Published:Updated:

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் - தாக்கங்கள் என்னென்ன?!

2024 தேர்தல் களத்தில் ட்ரம்ப்

2024-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதை `நாயகன் மீண்டும் வருகிறான்’ என்ற பாணியில் அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் - தாக்கங்கள் என்னென்ன?!

2024-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதை `நாயகன் மீண்டும் வருகிறான்’ என்ற பாணியில் அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Published:Updated:
2024 தேர்தல் களத்தில் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்களை, மத்திய தேர்தல் ஆணையத்திடம்  தாக்கல் செய்த பிறகு, 2024-ம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் டொனால்டு ட்ரம்ப்.

இந்த மாதம் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டமாகவே இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இதில் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மை இடங்களை வென்றிருக்கிறது. இது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்தும் ஜோ பைடனுக்குச் சவாலாக இருக்கும். காரணம், எதிர்க்கட்சி பலமாக இருப்பதால், பைடனின் செயல்பாடுகள் முடங்கும். இது, அதிபர் போட்டியில் குதித்திருக்கும் ட்ரம்ப்புக்கு ஆதரவான நகர்வு இருப்பதைக் குறிப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பைடன் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இந்த மாற்றம் நடந்துள்ளது. ஆனால், கடந்த முறை தேர்தலில் ட்ரம்ப் வெல்ல வாய்ப்பு அதிகம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் தோல்வியைத் தழுவினார்.

ட்ரம்ப் - ஜோ பைடன்
ட்ரம்ப் - ஜோ பைடன்

2016-ம் ஆண்டு `அமெரிக்காவை மீட்டுருவாக்குவோம்’ என்னும் அடிப்படையில்தான் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ட்ரம்ப். தற்போது மீண்டும் அதே கருத்தை முன்வைத்து. 2024-ம் ஆண்டு `அமெரிக்க நாட்டைச் சீரழித்து வரும் சக்திகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லத் திட்டமிட்டு, தேர்தலில் போட்டியிடவிருப்பதாக’க் கூறியிருக்கிறார்.

பொதுவாக, உலக நாடுகள் மத்தியில் சக்தி வாய்ந்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. அதனால் அங்கு நடக்கும் ஒவ்வோர் அரசியல் நகர்வும் கூர்ந்து கவனிக்கப்படும். அது, ட்ரம்ப்பின் வருகைக்குப் பிறகு கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஜனநாயகத்தைப் பின்பற்றும் அமெரிக்காவில் தனிமனிதச் சுதந்திரம் உண்டு. இதனால்தான் மற்ற நாட்டினரும், அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் ஆர்வம்காட்டுகின்றனர். ஆனால் ட்ரம்ப் பதவி ஏற்புக்குப் பிறகு இது தலைகீழாக மாறியது. வெறுப்பு அரசியல், பொருளாதாரப் பாகுபாடு, இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறின.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
Evan Vucci

குறிப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு இறப்புக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்த நாளை `நல்ல நாள்’ என ட்ரம்ப் பேசியது மக்களிடையே பெரும் கொதிப்பை உண்டாக்கியது. அதேபோல், `அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்னும் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்டினரை நுழையத் தடைவிதித்தது ட்ரம்ப் அரசு. குடியேறிகள் மீது கடுமை காட்டுவது தொடங்கி பல சர்ச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது போன்ற நிகழ்வுகளால் புதிய அமெரிக்காவை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ட்ரம்ப்.

அதேபோல் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். தங்கள் நாட்டு நலனில் அக்கறை காட்ட வேண்டும், எனவே மற்ற நாடுகள் தேவையிலிருந்து தங்களை விலகிக்கொள்ளும் திட்டமாக இது பார்க்கப்பட்டது.

கறுப்பின மக்கள் போராட்டம்
கறுப்பின மக்கள் போராட்டம்

என்றாலும், தங்கள் நாட்டு மக்களின் நலனைத் தாண்டி, தன்னை முன்னிலைப்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதன் விளைவாகத்தான் 2010-ம் ஆண்டு மருத்துவ சேவை, நியாயமான விலையில் இருப்பதை உறுதிசெய்ய `ஒபாமா கேர்ஸ்’ என்னும் திட்டத்தைத் தொடங்கினார். இதைத் தீவிரமாக எதிர்த்தார் ட்ரம்ப். இதற்கு பதிலாக `அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கொண்டுவருவேன்’ என்றார். ஆனால், அப்படி எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. காரணம் அவர் இலவசங்களுக்கு எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இவர்மீது பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஹீரோயிச செயல்களையும் வில்லத்தனத்தோடு செய்யும் தொனிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ட்ரம்ப். 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பாதிப்பைச் சந்தித்தது. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது. அப்போது நோய் தடுக்க ஹெட்ராக்ஸின் குளோரோகுயின் பயன்படும் என்னும் தகவல் வெளியானது. ஆனால், உள்நாட்டுத் தேவைக்காக இந்த மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்திருந்தது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப், `அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பவில்லை என்றால் அதற்குரிய  விளைவுகளை இந்தியா சந்திக்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடி -ட்ரம்ப்
மோடி -ட்ரம்ப்

கொரோனவுக்குப் பிறகு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதார வீழ்ச்சி வேகமாகச் சரிசெய்யப்பட்டதாகவும். தற்போது அதில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் ட்ரம்ப். 2020-ம் ஆண்டில் கொரோனா காலத்தில் பொருளாதார மந்தநிலை ஆழமாக இருந்தது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகம், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் கைகளில் நிவாரணத்தைக் கொண்டு சேர்த்தது. அதனால் ட்ரம்ப் ஆட்சி வெளியேறியபோது பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. சொல்லப்போனால், 2021 வரை அது தொடர்ந்தது. அதனால் பொருளாதாரக் கொள்கைகள் முற்றிலும் உதவவில்லை என்ற வாதத்தை முன்வைக்க முடியாது என்கின்றனர் அங்கு இருக்கும் பொருளாதார வல்லுநர்கள். இதில் வேண்டுமானால் அவரின் நாயகத்தன்மை வெளிப்படலாம்.

ஆனால், கடந்தகாலங்களில் கொள்கைரீதியான தாக்கத்தை உலக அரங்கில் ட்ரம்ப் ஏற்படுத்தினார். குறிப்பாக, பழைமைவாதம், வெறுப்பு அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு

பருவநிலை மாற்றம் என்பது இல்லை என்று சொன்ன ட்ரம்ப், அது குறித்த செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க பாரிஸ் பருவநிலை ஒப்பந்த்திலிருந்து வெளியேறினார். இவரின் இந்தக் கருத்து ஏற்படுத்திய தாக்கம் கடுமையானது. ஆஸ்திரேலியக் காடுகள் எரிந்தபோது, “கடவுள் பார்த்துக் கொள்வார்” என அந்நாட்டு அதிபர் ஸ்காட் மார்ஸன் தெரிவித்தார். தற்போது, இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கும் அமெரிக்காவின் தாக்கம்தான் மற்ற நாடுகளான இஸ்ரேல், ஆஸ்திரேலியா,பிரேசில் ஆகிய நாடுகளிலும் இடதுசாரிக் கொள்கையை நோக்கித் திரும்பச் செய்திருக்கிறது. எனவே, அமெரிக்க அரசியல், உலக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது!