெரிக்கா உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் அடிப்படை சாராம்சம். ரஷ்யா, இருநாடுகளுக்குமான பொது எதிரி. 1991-ம் ஆண்டு, சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்ததிலிருந்து அமெரிக்கா உக்ரைன் இடையேயான உறவு தொடங்கியது. பின்னர், 2014-ம் ஆண்டு சட்டவிரோதமாக கிரிமீயாவை ரஷ்யா ராணுவத்தை அனுப்பி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, ராணுவ பலத்தில் மிகவும் பின்தங்கியிருந்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்யத் தொடங்கியது. ஏறத்தாழ கடந்த ஐந்தாண்டுகளில் அமெரிக்கா உக்ரைனுக்கு 1.6 பில்லியன் டாலர் ராணுவ உதவித் தொகை அளித்துள்ளது. ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் தன்னுடைய பிடிமானத்தை அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணங்களுக்காக, உக்ரைனுக்குத் தொடர்ந்து பக்கபலமாக இருந்துவந்தது. இதன் காரணமாக, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பல வருடங்களாகவே உக்ரைனுக்கு முக்கிய இடம் உண்டு.

ட்ரம்ப் - விளாடிமிர் செலென்ஸ்கி தொலைபேசி உரையாடல்

தற்போதைய பிரச்னைக்கான தொடக்கப்புள்ளி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி உடன் மேற்கொண்ட ஒரு தொலைபேசி அழைப்பிலிருந்து தொடங்குகிறது. உக்ரைனில் எரிவாயு நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருக்கிறார், ட்ரம்ப்பின் அரசியல் எதிரி ஜோ பிடெனின் மகன் ஹன்டர். இவர், தன் தந்தையின் பதவியால் பலன் அடைந்ததாகப் புகார் இருக்கிறது. உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப், ஹன்டர்மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததாகவும் அப்போது ராணுவ நிதியுதவி தொடர்பாக விளாடிமிர் செலென்ஸ்கியிடம் ட்ரம்ப் பேசியதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு 'விசில்ப்லோயர்' (Whistle-blower) புகார் தெரிவித்தார்.

இந்தத் தொலைபேசி உரையாடலுக்கு முன்னதாக, அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிவந்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவித் தொகை நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை 25-ம் தேதி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியுடன் பேசியதாகச் சொல்லப்படும் இந்த சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார், அமெரிக்க பாராளுமன்ற அவை சபாநாயகர் நான்சி பெலோசி.

விளாடிமிர் செலென்ஸ்கி,  ட்ரம்ப்
விளாடிமிர் செலென்ஸ்கி, ட்ரம்ப்

பதவிநீக்கத் தீர்மானம் (IMPEACHMENT)

`இந்த மாஸ் காட்ட, வேற யார் இருக்கா?' - ஒரு ரஜினி ரசிகையின் வெறித்தன வாழ்த்து

அமெரிக்க நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, இரண்டு அவைகள் செயல்படுகின்றன. கீழவையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். செனட் என அழைக்கப்படும் மேலவையில், மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். முதலில் இந்தத் தீர்மானங்கள் கீழவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அங்கு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், இந்தத் தீர்மானம் மேலவையில் விவாதிக்கப்படும். இந்த விவாதம் அமெரிக்காவின் தலைமை நீதிபதியின் முன்னிலையில் நடைபெறும். இதில் மூன்றில் இரண்டு என்ற கணக்கில், பெரும்பான்மை ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கப்படுவார். இதுவரை அமெரிக்கா அரசியலில் இந்தப் பதவி நீக்கத் தீர்மானத்தை சந்திக்கும் நான்காவது அதிபர் ட்ரம்ப் ஆவார்.

இப்போது இந்த விசாரணை என்ன நிலையில் உள்ளது?

ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மான நடைமுறையில், கடந்த செப்டம்பர் 24-ம் தேதி, டொனல்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தார், அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி. ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரித்த ஆணையம் 'ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்' என்பதை உறுதிசெய்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தைத் தயாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு, அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது.

`நான் மட்டும் இல்லை என்றால்... மூன்றாம் உலகப்போர்தான்!’ -நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப்

இதில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டைத் தடுத்ததாகவும் இரு பிரிவுகளின் கீழ் அவர்மீது புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்து என்ன ?

ட்ரம்ப் மீதான இந்தக் குற்றத் தீர்மானத்தின்மீது அமெரிக்கா நாடாளுமன்ற கீழவையில் முதல்கட்ட வாக்கெடுப்பு நடைபெறும். அதில், பெரும்பான்மை பெற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தீர்மானம் அமெரிக்கா செனட் எனப்படும் மேலவைக்குக் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். செனட் சபையில் இந்தத் தீர்மானம், ஜனவரி மாதம் விவாதிக்கப்படலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

கீழவையில் பெரும்பான்மைபெற்றுள்ள ஜனநாயகக் கட்சி, அங்கு ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், ட்ரம்ப்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள மேலவையில், அவரது சொந்தக் கட்சியினரே ட்ரம்ப்புக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அவர் பதவி பறிபோகும். ஆகவே இன்றைய அமெரிக்க அரசியல் நிலைப்பாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்க அதிபரின் பதவிக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்றே தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு