தொடர்கள்
சினிமா
Published:Updated:

ரிஷி சுனக்கின் முள் கிரீடம்!

ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷி சுனக்

சவால்களைச் சமாளித்து ஆட்சியைத் தக்க வைப்பாரா, மீண்டும் 2024 தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் ஒரு சரித்திரம் படைப்பாரா?

காட்டிலே புலி ஒன்று துரத்த, தப்பிக்க வேண்டி ஒருவன் மரத்தில் ஏறப் போனான். மரத்தின் உச்சியிலே ஒரு கரடி உட்கார்ந்திருந்தது. கரடிக்கு பயந்து கீழே குதிக்கலாம் என்றால், துரத்திய புலி மரத்தடியில் பசியுடன் காத்துக்கொண்டிருக்கிறது. சரி என்று ஒரு மரக்கிளையைப் பிடித்துத் தொங்கப் போனான். ஆனால் அது கிளை அல்ல, ஒரு மலைப்பாம்பு என்று தொங்கும்போதுதான் தெரிந்தது. அந்த நேரத்தில் மேலே தேன்கூட்டிலிருந்து ஒரு தேன்துளி இனிப்பாக அவன் வாயில் வந்து விழுந்தது. (குட்டிக்கதைக்கு நன்றி, எழுத்தாளர் பாலகுமாரன்).

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நிலைமை இன்றைக்கு அப்படித்தான் உள்ளது. விலைவாசி உயர்வு என்னும் புலி, ரஷ்யா - உக்ரைன் போர் என்னும் கரடி, உச்சத்தில் நிற்கும் பிரிட்டன் அரசாங்கம் வாங்கியுள்ள கடன் தொகை என்னும் மலைப்பாம்பு... இத்தனையும் சூழ்ந்திருக்க, புலியால் துரத்தப்பட்டவன் வாயில் விழுந்த தேன்துளி மாதிரி அவருக்குப் பிரதமர் பதவி கிடைத்துள்ளது.

ரிஷி சுனக்கின் முள் கிரீடம்!

இந்திய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் பிரிட்டனின் பிரதமர் ஆகியிருக்கிறார் என்பது ஒருபுறம். அதையும் தாண்டி, உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த பிரிட்டன் நாட்டின் பிரதமராக, அதனால் ஆதிக்கம் செய்யப்பட்ட நாடு ஒன்றிலிருந்து வந்த வெள்ளை நிறத்தவர் அல்லாத சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆகியிருப்பதுதான் சரித்திர நிகழ்வு. 10, டவுனிங் தெரு முகவரியில் விளக்கேற்றி நம்மவர் ஒருவர் தீபாவளி கொண்டாடும் நாள் வரும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்?

விலைவாசி உயர்வு இன்று பிரிட்டன் மக்களின் கழுத்தை நெறிக்கும் பிரச்னை. குறிப்பாக தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாதவையான பால் உட்பட சகல உணவுப்பொருள்கள் முதல் மின்சாரம் மற்றும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் காஸ் வரை, விலை ஏறாத பொருள்களே இல்லை எனச் சொல்லலாம். வீட்டுக் கடன் வட்டி விகிதம் திடீரென ஐந்து மடங்கு உயர்ந்ததில் மக்கள் ஆடிப்போயினர். கடந்த சில ஆண்டுகளாக உச்சம் தொட்ட வீடுகளின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் அதிகமானதால் பல கடன்கள் வாராக்கடன்கள் ஆகிவிடுமோ என்று வங்கிகள் அச்சம் கொண்டுள்ளன.

‘நல்ல நோக்கத்துடன் செயல்பட்டாலும், முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் அரசாங்கம் தன் திட்டங்களைச் செயல்படுத்திய வழிகள் தவறானவை' என்று பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார் ரிஷி சுனக். ‘‘என் அரசு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்பேற்கும். நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள் காரணமாக பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்'' என்றும் சொன்னார் ரிஷி சுனக். நிதி நெருக்கடியை உண்டாக்குவதாக இருந்த, லிஸ் ட்ரஸ் அரசாங்கம் அறிவித்த வரிச் சலுகைகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன.

புதிய அமைச்சரவையை அமைத்தது, ரிஷி சுனக் சந்தித்த முதல் சவால். முன்னாள் பிரதமர்களான போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள், லிஸ் ட்ரஸ் ஆதரவாளர்கள், கன்சர்வேட்டிவ் கட்சியின் அனுபவமிக்க மூத்தவர்கள், கட்சியின் தீவிர வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என அத்தனை பேரும் மனம் நோகாத வகையில், விசுவாசம் என்பதைத் தாண்டி, திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமைச்சர்களை நியமித்தார். ‘‘கட்சிக்காரர்கள் வாக்களிக்காமல் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பொதுத் தேர்தலை அறிவிக்க வேண்டும்'' என்று குரல் கொடுத்தது எதிர்கட்சியினர் மட்டுமல்ல, அன்றைய போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவி வகித்த நதீன் டோரிஸ் என்பவரும்தான். ஏற்கெனவே பதவி வகித்து, ரிஷி சுனக் அமைச்சரவையில் பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ரிஷிக்கு எதிராக இன்னும் சில நாள்களில் போர்க்கொடி தூக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் இல்லை.

கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதைத் தடுக்க, ஒவ்வொரு ஊழியருக்கும் அதிகபட்ச உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் அரசாங்கம் மூலம் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றாலும், அரசாங்கத்திற்குப் பெரும் கடன்சுமையை ஏற்படுத்தியது. நன்மைகள் மற்றும் தீமைகளை உள்ளடக்கிய பிரக்சிட் காரணமாக ஏற்பட்ட பிரச்னைகள், நிதி நெருக்கடிகளை அதிகமாக்கியுள்ளது. பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு சரிந்து போவது இன்னொரு சவால். ரிஷி சுனக் முன்பாக இருக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமானது இந்த நிதி நெருக்கடிதான்.

ரிஷி சுனக்கின் முள் கிரீடம்!

உணவுப்பொருள்கள் விலை உச்சம் தொட்டிருப்பது அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. பள்ளிகளில் இலவச உணவு வழங்கப்பட்ட நடைமுறை மட்டுமே பிரிட்டனில் இருந்தது. இந்த விலைவாசிப் பிரச்னை காரணமாக, மாணவர்களின் நலன் காக்க சில பல்கலைக்கழகங்களே இலவச உணவுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. பல்வேறு ஊர்களில் இலவச உணவை வினியோகிக்கும் உணவு வங்கிகள் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு இடையே இயங்கிவருகின்றன.

அணு ஆயுதப் போர் வருமா அல்லது உடன்பாடு ஏற்பட்டு நின்றுபோகுமா என்ற விடை தெரியா கேள்விகளுடன் தொடர்ந்து நடக்கும் ரஷ்ய - உக்ரைன் போர், ரிஷி சுனக் முன்னால் இருக்கக்கூடிய இன்னொரு சவால். உக்ரைன் அரசாங்கத்திற்குச் செய்யும் நிதியுதவிகள் தவிர, போர் காரணமாக ஏற்பட்டுள்ள காஸ் தட்டுப்பாடு உருவாக்கிய விலையேற்றம் ஆகியவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் அவர் உள்ளார். போர் காரணமாக பல உக்ரைன் மக்கள் அகதிகளாக பிரிட்டன் வந்துள்ளனர். பெருத்த லாபம் ஈட்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள்மீது, அவர்களது லாபத்தில் ஒரு பங்கினைச் சிறப்பு வரியாக (windfall tax) வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்தச் சிறப்பு வரியை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் நிதி நிலைமையைச் சமாளிக்கலாமா, வேண்டாமா என்பதையும் ரிஷி முடிவெடுக்க வேண்டியுள்ளது.

பிரக்சிட் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. புவியியல்ரீதியாக அயர்லாந்தின் பகுதியாக இருந்தாலும், வட அயர்லாந்துப் பிரதேசம் என்பது பிரிட்டன் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதி. சுங்கம் தொடர்பான ஐரோப்பா மற்றும் பிரிட்டன் இடையேயான ஒப்பந்தங்களில் இன்னும் குழப்பங்கள் உள்ளன. முழுமையான உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. இதை எப்படி சமாளிக்கப்போகிறார் ரிஷி சுனக் என்பதைப் பார்க்க பிரிட்டன் மட்டுமல்லாது ஐரோப்பாவும் காத்திருக்கின்றது. பிரக்சிட் மூலம் ஐரோப்பாவிலிருந்து பிரிந்த காரணத்தினால் தனிப்பட்ட முறையில் வணிக ஒப்பந்தங்களை மற்ற நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ள பிரிட்டன் தீவிரமாக முனைந்துவருகிறது. சொல்லப்போனால் தீபாவளிக்குள் இந்தியாவுடன் வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்த்த நிலையில், லிஸ் ட்ரஸ் பதவி விலக நேர்ந்தது. அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் இந்தியாவும் பிரிட்டனும் ஒத்துப்போகவில்லை. அமெரிக்காவுடனான பிரிட்டனின் ஒப்பந்தமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த வணிக ஒப்பந்தங்களை விரைவில் ஏற்படுத்திக்கொள்வது அவருக்கு சவாலாக இருக்கும்.

ரிஷி சுனக்கின் முள் கிரீடம்!

போரிஸ் ஜான்சன் காலம் முதலே பிரிட்டனின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, அரசாங்கத்தின் இலவச மருத்துவ சேவையைத் தரும் NHS எனப்படும் National Health Services. பிரிட்டனைப் பொறுத்தவரை மருத்துவ சேவை எல்லோருக்கும் இலவசம். (பல இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் NHS-ல் பணிபுரிகின்றனர்). பெரும் நிதித் தட்டுப்பாடு காரணமாக NHS சேவை பலமாக பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நிரம்பிவழிவதால், சமாளிக்க முடியாமல் NHS மருத்துவமனைகள் திணறுகின்றன. NHS நிதி நிலைமையைச் சமாளிக்க போரிஸ் ஜான்சன் அரசாங்கம் கொண்டுவந்த சிறப்பு வரியை லிஸ் ட்ரஸ் அரசு ரத்து செய்தது. அந்தச் சிறப்பு வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

380 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று அசுர பலத்துடன் கன்சர்வேட்டிவ் கட்சி 2019-ல் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆட்சி தொடர்ந்து மீதம் இருக்கக்கூடிய இரண்டு வருடங்கள் நீடிக்குமா என்பதுதான் ரிஷியின் முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். பத்து வருடங்களாக ஆட்சி செய்யும் கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த தேர்தலில் பதவியிழந்து, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பிரதமர் பதவி அவர் தரித்துள்ள மலர் கிரீடம் அல்ல, முள்கிரீடம். பிரிட்டனின் மன்னரை விட ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு அதிகம் என்ற பொறாமைக்குரல் கேட்காமலில்லை.

10 டவுனிங் தெருவுக்குக் குடி போய் சரித்திரம் படைத்துள்ளார் ரிஷி சுனக். இனி என்ன செய்யப்போகிறார்? சவால்களைச் சமாளித்து ஆட்சியைத் தக்க வைப்பாரா, மீண்டும் 2024 தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் ஒரு சரித்திரம் படைப்பாரா? இதையெல்லாம் பார்க்க பிரிட்டன் மட்டுமல்லாது இந்தியாவும் காத்திருக்கிறது.