Published:Updated:

12 மணி நேரத்தில் 353 மில்லியன் மரக்கன்றுகள்!- சுற்றுச்சூழலைக் காக்க எத்தியோப்பியாவின் பெரு முயற்சி

பிரேம் குமார் எஸ்.கே.

'காடுகளை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் புவியில் இருக்கும் கார்பன் வெப்பத்தை மூன்றில் இரண்டு பங்குவரை நீக்க முடியும்' என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மரக்கன்றுகள் நடும் அமைச்சர்
மரக்கன்றுகள் நடும் அமைச்சர் ( Twitter )

உலகம் முழுவதும் உள்ள நாடுகள், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டுவருகின்றன. தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாகப் பல உலக நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிய காலம் போய் இன்று, உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதெல்லாம் சுற்றுச்சூழல் தொடர்பாகத்தான். அதிகரிக்கும் இயந்திரங்களின் பயன்பாடு காரணமாகவும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதாலும் கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமடைந்துவருகிறது. இதனை எதிர்கொள்ளப் பெரும் காடுகள் மிக முக்கியத் தேவையானதாக இருக்கிறது.

எத்தியோப்பியா
எத்தியோப்பியா
Twitter

உலக நாடுகள் அனைத்தும் பேசிக்கொண்டே இருக்க, எத்தியோப்பியா, களத்தில் இறங்கியது. பெரும் பசுமைப் புரட்சியை நடத்தி முடிக்க நாள் குறிக்கப்பட்டது. நாட்டில் இருக்கும் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுக்க வேண்டுகோள் விடப்பட்டது. அரசுப் பணியாளர்களும் இதில் கலந்துகொள்ள, அனைத்து அரசு நிறுவனங்களும் மூடப்பட்டன.

காடுகள் அழிப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நாட்டில் நிலவும் வறட்சி ஆகியவற்றை மரங்களால்தான் இதனை எதிர்கொள்ள முடியும் என இந்த முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

`5 ஆண்டுகளில் அரசு அனுமதியுடன் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டன!' - மத்திய அமைச்சர் தகவல்

2000-ம் ஆண்டில், எத்தியோப்பியா காடுகளின் பரப்பளவு என்பது நாட்டில் 4% தான். ஆனால் கடந்த நூற்றாண்டில் இது 35% ஆக இருந்திருக்கிறது. அந்நாட்டின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மேகுரியா, தொடர்ச்சியாக நடப்படும் மரங்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களைத் தந்துகொண்டிருந்தார். இறுதியாக, மாலியில் 12 மணி நேரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கையை வெளியிட்டார். அது 35,36,33,660.

2017-ம் ஆண்டில், இந்தியா 12 மணிநேரத்தில் 66 மில்லியன் மரக்கன்றுகளை 1.5 மில்லியன் தன்னார்வலர்களைக்கொண்டு நடவுசெய்தது. தற்போது அந்தச் சாதனையைப் பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 4 பில்லியன் மரக்கன்றுகளை நட அந்நாடு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மரம் நடும் எத்தியோப்பியா மக்கள்
மரம் நடும் எத்தியோப்பியா மக்கள்
Twitter

மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன்மூலம் விவசாயத்தில் நல்ல வருமானம் வரும் என்றும் தண்ணீர்ப் பிரச்னை முதல் தூய்மையான காற்று எனப் பல நல்ல விஷயங்களை வரும் காலத்தில் அனுபவிக்கப்போகிறோம் என மகிழ்ச்சியில் உள்ளனர் அந்நாட்டு மக்கள். காடுகளை மீண்டும் கொண்டுவருவதன்மூலம் புவியில் இருக்கும் கார்பன் வெப்பத்தை மூன்றில் இரண்டு பங்கு வரை நீக்க முடியும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.