Published:Updated:

இலங்கையில் பொருளாதார எமர்ஜென்சி! - தீவு தேசத்தில் என்ன நடக்கிறது?

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்திருக்கும் நிலையில், அங்கு பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. இந்தநிலையில், கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அளவுக்கு அந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்திருக்கிறது. இலங்கையின் முக்கிய வருமானமாக சுற்றுலாத்துறை விளங்கும் நிலையில், கொரோனா பிரச்னையால் சுற்றுலா முடங்கியிருக்கிறது. அதனால், அந்நியச் செலாவணி மதிப்பு குறைந்து, இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது.

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

தற்போது அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதில் பிரச்னை இருப்பதால், உணவுப் பொருள்களின் இருப்பு குறைந்துவருகிறது. அதனால், உணவுப்பொருள்கள் பதுக்கல் அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக, விலைவாசி கடுமையாக உயர்ந்துவருகின்றன. இந்தநிலையில், உணவுப்பொருள்கள் பதுக்கலைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பொருளாதார அவசரநிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. கடந்த ஜூன் மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.120-ஆக இருந்தது. அது தற்போது ரூ. 220 என உயர்ந்திருக்கிறது. துவரம் பருப்பு ரூ.150-ஆக இருந்தது. தற்போது அது ரூ.250-க்கு விற்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால், அவற்றைப் பதுக்கும் போக்கு அதிகரித்தது. அதனால் அரிசி, சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குக் கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கிறார்கள்.

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை அரசு, பொருளாதார அவசரநிலையைக் கொண்டுவந்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் கூறியிருக்கிறார்.

மேலும் அவர், ``நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்ற போர்வையில் இந்த அவசரநிலை அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலமாக நாட்டில் இனி ஜனாதிபதி ஆட்சியே நிலவும். அதனால், ஜனாதிபதியால் தாம் விரும்பும் சட்டங்களை நிறைவேற்ற முடியும். அதற்கான அதிகாரம் அவருக்குக் கிடைக்கும். இது மிகவும் அபாயகரமானது” என்றும் கூறுகிறார்.

பிரதமர் வேட்பாளர்:  `முன்னிறுத்தப்படுகிறாரா பாஜக ‘கூட்டாளி' நிதிஷ்?' - இது பீகார் அதகள அரசியல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பொருளாதார அவசரநிலை அறிவிப்பு உடனடியாக ரத்துசெய்யப்பட வேண்டும்’ என்று சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரியிருக்கிறது. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார வெளியிட்ட அறிக்கையில், `தவறான பொருளாதாரக் கொள்கையால், அரசு வருமானத்தை இழந்திருக்கிறது. அத்துடன், வெளிநாட்டு கையிருப்பும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாகவே, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன” என்று கூறியிருக்கிறார்.

இலங்கை அரசு
இலங்கை அரசு

பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்திருக்கிறது. வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள் பதுக்கும் உணவுப்பொருள்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரிசி, சர்க்கரை, நெல் போன்ற உணவுப்பொருள்களைக் கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு