Published:Updated:

கியூபா: முடிவுக்கு வந்த `காஸ்ட்ரோ' சகோதரர்களின் சகாப்தம்... ராவுல் காஸ்ட்ரோ ஓய்வால் என்ன சிக்கல்?

ராவுல் காஸ்ட்ரோவின் அறிவிப்பு மூலம் ஆறு தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த ராவுல் காஸ்ட்ரோ, பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை 60 ஆண்டுகளாக எதிர்த்து நின்ற காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.

கியூபா புரட்சி:

1959-ம் ஆண்டில் கியூபாவை ஆட்சி செய்துவந்த சர்வாதிகாரி பல்கேன்சியோ பாடிஸ்டாவை ஓடவைத்தது கியூபா புரட்சி. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபரானார். அன்று முதல் 50 ஆண்டுகளுக்குக் கியூபாவின் அசைத்துப் பார்க்க முடியாத தலைவராக இருந்தார் காஸ்ட்ரோ.

ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro)
ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro)
ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த நேரு.... அமெரிக்காவுக்கு அஞ்சாத பிரதமர்! #VikatanRewind

அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகள் உட்பட பல்வேறு தடைகளை வெற்றிகரமாக முறியடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அவர்மீது அமெரிக்கா கொலை முயற்சிகள்கூட மேற்கொண்டது. இருந்தும் இரும்பு மனிதனாக, கியூபாவைக் காத்து நின்றார் காஸ்ட்ரோ.

அதிபரான ராவுல்:

2006-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவரின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2008-ம் ஆண்டு முறைப்படி கியூபாவின் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ராவுல் காஸ்ட்ரோ. 2011-ம் ஆண்டு முதல் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார் அவர்.

ராவுல் காஸ்ட்ரோ
ராவுல் காஸ்ட்ரோ
Twitter

ராவுல் காஸ்ட்ரோ ஆட்சி!

1950-களின் தொடக்கத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ வழிநடத்திய போராட்டங்களில், அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ராவுல் காஸ்ட்ரோ. 1959-ல் கியூபாவில் சர்வாதிகாரத்துக்கு எதிராக தன் நண்பன் சே குவேராவோடு இணைந்து ஃபிடல் காஸ்ட்ரோ நடத்திய புரட்சிப் போராட்டத்தில் தளபதியாகச் செயல்பட்டவர் ராவுல் காஸ்ட்ரோ.

ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) & சே குவேரா (Che Guevara)
ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) & சே குவேரா (Che Guevara)

அதிபரானவுடன் தன் மூத்த சகோதரரைப்போலவே அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துவந்தார் ராவுல் காஸ்ட்ரோ. 2014-ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசிய ராவுல், இரு நாடுகளுக்குமிடையே நட்புறவை ஏற்படுத்தினார். ராவுலின் இந்தச் செயல் கியூபா அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கியூபாமீது அமெரிக்கா விதித்திருந்த பல்வேறு பொருளாதாரத் தடைகளை விலக்கினார் ஒபாமா. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப், மீண்டும் கியூபா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

2018-ம் ஆண்டு வரை கியூபாவின் அதிபராக இருந்தவர், நாட்டின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். கியூபாவின் புதிய சட்ட விதிப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதால், 2018-ல் அதிபர் பதவியிலிருந்து விலகினார். இருந்தும், கியூபா நாட்டின் ஒரே ஆட்சி அதிகாரமிக்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து செயல்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், நேற்று (18.4.2021) நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார் அவர். 89 வயதாகும் ராவுல் காஸ்ட்ரோ பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகையில்,

எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை, இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணி மனநிறைவு அடைகிறேன். இனி இந்த நாட்டை உத்வேகமும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடும் துடிப்பும் கொண்ட இளைஞர்களிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.
ராவுல் காஸ்ட்ரோ
ராவுல் காஸ்ட்ரோ
ராவுல் காஸ்ட்ரோ
twitter

அடுத்த தலைவர்?

ராவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பு மூலம் ஆறு தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. கட்சியின் அடுத்த தலைவராக, தற்போது கியூபா நாட்டின் அதிபராக இருக்கும் மிக்கேல் டயஸ் கேனல் (Miguel Díaz-Canel) தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியூபா | Cuba
கியூபா | Cuba
கியூபா: வல்லரசுக்கு அடிபணிய மறுத்த காம்ரேட் நாடு! - நாடுகளின் கதை 4

என்ன சிக்கல்?

கடந்த ஆண்டில் மட்டும் கியூபா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 11 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த் தொற்று, நிதிச் சீர்த்திருத்தங்கள், ட்ரம்ப் நிர்வாகம் விதித்த பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டவை இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

``நாட்டில் பொருளாதாரச் சிக்கல் இருக்கும் இந்த நேரத்தில், ஆளுங்கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுவது அவ்வளவு நல்லதல்ல'' என்று எச்சரிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு