Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகான அமெரிக்கா..! ட்ரம்ப்பின் அரசியல் என்னவாக இருக்கும்?

ட்ரம்ப்
ட்ரம்ப்

கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்பையும் மிக அதிகமான உயிர்ப்பலியையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. ட்ரம்ப்பில் மெத்தனமே இதற்குக் காரணமா?

கொரோனா சீன வைரஸா இல்லையா என்பதை நிரூபிக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இருந்துவருகிறார். கொரோனாவை அமெரிக்க இராணுவம் பரப்பியதா.. இல்லை சீனாவில் உள்ள வுகான் ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியதா போன்ற கேள்விகள் எழுந்துவருகின்றன. உலகம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறபோது, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் தொடர்களுக்கும் வேண்டுமானால் இந்த சுவாரஸ்யக் கதைகள் கை கொடுக்கலாம்.

ஆனால் சராசரி மனிதனுக்கு உள்ள கேள்வியெல்லாம் கொரோனா போன்ற நெருக்கடியான சமயத்தில் அரசாங்கத்தால் நம்முடைய உயிரைக் காப்பாற்ற முடியுமா... பல இலட்சம் கோடிகளில் இராணுவப் பெருமையைப் பறைசாற்றும் முதலாளித்துவ தேசங்களின் மருத்துவக் கட்டமைப்புகள் கொரோனா போன்ற சர்வதேச நெருக்கடிகளைத் தாக்குப்பிடிக்க இயலுமா... பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற நோய்த் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் எனும் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைக்கு செவிமடுக்கப்படுமா என்பதே.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

`அனைத்து உயிர்களும் சமம்’ என்பதை அரசியலமைப்பில் கொண்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்பதற்காக தன்னுடைய உயிர் ஒரு கோடீஸ்வரரின் உயிரை விடவும் குறைவானதாகக் கருதப்படுமா என நியூயார்க்கில் வசிக்கின்ற ஒரு தொழிலாளியின் கேள்வி அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப்பின் செவிகளுக்கு எட்டியதாகத் தெரியவில்லை. அதற்கான விடையும் அந்தத் தொழிலாளிக்கு உடனே கிடைத்துவிடுமா என்பதும் தெரியவில்லை. கொரோனா நெருக்கடியால் உலகின் சக்திவாய்ந்த வல்லரசு நாடு என்கிற அமெரிக்காவின் முகத்திரை கிழிந்திருக்கிறது.

கொரோனா தாக்கத்தை ட்ரம்ப் நிர்வாகம் மெத்தனமாகக் கையாண்டதன் விளைவே இன்று உலகின் ஹாட்ஸ்பாட்டாக அமெரிக்கா மாறியிருக்கிறது. ஏப்ரல் 18-ம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் ஏழு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முப்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். நியூயார்க்கில் மட்டும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளும், பதினான்கு ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ளன. அதிலும் கறுப்பின மக்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ட்ரம்ப் தன் நிர்வாகத்தின் தோல்விகளுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா மீது பழி சுமத்தி வருகிறார். தஞ்சம் கேட்டு வருவோர் மீது ட்ரம்ப்பின் அணுகுமுறை அனைவரும் அறிந்ததே. கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி அமெரிக்க அரசு தஞ்சம் கேட்டு வந்தவர்களை நாடு கடத்தி வருகிறது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என ஐ.நா எச்சரித்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவிலிருந்து கௌதமாலா நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கொரோனா நெருக்கடியை அமெரிக்கா கையாண்ட விதத்தைப் பற்றிப் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு ’நான் பொறுப்பேற்க மாட்டேன்’ என்று பதிலளித்துள்ளார் ட்ரம்ப். மாகாண ஆளுநர்களோடு மல்லுக்கட்டி வருகிறார். தனக்கு ஒத்துவராத அதிகாரிகளை எல்லாம் பணிநீக்கம் செய்து வருகிறார். முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் ட்ரம்ப். அமெரிக்க அரசு சில இடைக்காலப் பொருளாதார நிவாரணங்கள் அறிவித்துள்ள போதிலும் கொரோனாவுக்குப் பிறகான அமெரிக்காவும், ட்ரம்ப்பின் அரசியலும் எவ்வாறு இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. ஜனநாயக் கட்சியும் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்கொள்ள ஒருமனதாக முன்னாள் துணை அதிபர் ஜோ பீடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் ஆட்சி பீடத்தில் அமர்ந்த காலம் தொட்டே ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஒபாமா நிர்வாகத்தின் மைல்கல்லாகப் பார்க்கப்பட்ட பாரீஸ் உடன்படிக்கை மற்றும் ஈரான் அணு ஒப்பந்தம் ஆகியவற்றிலிருந்து தன்னிச்சையாக வெளியேறினார் ட்ரம்ப். ஐரோப்பாவையும் அவ்வப்போது பகைத்துக்கொண்டு வருகிறார் ட்ரம்ப். ஐ.நா-வின் உறுப்பு அமைப்புகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதிப் பங்களிப்பையும் நிறுத்தி வருகிறார். தற்போது உலக சுகாதார அமைப்பு கொரோனா பற்றி சரியாக எச்சரிக்கத் தவறியதாகக் கூறி அதற்கான நிதியை நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

பேராசிரியர் ஸ்ரீதரன்
பேராசிரியர் ஸ்ரீதரன்

ட்ரம்ப்பின் அரசியல் பற்றி அமெரிக்காவில் பணியாற்றிய முன்னாள் பத்திரிகையாளரும், தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இதழியல் துறையில் பேராசிரியராக இருப்பவருமான ஸ்ரீதரனிடம் பேசினோம், ``கொரோனா நெருக்கடியைக் கையாண்டதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறை சீரற்றதாக இருக்கிறது. தொடக்கத்தில் சீனா கொரோனாவைக் கையாண்ட விதத்தை வெளிப்படையாக ட்ரம்ப் பாராட்டியிருந்தார். ஆனால் அமெரிக்காவில் யதார்த்த நிலை வெளிப்படவே ட்ரம்ப்பின் அணுகுமுறை மாறியது. அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சீனாவையும், உலக சுகாதார நிறுவனத்தையும் ட்ரம்ப் பழிசுமத்தி வருகிறார்.

அமெரிக்க அரசு 2.2 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார நிவாரணங்களை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 2 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். ட்ரம்ப் நிர்வாகம் இந்த நெருக்கடியையும் கையாள வேண்டியிருக்கிறது. ட்ரம்ப் இதில் அரசியல் செய்யலாம். அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க், மிச்சிகன், கலிபோர்னியா போன்ற மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைக் கொண்டவை. தேர்தல் காலத்தில் ட்ரம்ப் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. சுகாதாரத் துறை அதிகாரிகளின் பேச்சுக்கு முரணாக ட்ரம்ப் பேசி வருகிறார். இது அமெரிக்கர்கள் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார். இதற்கு வேறு எந்த நாடுகளும் ஆதரவாக இருக்கப்போவதில்லை. ட்ரம்ப் உள்நாட்டு அரசியலுக்காக இவ்வாறு பேசிவருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தியதில் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியத்துவத்தை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. நிதியை ரத்து செய்யும் அதிகாரம் ட்ரம்ப்பிடம் இல்லை, நாடாளுமன்றத்திடம்தான் உள்ளது.

நிர்வாக ரீதியாக தோற்றுவிட்ட பிறகு தேர்தல் வரவிருக்கிறது என்பதால் ட்ரம்ப் தற்போது பிறர் மீது பழிசுமத்தி victim card ஆக முயற்சி செய்கிறார். ஜனநாயக கட்சி தொடங்கி சீனா, WHO என எல்லாரும் எனக்கு எதிராக அணிதிரள்கிறார்கள் என்று தன்னுடைய தோல்வியை மறைக்க பிரசாரம் செய்ய முயல்கிறார். தேர்தலில் அமெரிக்க மக்கள் மத்தியில் இது எடுபடும் என்று சொல்லிவிட முடியாது. தன் அரசியல் ஆதாயத்திற்காக எல்லாரையும் எதிரியாக சித்திரிக்கும் ட்ரம்ப்பின் போக்கு சர்வதேச அரங்கில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தவே செய்யும்” என்றார்.

ட்ரம்ப் - பெர்னி சாண்டர்ஸ்
ட்ரம்ப் - பெர்னி சாண்டர்ஸ்

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்த பெர்னி சாண்டர்ஸ் பல இடங்களில் `மனிதகுல வரலாற்றிலே மிகவும் பணக்கார நாடான அமெரிக்கா’ என்று குறிப்பிடுவார். உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் வல்லமை படைத்த வல்லரசு அமெரிக்காவின் ஏற்றத்தாழ்வுகள் தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன. அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, தொழிலாளர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றிற்கான குரல்கள் அமெரிக்காவில் வலுக்கத் தொடங்கியுள்ளன.

ட்ரம்ப்பின் இந்திய வருகையின்போது, ``நம்முடைய இரண்டு தேசங்களின் அரசியலமைப்பும் We the people என்றே தொடங்குகிறது” என்று கூறி பெருமிதப்பட்டுக் கொண்டார். கொரோனாவுக்குப் பிறகான அமெரிக்காவின் நகர்வு அதன் பெரு முதலாளிகளையும் நிறுவனங்களையும் மையப்படுத்தி இல்லாமல், அதன் மக்களை மையப்படுத்தியதாக இருக்கட்டும் என நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும்..!

அடுத்த கட்டுரைக்கு