Published:Updated:

`அமெரிக்கத் தேர்தலுக்கு காத்திருக்கிறார்களோ?!' -எதிர்க்கட்சியை கிண்டலடித்து இரானை விமர்சித்த ட்ரம்ப்

நிபந்தனைகள் இன்றி இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையான போர் உச்சத்தை எட்டியுள்ளது. இரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இரான் தொடர் ஏவுகணைத் தாக்குதலை நடத்திவருகிறது. சுலைமானி இறந்த பிறகு மட்டும் இதுவரை 2 முறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டது இரான்.

இரான்
இரான்

இரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், இரண்டு முறை தாக்குதல் நடந்த பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறது. இரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது. மேலும், இரானில் விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தையும் இரான் ஏவுகணைகளே தாக்கியிருக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

`அவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், ஆனால்..!’ -  இரானின் நடவடிக்கையை விவரிக்கும் ட்ரம்ப்

இதற்கிடையில், `எந்த நிபந்தனையும் இன்றி இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது’ என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் ட்ரம்ப், இரான் குறித்துப் பேசியுள்ளார். ``இரான் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மிக மிக விரைவில் சீரமைக்க முடியும். இரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தை நாங்கள் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 150 பில்லியன் டாலர் நிதி வழங்கியபோது செழிப்பாக இருந்த இரான், தற்போது அப்படி இல்லை. அந்நாட்டில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. இரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதா எனத் தெரியவில்லை.

ஒருவேளை அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருந்து, அதில் பலவீனமான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனோ, எலிசபெத் வாரெனோ (Elizabeth Warren) வெற்றி பெற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என நினைக்கலாம். இரான் கடுமையான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை விரைவாகச் சரிசெய்ய அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பது அவர்களுடைய விருப்பம். என்னைப் பொறுத்தவரை மொத்த முடிவும் இரான் கைகளிலேயே உள்ளது” என்று பேசியுள்ளார்.