Published:Updated:

சுதந்திரம் தேடி! - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி

‘மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு மேகன் திரும்புவார். ஹாரி தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளார்.

பிரீமியம் ஸ்டோரி

இங்கிலாந்து அரசியலை பிரெக்ஸிட் தாக்கியதைப்போல், இங்கிலாந்தின் அரச குடும்பத்தைச் சூறாவளியாகத் தாக்கியுள்ளது ஹாரி எக்ஸிட்!

டயானாவின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஹாரி, அவருடைய மனைவி மேகன் மெர்க்கல் இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளது, இங்கிலாந்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஆறு மாதம் கனடாவில் தங்கிவிட்டு, கடந்த 7-ம் தேதி இங்கிலாந்து திரும்பிய ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். தங்களின் நிதி சுதந்திரத்துக்காக வேலை பார்க்கப்போவதாகவும், தங்கள் நேரத்தை இங்கிலாந்திலும் வட அமெரிக்காவிலும் செலவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், ‘அரசுக்கும் ராணிக்கும் தொடர்ந்து சேவை செய்ய கடமைப்பட்டுள்ளோம்’ எனவும் கூறியுள்ளனர்.

சுதந்திரம் தேடி! - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து வரலாற்றில் இதுவரை இப்படியொரு முடிவை யாரும் எடுத்ததில்லை. நாட்டின் அரசர் ஆவதற்கு ஆறாவது நபராக வரிசையில் நிற்கும் ஹாரியின் இந்தத் தடாலடி முடிவால், அரச குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது. இப்படி ஒரு முடிவை எடுக்கும் முன், குடும்ப உறுப்பினர் ஒருவரிடம்கூட ஹாரி ஆலோசிக்கவில்லை என்பதுதான் ராணி எலிசபெத்தை மிகவும் காயப்படுத்திவிட்டது.

இந்தப் பிரச்னையை எப்படி சுமுகமாகச் சமாளிப்பது என்று அரச குடும்பம் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, மேகன் கனடாவுக்குப் பறந்துவிட்டார். ‘‘சில காலமாக இந்தத் தம்பதியர் சந்தித்து வந்துள்ள பிரச்னைகளுக்கான ஒரு முடிவுதான் இது’’ என்கின்றனர் அரச குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

ஹாரி, மேகன் தம்பதி
ஹாரி, மேகன் தம்பதி

2017-ல் அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதற்காக, அரச பாரம்பர்யங்களை உடைத்தெறிந்தார் ஹாரி. அப்போதே குடும்பத்தில் பிரச்னை வெடித்தது. அவரின் காதல் திருமணத்தை அரச குடும்பம் முழுமனதோடு அங்கீகரிக்கவில்லை. மெர்க்கல் வெள்ளையர் அல்ல... விவாகரத்தானவர் என்பதால், அரச குடும்பத்தினர் பலமுறை அவரை தரக்குறைவாக நடத்தியதும், மீடியாவில் அவரைப் பற்றி தவறாகப் பேசிவந்ததும் ஹாரியை அதிகளவில் காயப்படுத்தின. அதனால், ஹாரி தம்பதியர் அரச குடும்பத்திலிருந்து சற்று விலகியே இருந்துவந்தனர்.

ராஜ குடும்பத்தின் பகட்டு, படாடோபம் திறப்புவிழாக்களில் கலந்துகொள்ளும் ஆடம்பரம் அனைத்தையும் தொடக்கத்திலிருந்தே ஹாரி வெறுத்துவந்தார். தாயைப்போலவே, குழந்தைகளுக்கும் முன்னாள் போர்வீரர்களுக்கும் உதவிபுரிவதை ஹாரி மிகவும் விரும்பினார். 1997-ல், மத்திய அங்கோலாவில் கண்ணிவெடி புதைத்து வைத்திருந்த பகுதியில் நடந்து சென்று உலகின் கவனத்தை ஈர்த்தவர் இவரின் தாய் டயானா. அதேபோல் கடந்த ஆண்டு, தாயின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஹாரியும் நடந்துகாட்டினார்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் மீடியா மூக்கை நுழைக்கிறது என்ற ஆத்திரம், ஹாரிக்கு நீண்டகாலமாகவே இருந்துவந்தது. தன் தாய் டயானாவை மீடியா துரத்தியதுபோல் தன் மனைவியையும் மீடியா துரத்தியதால், ஹாரி நொந்துபோனார். பலமுறை மீடியாவுடன் நேரடியாக மோதினார். அரச குடும்பத்தில் இருப்பதால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், சங்கடங்களைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் ஹாரி. கடைசியில், அரச குடும்பத்திலிருந்தே வெளியேற ஹாரி தம்பதியினர் முடிவுசெய்துவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை அரச குடும்பம்தான் அதன் உறுப்பினர்களை வெளியேற்றித் தண்டித்துள்ளது. ஆனால், ஒருவர்கூட தாங்களாக வெளியேறியதில்லை. 1936-ல் எட்டாம் எட்வர்டு, அமெரிக்கப் பெண் வில்லீஸ் சிம்சனை மணப்பதற்காக மணிமுடியைத் துறந்தார். அதனால், அவர் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்

பட்டார். 1996-ல் வேல்ஸ் இளவரசி டயானா, இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ததால் அரச குடும்ப அந்தஸ்தை இழந்தார். 2016-ல் அமெரிக்க நிதி நிறுவனர் ஜெஃப்ரி எப்ஸ்டெய்னுடன், இளவரசர் ஆன்ரூ தொடர்பு வைத்திருந்தது அம்பலமானதால், அவரும் அரச குடும்பத்தால் ஓரங்கட்டப்பட்டார். ஆனால், மேகன்-ஹாரி தம்பதி தாங்களாகவே வெளியேற முடிவுசெய்துள்ளனர். அரச குடும்பத்துக்கு அரசு வழங்கும் நிதியைத் தொட மாட்டோம் எனவும் அறிவித்துவிட்டனர்.

ஹாரி, மேகன் தம்பதி
ஹாரி, மேகன் தம்பதி

மகாராணியும் மற்றவர்களும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண துடித்துக்கொண்டிருக்கும்போது, கனடாவுக்குப் பறந்துவிட்டார் மேகன். இவர்களுக்கு எப்படி நிதி, பாதுகாப்பு வழங்குவது போன்ற சிக்கல்கள் அரசுக்கும் எழுந்துள்ளன.

‘மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு மேகன் திரும்புவார். ஹாரி தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளார். கடந்த டிசம்பரில் அவருடைய நிறுவனத்தைப் பதிவுசெய்ய விண்ணப்பித்துள்ளார்’ என்று மேற்கத்திய மீடியாக்கள் பரபரக்கின்றன.

காதலியைக் கைப்பிடிக்க அரச பாரம்பர்யங்களைக் கைவிட்ட ஹாரி, மனைவிக்காக அரச வாழ்வையும் துறக்க முடிவுசெய்துவிட்டார். இவர்கள் எங்கே, எப்படி வாழப்போகிறார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், தாய் டயனாவைப் பின்பற்றும் ஹாரியின் சேவை தொடரும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு