Published:Updated:

`10 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழப்பு!’ - இரானை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று

கொரோனா, இரான்
கொரோனா, இரான் ( AP )

இரானில் பத்து நிமிடங்களுக்கு ஒரு கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரின் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 10,000 பேரை பலிகொண்டுவிட்டது. கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், இந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பரவி அங்கிருக்கும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.

இரான்
இரான்
AP

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் இரானும் இந்த வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,248 ஆக உள்ளது. அதுவே இத்தாலியில் 3,405 ஆக அதிகரித்துள்ளது. இரானில் பலி எண்ணிக்கை 1,284 ஆக உள்ளது. இரான் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதனால் ஏற்கெனவே இரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையில் அங்கு பரவிவரும் வைரஸைக் கட்டுப்படுத்தமுடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

இரானில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,407 ஆக உள்ளது, அங்கு கடந்த புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் 149 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதுவே மறுநாள் வியாழக்கிழமை 147 பேர் இறந்துள்ளனர். நேற்று மட்டும் 1,046 பேர் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் இரான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இரானின் வைரஸ் நிலை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர், ``இரான் முழுவதும் இருந்து எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, இங்கு பத்து நிமிடத்துக்கு ஒரு வைரஸ் நோயாளி உயிரிழக்கிறார். மேலும், ஒரு மணி நேரத்துக்கு 50 பேர் வீதம் புதிதாக வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் தகவலைக் கருத்தில் கொண்டு பயணங்கள் மற்றும் நவ்ருஸ் (Nowruz - இரானில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை) தினத்தில் விருந்தினர்களை வீட்டுக்கு அழைப்பது ஆகியவற்றில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இரானின் நிலை அந்நாட்டு மக்களுக்குப் பெரும் கவலையளிப்பதாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு