கட்டுரைகள்
Published:Updated:

பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக்... காத்திருக்கும் சவால்கள்...

ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷி சுனக்

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு வருபவர்தான் பிரதமர் பதவியில் அமர முடியும். ஆகவே, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தியா 75-வது சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடியிருக்கும் வேளையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார். எந்த தேசத்திடம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததோ, எந்த தேசத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக ரத்தம் சிந்தி இந்தியர்கள் போராடினார்களோ, அந்த தேசத்தின் உச்ச அதிகாரப் பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இன்று அமர்ந்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் நாற்காலியில் அமரும் முதலாவது இந்தியரும், முதலாவது ஆசியரும் இவர்தான். அது மட்டுமல்ல, 200 ஆண்டுக்கால பிரிட்டிஷ் ஜனநாயக வரலாற்றில் மிகவும் இளம் வயதுப் பிரதமரும் ரிஷி சுனக்தான். ரிஷி சுனக்குக்கு 42 வயதே ஆகிறது. பிரிட்டன் நாட்டின் வெள்ளையர் அல்லாத முதல் பிரதமரும் இவர்தான்.

பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக்...
காத்திருக்கும் சவால்கள்...

தலைவர் to பிரதமர்

2022-ல் மூன்றாவது பிரதமரை பிரிட்டன் சந்திக்கிறது. பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், தனது அதிகாரபூர்வ இல்லத்தில் கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறி மது விருந்து அளித்ததாக சர்ச்சை எழுந்தது. அதையடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் விலகினார். அவரைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்கு வந்த லிஸ் டிரஸ் தலைமையிலான அரசு, பெருமளவுக்கான வரிக் குறைப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. அது பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தது. அதையடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், பிரதமர் பதவியை அக்டோபர் 20-ம் தேதி லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். அவர் வெறும் 45 நாள்களே பிரதமர் பதவி வகித்தார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு வருபவர்தான் பிரதமர் பதவியில் அமர முடியும். ஆகவே, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 357 எம்.பி-க்கள் இருக்கும் நிலையில், 100 எம்.பி-க்களின் ஆதரவு இருந்தால் மூன்று பேர் போட்டியிட முடியும் என்ற சூழல் ஏற்பட்டது. அந்த நாட்டின் பாராளுமன்ற மக்கள் சபைத் தலைவர் பென்னிமார்டண்ட், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க நினைத்தனர். ஆனால், போதிய எம்.பி-க்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களின் ஆதரவைப் பெற்ற ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியைப் பிடித்தார்.

அதையடுத்து, ரிஷி சுனக்கைப் பிரதமராக மன்னர் சார்லஸ் அறிவித்தார். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் சூழலில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் ஏற்றிருக்கிறார். ‘பிரிட்டனுக்கு ஒரு புதிய விடியல்’ என்று ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றதைக் குறிப்பிட்டு ‘டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டது. அந்த நம்பிக்கையை, நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது முதல் உரையில் ரிஷி சுனக் வெளிப்படுத்தினார்.

காத்திருக்கும் சவால்கள்

“கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்துவருகிறது. ரஷிய அதிபர் புதின் தொடுத்துள்ள உக்ரைன் போர், உலகம் முழுவதும் சந்தைகளைச் சீர்குலைத்துள்ளது. நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைவதற்குப் பணியாற்ற முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் தவறவில்லை. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் சில தவறுகள் நடந்தன. தவறுகளைச் சரிசெய்ய நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக்...
காத்திருக்கும் சவால்கள்...

நம் தேசத்தை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதற்காக நாள்தோறும் உழைப்பேன். எனக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது, இன்னும் நம்பிக்கையைப் பெறுவேன். நம்பிக்கை, நம் அனைவருக்கும் சொந்தமானது. நம்பிக்கைதான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும்” என்று தனது உரையில் ரிஷி சுனக் குறிப்பிட்டார்.

ரிஷிக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த கன்சர்வேட்டிவ் கட்சிக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலம் இருக்கிறது. ஆனால், தேர்தலின்போது வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில் தேர்தல் நடைபெற்றால், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எளிதில் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. இதற்கு மத்தியில் சிறப்பான அரசைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ரிஷி சுனக்குக்கு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்த காரணத்தால், உணவுப்பொருள்கள் விலை, மின்கட்டணம் மற்றும் எரிபொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால், மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்கான திட்டங்கள் தம்மிடம் இருப்பதாக ரிஷி சுனக் கூறியிருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். இதனால், இவர்மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது பெரும் சவாலான விஷயம். அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக முதலீடுகள் குறைந்துவிட்டன. அதனால், புதிய வேலைவாய்ப்புகள் பெரிதாக இல்லை. ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களில் பெரும் பகுதியினருக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்க ரிஷி சுனக் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

நம்பிக்கையைச் சொற்களில் வெளிப்படுத்திய ரிஷி சுனக், செயலிலும் வெளிப்படுத்துவாரா?

பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக்...
காத்திருக்கும் சவால்கள்...

****

ரிஷியும் சோனியாவும்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகியிருக்கும் நிலையில், அதை வைத்து இந்திய அரசியல்வாதிகளிடையே ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. “முதலில், கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபர் ஆனார். தற்போது ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாடுகளில் இருக்கும் பெரும்பான்மை அல்லாத தலைவர்களை நாட்டின் உயர் பதவிக்குத் தேர்வு செய்கின்றன. பெரும்பான்மையின வாதத்தைக் கடைப்பிடிக்கும் இந்தியாவும் இங்குள்ள கட்சிகளும் கற்க வேண்டிய பாடம் இதில் இருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். 2004-ம் ஆண்டு சோனியா காந்தியால் பிரதமராக முடியாமல்போனதை அவர் மறைமுகமாக இதில் குறிப்பிட்டிருந்தார். ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகியிருப்பதையும், சோனியா பிரதமராக முடியாமல்போனதையும் ஒப்பிட முடியாது என்று பா.ஜ.க தரப்பு பதிலடி கொடுத்திருக்கிறது.