Published:Updated:

மெட்ரோ ரயில்கள் எரிப்பு... எமெர்ஜென்ஸி அறிவிப்பு... என்ன நடக்கிறது சிலி நாட்டில்? #ChileProtest

ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 30 லட்சம் பேர் பயன்படுத்தி வந்த சாண்டியாகோ மெட்ரோ மீதான தாக்குதல், சிலி நாட்டின் இயல்புநிலையைப் பாதித்தது.

சிலி போராட்டம்
சிலி போராட்டம் ( Iván Alvarado/Reuters )

லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் கல்லூரி மாணவர்களும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், அந்நாட்டில் உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணத்தை எதிர்த்துப் போராடினர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா எமர்ஜென்சியை அறிவித்துள்ளார். சிலி நாட்டில் என்ன நடக்கிறது?

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் கடந்த வாரம் மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. சாண்டியாகோ மெட்ரோ, லத்தீன் அமெரிக்காவிலேயே பெரியதும், நவீனமயமானதும் ஆகும். 800 பெசோக்களுக்கு விற்கப்பட்ட மெட்ரோ டிக்கெட், 830 பெசோக்களாக உயர்த்தப்பட்டது.

மெட்ரோ விலை உயர்வுக்குக் காரணமாக, சிலி நாட்டுப் பணமான பெசோவின் மதிப்பு குறைவதையும், அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலையையும் காரணமாகக் காட்டுகிறது சிலி அரசு.
சிலி போராட்டம்
சிலி போராட்டம்
Oyarzun/ATON CHILE/AFP

இதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அமைதியாகத் தொடங்கிய போராட்டம், மாணவர் - காவல்துறை மோதலாக மாறியது. போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்கியும், தீயிட்டும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

சாண்டியாகோ மெட்ரோவுக்குட்பட்ட 164 மெட்ரோ நிலையங்களும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, போராட்டக்காரர்களால் மெட்ரோ ரயில்களும் எரிக்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 30 லட்சம் பேர் பயன்படுத்தி வந்த சாண்டியாகோ மெட்ரோ மீதான தாக்குதல், சிலி நாட்டின் இயல்புநிலையைப் பாதித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில், காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்தனர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களும் காவல்துறையும் மோதிக்கொண்டதில் 2 காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக சிலி அரசு கூறியுள்ளது.

எரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்!
எரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்!
Javier Torres/AFP
போராட்டக்காரர்களின் கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால், அதை வெளிப்படுத்த, அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை, நமது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது.
க்ளோரியா ஹட், சிலி நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர்

சாண்டியாகோ முழுவதும் எழுந்த போராட்டம் குறித்துப் பேசிய சிலி நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் க்ளோரியா ஹட், "போராட்டக்காரர்களின் கோபம் எனக்குப் புரிகிறது. சில விவகாரங்களில் மக்கள் போராடுவது இயல்பானது. ஆனால், தற்போது அதை வெளிப்படுத்த, அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை, நமது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. பல கோடி மக்கள் பயன்படுத்தும் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

சிலி நாடு லத்தீன் அமெரிக்க நாடுகளுள் பணக்கார நாடாகக் கருதப்படுகிறது. எனினும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் குறைந்த முன்னேற்றத்தையும் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், மிகக் குறைந்த ஊதியம் பெறும் குடிமக்களையும் கொண்டுள்ளது சிலி. மேலும், வலதுசாரி சிந்தனைகொண்ட அதிபர் செபாஸ்டியன் பினெரா மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சிலி போராட்டம்
சிலி போராட்டம்
Sebastian Cisternas/ATON Chile
மெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை முழுமையாகத் தனியார்மயப்படுத்தியதையும், பொருளாதாரச் சமத்துவமின்மை காரணமாக அடிப்படைப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதையும் எதிர்ப்பதாக உருவெடுத்துள்ளது.

போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், சிலி அதிபர் பெனெரா நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக ராணுவத்திடம் வழங்கியுள்ளார். மேலும், உள்நாட்டுப் பாதுகாப்பு கருதி எமர்ஜென்சி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலி போராட்டம்
சிலி போராட்டம்
Pablo Vera/AFP

சிலி தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று, ஏறத்தாழ 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாவது நாளை எட்டியுள்ள போராட்டத்தில், போராட்டக்காரர்கள் கடைகளையும் நிறுவனங்களையும் தீ வைத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், 5 பேர் எரிந்து, உயிரிழந்துள்ளதாக சிலி அரசு தெரிவித்துள்ளது.

1973 முதல் 1990 வரை, அகஸ்டோ பினோசெட் என்ற சர்வாதிகாரியின் ஆட்சியில் இருந்தது சிலி நாடு. தற்போது, மக்கள் தெருக்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பது, அகஸ்டோவின் ஆட்சியை நினைவுபடுத்துவதாக, சிலி நாட்டு மக்கள் கூறியுள்ளனர். தற்போதைய அதிபர் பினெரா, தான் அறிவித்த எமர்ஜென்சி உத்தரவை நீட்டித்துள்ளார்.

செபாஸ்டியன் பினெரா
செபாஸ்டியன் பினெரா
நாம் போரில் இருக்கிறோம். நமது எதிரிகள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பதோடு, எல்லையற்ற வன்முறையை முன்னெடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
செபாஸ்டியன் பினெரா, சிலி நாட்டு அதிபர்.

நாட்டில் எமர்ஜென்சி உத்தரவைப் பிறப்பித்த அதிபர் பினெரா, "தன்னைத் தற்காத்துக்கொள்ள, தனது உறுப்புகளுள் உள்ள அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளவும், சட்ட விதிமுறைகளால் எதிரிகளை எதிர்கொள்ளவும் ஜனநாயகத்துக்கு உரிமை உண்டு. நாம் போரில் இருக்கிறோம். நமது எதிரிகள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பதோடு, எல்லையற்ற வன்முறையை முன்னெடுப்பவர்களாகவும் இருக்கின்றனர். அமைதியாகப் போராட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவது குற்றம்" எனக் கூறியுள்ளார்.

சிலி போராட்டம்
சிலி போராட்டம்
Agencia Makro/Getty Images

சிலி நாட்டுப் போராட்டங்கள், தற்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. மெட்ரோ கட்டண உயர்வு என்பது மட்டும் பிரச்னையல்ல என்றும், சிலி நாட்டில் நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மைதான் மக்களின் கோபத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் வலதுசாரி அரசுகள் அதிருப்தி கொண்ட மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல், ராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்குவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.