Published:Updated:

"நம் பணத்தை ஐரோப்பியர்களுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?" ட்ரம்ப்பின் கேள்விகளும் குழப்பங்களும்! பகுதி 8

டொனால்டு ட்ரம்ப்
News
டொனால்டு ட்ரம்ப்

"உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். உங்களுக்காக, அமெரிக்கர்களின் வரிப்பணத்தைச் செலவு செய்வது சரியல்ல" என்று அதிருப்தியுடன் பேசினார் ட்ரம்ப். ஓர் உலகம், ஓர் அதிபர், ஒரேயொரு ட்ரம்ப் - 8

அதிபராகப் பதவியேற்ற ஐந்தாவது நாளே ட்ரம்ப் நடத்திய முதல் பேச்சுவார்த்தை போர் பற்றியது. பாதுகாப்பு செயலாளர் மாட்டிஸ் அதில் ஆர்வமாகி, ஏமன் போருக்கான செயல்திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்.

ஏன் ஏமன்?

இன்றும் அல்கொய்தாவின் சில சீனியர் தலைகள் ஏமனில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாளர்கள் வேறு உருவாகியிருக்கிறார்கள். மொத்த கூட்டத்தையும் களை எடுக்க வேண்டும். இத்திட்டம் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா ஆட்சியிலேயே போடப்பட்ட திட்டம். பல சிக்கல்கள் எழும் என்ற காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. "மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்களையே இன்னும் தடுக்க முடியவில்லை. இந்நேரத்தில் இப்போர் தேவையற்றது'' என்றார் திட்ட மேலாளர் பேனோன். ஆனால், 'மாட்டிஸை அவர் போக்கில் விடுங்கள்' என்றார் ட்ரம்ப். முதல் சர்வதேச ராணுவ விவகாரமாக போருக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ட்ரம்ப்
ட்ரம்ப்
அதிகாலை சூரியன் விடிவதற்குள் தொடங்கிய முதல்நாள் போர் 50 நிமிடம் குழப்பமாகச் சென்றது. ஒருவர் பலி, மூவர் படுகாயம். வில்லியம் ரையான் ஓவன் என்ற அதிகாரி பலியானார். ஆனால், எதிர்த்தரப்பிலோ சாதாரண பொதுமக்கள், குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். போரின் விளைவு மோசமாக விமர்சிக்கப்பட்டது.

ட்ரம்ப்போ இறந்த ரையானின் மனைவி கேரின் ரையானை வெள்ளை மாளிகை அழைத்து, ஊடகங்களுக்கு முன் சமாதானப்படுத்தினார். அவரை இவாங்கா ட்ரம்ப் பக்கத்தில் அமரவைத்து, "தீவிரவாதத்திற்கு எதிராக நமது நாட்டிற்காக தம் உயிரைத் தியாகம் செய்துள்ளார் நமது நாயகன் ரையான்" என்று பெருமிதம் பொங்கினார். ரையானின் மனைவியைக் கண்ணீர் மல்க சமாதானப்படுத்தும் காட்சி அனைத்து ஊடகங்களிலும் ஒளிப்பரப்பட்டது. இப்போர் பிறகு டிவி சீரிஸாகவும் வெளியானது. தொடர்ந்து, இறக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு போன் செய்து ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில் தலையிட்டதே தேவையில்லாதது என அதிகாரிகள் பலர் நினைத்துக்கொண்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொருளாதாரமும் பாதுகாப்பும்!

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சுமுகமான வர்த்தகத்திற்கும், நிலையான பாதுகாப்பிற்கும் வழிவகுக்க மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்டது 'வட அட்லாண்டிக ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization)'. சுருக்கமாக NATO. குறிப்பாக, கம்யூனிச சோவியத் யூனியனுக்கு எதிராக தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த மேற்கு நாடுகள் உருவாக்கியதே NATO. இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு உறுப்பு நாடும் தமது ஜிடிபியில் 2% தொகையைப் பாதுகாப்புக்காக இதில் செலவிட வேண்டும். ட்ரம்ப் பிரசாரத்திலிருந்தே NATO-வின் எதிர்ப்பாளராக இருந்தார். அவரைப் பொறுத்தவரை NATO என்பது அதன் மதிப்பை இழந்து காலாவதியாகிப்போன சமாசாரம்.

NATO Submit
NATO Submit

ட்ரம்ப் எதிர்ப்புக்கு முதன்மை காரணம் NATO-விற்காக செலவிடப்படும் தொகைதான். அனைத்து நாடுகளும் 2% ஜிடிபியிலிருந்து தர வேண்டும் எனும்போது, அமெரிக்கா 3.5% செலவழிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் சரியான பங்கு தருவதே இல்லை. ஜெர்மனியெல்லாம் 1.5% தான் தருகிறது. "அப்படியிருக்கையில் நாங்கள் மட்டும் அதிகம் செலவு செய்யவேண்டும் என்பது தலைவிதியா?" என கோபப்பட்டார் ட்ரம்ப். நாட்டோவிலிருந்து விலகுவதற்கான வேளைகளில் இறங்கினார். ஜெர்மனியின் மியூனிச்சில் பேசிய மாட்டிஸ், "அமைப்பின் விதிப்படி உறுப்பு நாடுகள் எடுக்கும் உறுதியான முடிவுதான் ட்ரம்ப் இருக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோவியத்திற்கு எதிராக அமைப்பை உருவாக்கினோம். இன்று அதற்கான அவசியமில்லை. அப்படியிருக்கையில் இந்த ஐரோப்பிய நாடுகள் நம்மைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்றது ஒரு தரப்பு. மற்றொரு தரப்போ, போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் புதினின் ஆதிக்கத்தால் அச்சுறுத்தப்படுகின்றன. இந்நேரத்தில், நாம் ஒன்றுபட்டு இருப்பது அவசியம் என்றார்கள். மே மாதம் (2017) பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், "28 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் சரியாக தங்கள் பங்கைத் தருவதில்லை. உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். உங்களுக்காக, அமெரிக்கர்களின் வரிப்பணத்தைச் செலவு செய்வது சரியல்ல" என்று அதிருப்தியுடன் பேசினார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

போரும் பொருளாதாரமும்!

தன் ஆரம்ப நாட்களிலேயே ட்ரம்ப் கையெழுத்திட்ட மற்றொரு உலக சம்பவம் பசிபிக் கூட்டமைப்புகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திலிருந்து (Trans Pacific Partnership) விலகியது. அமெரிக்கா, புருணை, மெக்சிகோ, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 12 உறுப்பு நாடுகளைக் கொண்டது இவ்வமைப்பு. இதன்படி, குறைந்த அல்லது இலவச வரிவிகித வர்த்தக பரிவர்த்தனை உட்பட்ட உடன்பாடுகள் காணப்படும். ஒபாமா இந்த அமைப்பை அதிகம் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால், ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவோம் என்றிருந்தது ட்ரம்ப்பின் பிரசாரம். உலகளவில் ட்ரம்ப்பின் முதல் கையெழுத்து இதுவாகவே அமைந்தது. பசிபிக் கூட்டமைப்புகளுக்கு இடையேயான ஒப்பந்தம் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்பதே இலவச வரிவிகித வர்த்தகத்தை எதிர்க்கும் அமெரிக்கர் ட்ரம்ப்பின் வாதம். பின்னாளில் இதனை தமக்குச் சாதகமாக மறுபரிசீலனை செய்துகொண்டாலும், உலகளாவிய வர்த்தகத்தில் இனி அமெரிக்காவின் நிலை என்ன என்பதை உலகிற்கு எச்சரித்தார் ட்ரம்ப்.

நாட்டோவை வெறும் பொருளாதார பிரச்னையாகப் பார்க்காத அமெரிக்க காங்கிரஸ் விலகுவதை எதிர்த்து வருகிறது. துருக்கி போன்ற கிழக்கு நாடுகள் அத்துமீறலை ஏற்படுத்துகிறது என நாட்டோ மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். அப்படியிருக்கையில் அமெரிக்கா விலகுவது மேற்கின் கடிவாளத்தை விடுவதாகிவிடும் என்பது அமெரிக்க அரசியல் சபைகளின் எண்ணம். எல்லாவற்றிற்கும் மேலாக இதன்மூலம் அதிகம் மகிழ்ச்சியடைவது ரஷ்ய அதிபர் புதினாக இருப்பார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் நோக்கமும் அதுதானா என்ற கேள்வி கேள்வி எழுகிறது. ஏனெனில், ட்ரம்ப்பின் ஒரே வாதம் மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவு செய்ய வேண்டுமா என்பதே. மறுபுறம், சர்ச்சைகள், சிக்கல்கள் என நிறுத்திவைக்கப்பட்ட மத்திய கிழக்கு போர்களுக்கெல்லாம் மும்முரமாக நிதி ஒதுக்கி தயாராகிக்கொண்டிருந்தார். எந்த முன் அனுபவமும் இல்லாமல் அரசியலுக்கு வந்த ட்ரம்ப் ஆட்சியின் முதல் மாதம் எப்படியிருக்கும் எனக் காத்திருந்த உலகிற்கு ஒன்றுக்கொன்று நேர்மாறான குழப்பமே மிஞ்சியது.