Published:Updated:

ட்ரம்ப்பைவிட 17 மடங்கு சொத்து; ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம்- ட்ரம்ப்பை எதிர்க்கும் ப்ளூம்பெர்க் யார்?

ப்ளூம்பெர்க் உடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்
News
ப்ளூம்பெர்க் உடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்

`ஒரு ரூபாய் சம்பள’ ட்ரெண்ட் நம் ஊரில் மட்டுமல்ல... அமெரிக்காவிலும் உண்டு. தற்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் மைக்கேல் ப்ளூம்பெர்க்கும் அப்படி ஒரு ரூபாய் சம்பளம் பெற்றவர்தான். யார் இவர்?

கோடீஸ்வரர்களுக்கிடையே நடக்கப்போகும் மோதலாக மாறியிருக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே கோடீஸ்வரர். இவரை எதிர்த்து, அமெரிக்கத் தேர்தலில் குதித்துள்ளார் இன்னொரு பெரும் கோடீஸ்வரரான மைக்கேல் ப்ளூம்பெர்க். இவர் வேறு யாருமல்ல ப்ளூம்பர்க் டி.வி-யின் ஓனர்தான். நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள வங்கி ஒன்றில் மாதம் 9,000 அமெரிக்க டாலர்கள் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்த ப்ளூம்பெர்க் இன்று கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர். ஜனநாயகக் கட்சியில் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய, ப்ளூம்பெர்க் பின்னர் குடியரசுக் கட்சிக்குத் தாவினார்.

மைக்கேல் ப்ளூம்பெர்க்
மைக்கேல் ப்ளூம்பெர்க்

2002-ம் ஆண்டு நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ப்ளூம்பெர்க். 2002 முதல் 2013-ம் ஆண்டு வரை நியூயார்க் நகர மேயராகவும் அவர் இருந்தார். அப்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதுபோல இவர் ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர்தான் சம்பளமாக வாங்கினார். மேயர் பதவியிலிருந்து விலகிய பிறகு, மீண்டும் தாய்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் ஐக்கியமானார். அரசியலை ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு, பிசினஸில் அதிக கவனம் செலுத்தினார். அமெரிக்க மக்கள் அதிபர் தேர்தலில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். பெரும் பணக்காரர்களை அதிபராகத் தேர்வு செய்ய தயக்கம் காட்டுவார்கள். `பணக்காரர்களுக்கு தொழிலை கவனிக்கவே நேரம் இருக்காது... மக்களைப் பற்றி சிந்திப்பார்களா' என்கிற எண்ணமே அதற்குக் காரணம். அதனால், அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ப்ளூம்பெர்க் இதுவரை ஒதுங்கியிருந்தார். அந்தப் பிம்பத்தை உடைத்து முதன்முறையாக அதிபர் ஆனவர் ட்ரம்ப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ட்ரம்ப்பைத் தொடர்ந்து ப்ளூம்பெர்க்கும் அதிபர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இவர், அமெரிக்காவின் 9-வது பெரும் பணக்காரர். போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில், உலகளவில் 14 வது இடம் வகிக்கிறார். ட்ரம்ப்பைவிட 17 மடங்கு செல்வம் இவரிடத்தில் கொட்டிக்கிடக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் பட்டியலில் துணை ஜனாதிபதி ஜோ பிடென் உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று, ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ப்ளூம்பெர்க் அறிவித்தார். தொடர்ந்து, அலபாமா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் இவர் போட்டியிடும் பட்சத்தில், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அனல் வீசப்போவது நிச்சயம்.

அமெரிக்காவில் தேர்தல்
அமெரிக்காவில் தேர்தல்

`ப்ளூம்பெர்க் பணத்தை அள்ளி வீசுபவர்' என்ற பேச்சும் உண்டு. தற்பேதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் `தன்னைத் தவிர்த்து வேறு யாரும் ட்ரம்ப்க்கு டஃப் கொடுக்க முடியாது' என்றும் ப்ளூம்பெர்க் சொல்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்தாலும் மாகாண உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்க வேண்டும். அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. 538 மாகாண உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெரிய மாகாணத்துக்கு அதிக உறுப்பினர்கள் கிடைப்பார்கள். இவர்களை `எலக்டர்கள்' என்று சொல்வார்கள். அதன்படி, ஒரு மாகாணத்தில் எந்த அதிபர் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டர்களின் வாக்குகளும் அந்த வேட்பாளருக்குப் போய்விடும். சில மாகாணங்களில் மட்டுமே விகிதாச்சார முறை பின்பற்றப்படுகிறது. எனவே, மக்கள் ஆதரவு பெற்றாலும் 270 எலக்டர்களின் ஆதரவு பெறமுடிந்தால் மட்டுமே ஜனாதிபதியாக முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ராசி இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்புக்கு 47.5 சதவிகிதமும் கிளாரிக்கு 47.7 சதவிகிதமும் மக்கள் ஓட்டுகள் விழுந்தன. ஆனால், பெரிய மாகாணங்களின் எலக்டர்களின் ஒட்டு மொத்த ஆதரவு ட்ரம்ப்க்குக் கிடைத்ததால் அவர் அதிபராக முடிந்தது. இதேபோல் 4 ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். இத்தகைய துரதிர்ஷ்ட நிலை குடியரசுக் கட்சிக்கு ஒரு முறைகூட ஏற்பட்டதில்லை.

2001-ம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷிடம் அல்கோர் தோற்றதும் இப்படித்தான். அதனால், இந்த முறை ட்ரம்ப்பைத் தோற்கடிக்க கூடிய உறுதியான வேட்பாளரை ஜனநாயகக் கட்சி சார்பாக நிறுத்தவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பண பலத்திலும் மேடை விவாதத்தில் பதிலடி கொடுப்பதிலும் ட்ரம்ப்க்கு இணையானவர். அமெரிக்கத் தேர்தல் களத்தில் டி.வி பிரசாரம் மிக முக்கியமானது. இதற்குச் செலவு செய்ய ப்ளூம்பெர்க்கிடம் பணமும் கொட்டிக் கிடக்கிறது. அதனால், ஜனாநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளராக மைக்கேல் ப்ளூம்பெர்க் தேர்வு செய்யப்படவே 90 சதவிகித வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பணத்தைக் கொண்டு அமெரிக்க அதிபர் பதவியை வாங்கிவிட முடியுமா? ப்ளூம்பெர்க் மூக்குடைவது உறுதி.
ப்ளூம்பெர்க் எதிர்ப்பாளர்கள்

மஸ்ஸாசூசேட்ஸ் மாகாணத்தில் மெட்ஃபோர்ட் என்ற நகரத்தில் பிறந்த ப்ளூம்பெர்க் 77 வயது நிரம்பியவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகவியலில் பட்டம் பெற்றவர். தன் பிரசாரத்தைத் தொடங்கியதும் ப்ளூம்பெர்க் எல்.பி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார். இந்த நிறுவனத்தில் 20,000 பேர் பணி புரிகின்றனர். அமெரிக்கத் தேர்தல் பிரசார செலவுக்கு பல கோடிகள் தேவைப்படும். இதனால், வேட்பாளர்கள் தங்களுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்டிக் கொள்வார்கள். ப்ளூம்பெர்க், `மக்களிடமிருந்து நிதி திரட்டப் போவதில்லை, என் சொந்தப் பணத்தில் பிரசாரம் செய்யப் போகிறேன்' என்று அறிவித்துள்ளார். தொலைக்காட்சி விளம்பரத்துக்காக மட்டும் 37 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட ப்ளூம்பெர்க் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், `பணத்தை வைத்து அமெரிக்க மக்களையும் அதிபர் பதவியையும் வாங்கிவிட முடியாது. பணம் கொட்டிக் கிடக்கும் மமதையில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் ப்ளூம்பெர்க் மூக்குடைபட்டு போவது நிச்சயம் ' என்று ப்ளூம்பெர்க் எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.