Published:Updated:

`நாட்டின் நிலையை நாம் சிக்கலாக்கிவிட்டோம்’ - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆலோசகர் ஓப்பன் டாக்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

முன்னரே உத்தரவு பிறபித்திருந்தால் வைரஸ் பரவலைத் தடுத்திருக்கலாம் என அமெரிக்காவின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சீனாவில் வைரஸ் தொற்று உறுதியானதும் அந்த நாட்டுக்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டு பிற நாடுகளுக்கு கதவைத் திறந்தது அமெரிக்கா, ஆனால், ஐரோப்பாவிலிருந்து வைரஸ் தொற்றுடன் வந்தவர்கள், அரசின் தாமத நடவடிக்கைகளால்தான் தற்போது அந்நாடு மிக மோசமான நிலையைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க்
நியூயார்க்
AP

அமெரிக்காவில் மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,433 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு 22,115 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸால் மக்கள் மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. தற்போது அங்கு சிகிச்சையளிக்க போதிய மருந்து, உபகரணங்கள் இல்லாததால் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

‘சீனாவுக்கு மட்டுமே ட்ரம்ப் தடை விதித்தார், ஆனால்...?’ - நியூயார்க் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன பின்னணி

இந்நிலையில், அமெரிக்கா இந்த மோசமான நிலைக்கு வராமல் முன்னரே தடுத்திருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் அந்நாட்டின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரியும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான மருத்துவர் ஆண்டனி ஃபெஸி.

பிப்ரவரி மாதம் இறுதியிலேயே அமெரிக்காவில் ஊரடங்கு அறிவிக்க அதிபருக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதனால் நாட்டின் பொருளாதாரம் மோசமடையும் என்பதால் ட்ரம்ப் அதைப் புறக்கணித்ததாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் கடந்த சனிக்கிழமை பகிரங்க செய்தி வெளியிட்டிருந்தது.

மருத்துவர் ஃபெஸி
மருத்துவர் ஃபெஸி
AP

இதற்கிடையில் நேற்று சி.என்.என் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, அதற்குப் பதில் அளித்துள்ள ஃபெஸி, ``தொடக்கம் முதலே சரியான பாதையில் பயணித்து, சமூக முடக்கத்துக்கு முன்னரே நாம் உத்தரவு பிறப்பித்திருந்தால் அமெரிக்கா இந்த நிலைக்கு வராமல் தடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தற்போது அமெரிக்காவின் நிலையே வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிப்பதில் நிறைய பின்னடைவுகள் இருந்தன. நீண்ட ஆலோசனைக்கு பிறகே ஊரடங்கு பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்காவின் நிலையை நாம் சிக்கலாக்கிவிட்டோம்” என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 16.8 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைச் சரி செய்யும் தன் விருப்பத்தை அதிபர் ட்ரம்ப் பலமுறை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு