Election bannerElection banner
Published:Updated:

விடைபெற்றார் இளவரசர் பிலிப் : ஜார்ஜ் தேவாலய `ராயல் வால்ட்' அறையில் உடல் நல்லடக்கம்!

விடைபெற்றார் இளவரசர் பிலிப்
விடைபெற்றார் இளவரசர் பிலிப்

கடந்த 9-ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடல், இன்று புனித ஜார்ஜ் தேவாலயத்தின் `ராயல் வால்ட்' பெட்டகத்தில் முறைப்படி இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக நீண்டகாலம் பதவியிலிருந்தவரும், ராணி எலிசபெத்தின் அன்புக்கும் மக்களின் அன்புக்கும் பாத்திரமாக விளங்கியவருமான மன்னர் பிலிப்பின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த விருப்பத்தின் பேரில் ஆரவாரமின்றி மிகவும் எளிமையாக நடந்து முடித்திருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அரசு குடும்பத்தைச் சேர்ந்த 30 பேருக்கு மட்டுமே அரண்மனை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், பேரன்பின் மிகுதியால் திரளான மக்கள் தடைகளை மீறி முன்னதாக இளவரசரின் உடல் வைக்கப்பட்டிருந்த விண்ட்சர் கோட்டையின் வாசலில் மலர்களையும், இரங்கல் வாசகங்களையும் வைத்து தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

பிலிப் இறுதி யாத்திரை
பிலிப் இறுதி யாத்திரை

தனது 99-ம் வயதில் பொதுவாழ்வுக்கு விடைகொடுத்திருக்கும் இளவரசர் பிலிப்பின் நாட்டுப்பற்று, விசுவாசம், சேவை போன்றவற்றைப் பறைசாற்றும்விதமாக அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் 700-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்று, தங்கள் மன்னருக்கு இறுதி விடை கொடுத்தனர். அதிலும் குறிப்பாக, இளவரசர் பிலிப்பின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த 'பிரிட்டன் கப்பற்படை' அவருக்கு குண்டுகள் முழங்க முழு மரியாதை செலுத்தியது.

9-ம் தேதி விண்ட்சர் கோட்டையில் உயிரிழந்த இளவரசரின் உடல், இத்தனை நாள்களாக அங்குள்ள தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று நல்லடக்க நாளை முன்னிட்டு காலை 11 மணியளவில் ராணுவக்கொடி, மாலை போர்த்தப்பட்டு, இளவரசரின் கடற்படை தொப்பி மற்றும் அவர் பயன்படுத்திய வாள் ஆகியவை சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தன. சவப்பெட்டியை விண்ட்சர் கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவந்து `கிரனடியர் கார்ட்ஸ்' (Grenadier Guards) எனும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க எட்டு நிமிட அணிவகுப்பு நடத்தினார்கள். அந்த அணிவகுப்பில், இளவரசர் பிலிப் தன் மறைவுக்கு முன்னதாக விரும்பிய பாடலின் இசை ஒலித்தது. அப்போது ராணி எலிசபெத் மட்டும் சபையில் தனியாக அமர்ந்திருந்தார்.

பிலிப் இறுதிச்சடங்கு
பிலிப் இறுதிச்சடங்கு

இசை அஞ்சலியுடன் தொடங்கிய இளவரசரின் இறுதிப் பயணத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் துக்க அனுசரிப்பின் வெளிப்பாடான கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்தார்கள். கொரோனா பரவலின் காரணமாக ராணி எலிசபெத் அருகே செல்ல அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பிரிட்டன் நேரப்படி மதியம் 2 மணியளவில் இளவரசர் பிலிப்பின் உடலுக்கு இங்கிலாந்தின் ராணுவப் படைகள் அணிவகுப்பு நடத்தி அரசு மரியாதை செலுத்தின. இளவரசரின் ராயல் நேவி (Navy), ராயல் மரைன்ஸ் (Marines), கிரனடியர் (Grenadier Guards) , ராயல் ரைஃபிள்ஸ் (Riffles), இன்டலிஜென்ஸ் கார்ப்ஸ் (Intelligence) மற்றும் ஹைலேண்டர்ஸ் (high-Landers) ஆகிய படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கோட்டையில் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து சடங்குகள் தொடங்கின. இளவரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காத அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும், ராணுவ உயரதிகாரிகளும் தனி வாகனத்தில் புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். கொரோனா பரவல் காரணமாகக் கலந்துகொள்ளாத இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தொலைக்காட்சி வாயிலாக நிகழ்வுகளைப் பார்த்தார்.

2:30 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இளவரசரின் சவப்பெட்டி அவர் மேற்பார்வையின் கீழ் மாற்றி வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் வகை வாகனத்தில் ஏற்றப்பட்டு, ஊர்வலத்துக்குத் தயாரானது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவிருந்த இளவரசர் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட், இளவரசி அன்னே, பேரன்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் கோட்டையிலிருந்து வெளியேறி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலம்

இறுதி ஊர்வலத்தின்போது இருபுறமும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நடுவில் லேண்ட் ரோவர் வாகனத்துடன் இளவரசர் ஹாரிஸ், வேல்ஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் நடந்து சென்றனர். ராணி எலிசபெத் மட்டும் ஸ்டேட் பென்ட்லி என்றழைக்கப்படும் காரில் கோட்டையிலிருந்து முன்னதாகவே புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். விண்ட்சர் கோட்டைக்கு மிக அருகாமையில் ஜார்ஜ் தேவாலயம் அமைந்திருந்ததால், இறுதி ஊர்வலம் சில நிமிடங்களிலேயே முடிந்தது. ராணி எலிசபெத் தேவாலயத்தை அடைந்ததும், 'தேசியகீதம்' இசைக்கப்பட்டது.

இளவரசரின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த லேண்ட் ரோவர் வாகனம் ஜார்ஜ் தேவாலயத்தை அடைந்ததும், தி கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் (The Kings Troops Royal Hours) வகை பீரங்கிகள் தொடர்ந்து ஒரு நிமிட நேரம் இடைவிடாமல் வானத்தை நோக்கிச் சுடப்பட்டன. மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கான அபாய ஒலி ஒலித்தது. மக்கள் அனைவரும் தங்கள் மன்னர் பிலிப்புக்குத் தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்தினார்கள். அந்த நேரத்தில், லண்டன் மற்றும் இதர விமான நிலையங்களில் 6 நிமிடங்களுக்கு விமானங்கள் புறப்படவோ, தரையிறங்கவோ இல்லை. தேவாலயத்தின் நுழைவு படிக்கட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை தேவாலய பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் மத குருக்கள் பெற்றுக்கொண்டு ராணுவத்தினரின் உதவியுடன் தேவாலயத்துக்கு உள்ளே கொண்டு சென்றனர்.

பிலிப் இறுதிச்சடங்கு
பிலிப் இறுதிச்சடங்கு

அங்கு, இளவரசர் பிலிப்பின் இரங்கல் செய்தியை தேவாலய பேராயர் சபையினருக்கு வாசித்துக் காட்டினார். அதைத் தொடர்ந்து, நான்கு பேர்கொண்ட தேவாலய இசைக்குழு பாடல் பாடி இளவரசர் பிலிப்பை இறைவனிடம் அர்ப்பணித்தனர்.

பிலிப் இறுதிச்சடங்கு
பிலிப் இறுதிச்சடங்கு

3 மணிக்குத் தொடங்கிய சடங்குகள் சுமார் 4 மணியளவில் (இந்திய நேரப்படி 8:00) நிறைவடைந்ததைத் தொடர்ந்து இளவரசர் பிலிப்பின் பூத உடல், புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அமைந்துள்ள 'ராயல் வால்ட்' எனப்படும் சவப்பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிலிப்
பிலிப்

ஜார்ஜ் தேவாலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த 'ராயல் வால்ட்' 1810-ம் ஆண்டு உயிரிழந்த மன்னர் ஜார்ஜுக்காகக் கட்டப்பட்டது. அது தொடங்கி, ஜார்ஜ் IV, மன்னர் வில்லியம்ஸ் IV என அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரது உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. இளவரசர் பிலிப்பின் உடல் தற்போது ராயல் வால்ட்டில், 1969-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட அவரது தயார் இளவரசி ஆலிஸ் உறைவிடத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ராணுவ அணிவகுப்பு
ராணுவ அணிவகுப்பு

கடந்த 9-ம் தேதியில் தொடங்கி இன்று வரை 9 நாள்கள் துக்கம் அனுசரித்துவந்த இங்கிலாந்து நாட்டு மக்கள், தற்போது இளவரசர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை அடுத்து தங்கள் துக்க அனுசரிப்பை முடித்துக்கொள்வார்கள்.

ஆனால், நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரிட்டன் கொடிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மன்னர் மறைவையொட்டி இரண்டு வார காலம் பொதுவெளியில் கறுப்புப் பட்டை அணிந்து துக்கம் அனுசரிப்பார்கள்.

இங்கிலாந்து
இங்கிலாந்து

இளவரசர் பிலிப்புக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாதபோதிலும் கோடிக்கணக்கான மக்கள் இணையவெளி மூலமாக தங்கள் இரங்கல்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

பிலிப்
பிலிப்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு