Published:Updated:

US Elections 2020: `மக்கள் விருப்பம் நிறைவேறியுள்ளது!’ - ஜோ பைடன் வெற்றி; அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜோ பைடன்
ஜோ பைடன்

``இது வரலாற்றில் மிக அதிகமானது; ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் பெற்றதைவிட 7 மில்லியன் அதிகம். இது தெளிவான வெற்றி’’ - ஜோ பைடன்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, டெலாவர் பகுதியில் பேசிய ஜோ பைடன்,``நமது ஆட்சி, அரசியலமைப்பு மற்றும் மக்களின் விருப்பம் என அனைத்தையும் ட்ரம்ப் மதிக்கத் தவறினாலும், அவை அனைத்தும் நிறைவேறிவிட்டன" என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், தன் தோல்வியை ஏற்க மறுத்ததோடு, தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதோடு, ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ட்ரம்ப்-ன் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தநிலையில், நீதிமன்றங்களும் ட்ரம்ப் தாக்கல் செய்த மனுக்களை ஆதாரமற்றவை எனக் கூறி தள்ளுபடி செய்தன. இது அமெரிக்க அரசியல் களத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியது.

அமெரிக்காவில் அதிபரைத் தேர்வு செய்யும் முறை மறைமுகமானது. அதிபர் தேர்தலில் ஒவ்வொரு மாகாணத்துக்குமான `எலெக்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வாளர்கள் குழுவை மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்வர். தேர்வாளர்கள் குழுவின் வாக்கு மூலம், புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார். இந்தநிலையில், 50 மாகாணங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 538 தேர்வாளர்கள் அதிபர், துணை அதிபரைத் தேர்வு செய்ய வாக்களித்தனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதன்படி, கலிஃபோர்னியாவில் 55 வாக்குகளை ஜோ பைடன் பெற்றார். ஜோ பைடனுக்கு 306 வாக்குகளும், டிரம்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், அதிபராக வெற்றி பெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின், டெலாவேர் (Delaware) பகுதியில் ஜோ பைடன் நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,``சட்டத்தின் ஆட்சி, நமது அரசியலமைப்பு மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவை நிறைவேறின. இந்த தேசத்தில் ஜனநாயகச் சுடர் வெகுகாலத்துக்கு முன்பே எரியத் தொடங்கிவிட்டது. ஒரு தொற்றுநோயோ அல்லது அதிகார துஷ்பிரயோகமோ அந்தச் சுடரை அணைக்க முடியாது.

`ஜோ பைடன் வெற்றி, அநீதி; இறுதி முடிவு வரட்டும்!’- பழைய பல்லவியைத் திரும்பப் பாடும் ட்ரம்ப்

ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை முறியடிக்க நீதிமன்றங்களை நாடியது பற்றி பேசிய ஜோ பைடன்,``அதிர்ஷ்டவசமாக நீதிமன்றம் உடனடியாக அவர்களின் முயற்சியை நிராகரித்துவிட்டது. அமெரிக்காவின் ஆத்மாவுக்கான இந்தப் போரில், ஜனநாயகம் வென்றுவிட்டது.

ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் - பைடன்

ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சட்டபூர்வமாக வாக்களித்த வாக்குகளை ஏற்க மறுத்து தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தினர். ட்ரம்ப்பின் இத்தகைய செயல்கள் மக்களின் விருப்பத்தை மதிக்க மறுத்து, நமது அரசியலமைப்பை புறக்கணித்ததைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தேர்தலில் அச்சுறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்க்கொண்டோம். இது மன்னிக்க முடியாதது.

ட்ரம்ப், யதார்த்தத்தை மறுப்பதைக் கடந்து, வெற்றி பெற்றவர்களை மதிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்பட வேண்டும்; தாக்கப்படக் கூடாது’’ என்று கூறிய பைடன், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக 81 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டார். ``இது வரலாற்றில் மிக அதிகமானது; ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் பெற்றதைவிட 7 மில்லியன் அதிகம். இது தெளிவான வெற்றி’’ என்றும் அவர் கூறினார்.

மேலும், தனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் குறித்து ஜோ பைடன் கூறுகையில், ``கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போர், தடுப்பூசிகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்படும். தடுப்பூசிகள் கிடைக்கும்போது, கொரோனா பரவலைக் குறைக்கத் திட்டமிடப்படும். அதேபோல், தொற்றுநோய் பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டமைத்தல் என எங்கள் அனைவருக்கும் அவசர வேலைகள் நிறைய இருக்கின்றன’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு