Election bannerElection banner
Published:Updated:

`இரண்டே கேள்விகள்; 52-48, 53-47!' - பதவி நீக்கத் தீர்மானத்தில் வென்ற அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்ததால் தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பிடனும் போட்டியிடவுள்ளனர். ட்ரம்ப், வரும் தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்காகப் பிற நாடுகளின் உதவியைக் கோரியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஜோ பிடன்
ஜோ பிடன்

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு!

உக்ரைன் நாட்டில் புரிஸ்மா ஹோல்டிங் (Burisma Holdings) என்ற இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் உள்ளது. 2014-ம் ஆண்டு ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது அவரின் மகன் ஹண்டர் பிடன், புரிஸ்மா நிறுவனத்தின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது, இந்நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கை விசாரித்த அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

அதில் ஜோ பிடனின் தலையீடு இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஜோ பிடன் மற்றும் அவரின் மகன் ஹண்டரைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு (Volodymyr Zelensky) ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார் எனக் கூறப்பட்டது. மேலும், இந்தப் புகார் தொடர்பாக விசாரணையைத் தடை செய்ய ட்ரம்ப் முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பிரதிநிதிகள் சபை!
பிரதிநிதிகள் சபை!
AP

பிரதிநிதிகள் சபை!

இது தொடர்பான விசாரணையில் ட்ரம்ப் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி. பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீர்மானம் தொடர்பான விவாதம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. சுமார் 14 மணி நேர விவாதத்துக்குப் பிறகு பதிவான வாக்குகளில் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 229 வாக்குகளும் அவருக்கு ஆதரவாக 198 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனால் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

`14 மணி நேர விவாதம்; எதிராக 198; ஆதரவு 229!' - நிறைவேறியது அதிபர் ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்

செனட் சபை!

இந்த நிலையில், நேற்று (இந்திய நேரப்படி நள்ளிரவு) அமெரிக்க செனட் சபையில் அதிபர் பதவி நீக்க தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்நாட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமை தாங்க செனட் சபை உறுப்பினர்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் அளித்து தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். ட்ரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா? இல்லையா? என்பது முதல் கேள்வி, இதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்று 48 பேரும் குற்றமற்றவர் என்று 52 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

செனட் சபை
செனட் சபை
AP

அடுத்ததாகக் காங்கிரஸ் குழுவின் விசாரணையைத் தடை செய்ய ட்ரம்ப் முயன்றாரா? இல்லையா? என்பது இரண்டாவது கேள்வியாக இருந்தது. இதில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக 53 வாக்குகளும் அவருக்கு எதிராக 47 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்த இரண்டு வாக்கெடுப்பிலும் ட்ரம்ப்புக்கு ஆதரவாகவே அதிக வாக்குகள் பதிவானதால் பதவி நீக்கத் தீர்மான புகாரிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 223 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்கொண்ட மூன்றாவது அதிபர் ட்ரம்ப். இதனால் இவர் மீதான குற்றச்சாட்டு மற்றும் பதவி நீக்கத் தீர்மானம் ஆகியவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் முறியடிக்கப்பட்ட பிறகு அவர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் பிரசார அறிக்கையில், ``அதிபர் ட்ரம்ப் முற்றிலும் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டார். இப்போது மீண்டும் அமெரிக்க மக்களின் நலனுக்காக வேலை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களுக்காக எதுவுமே செய்ய முடியாத ஜனநாயக கட்சியினரால் அதிபரை வெல்ல முடியாது என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் மீது இப்படிக் குற்றம்சாட்ட வேண்டியிருந்தது.

இது ஒரு பயங்கரமான சோதனை, மிகவும் முட்டாள் தனமானது, இது ஜனநாயக கட்சியினரின் பிரசார தந்திரம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குச் செய்தியாளர்களிடம் பேசுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

செனட் சபை
செனட் சபை
AP

``அதிபர் ட்ரம்ப், அமெரிக்க ஜனநாயகத்துக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவருகிறார். அவர் குடியரசுக் கட்சியினரின் சட்ட விரோதத்தை இயல்பாக்கிவிட்டார்” என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் செனட் சபையில் முறியடிக்கப்படும் என்பது முன்னரே அனைவரும் அறிந்த விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு