பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இம்ரான் கான் அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. அதைத் தொடர்ந்து, இம்ரான் கான் அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் பதவியேற்றார். அதையடுத்து, அரசு கருவூலத்துக்குச் சொந்தமான பரிசுகளை இம்ரான் கான், தானே வைத்துக்கொண்டதாக ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியிருக்கிறார். பாகிஸ்தான் அரசின் விதிகளின்படி, அரசு அதிகாரி ஒருவர் மற்றொரு நாட்டின் தலைவரிடமிருந்து பெற்ற பரிசுகளைக் கருவூலத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், இம்ரான் கானும், அவர் மனைவி பீபியும் 112 பரிசுகளை, அவற்றின் உண்மையான விலையில் 30%-க்கும் குறைவாகச் செலுத்தி தாங்களே வைத்துக்கொண்டதாக பாகிஸ்தான் செய்தி தளம் கூறியிருந்தது.
அதுமட்டுமல்லாமல், ``ஊழலை அகற்ற வேண்டும் என்று கூறி பாகிஸ்தானின் பிரதமராகி, அரசு கருவூலத்தின் சுமையைக் குறைக்கப் பல சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்திய இம்ரான் கான், வெளிநாட்டுத் தலைவர்கள் மூலம் அன்பளிப்பாக வந்த ரூ.14 கோடி மதிப்பிலான பரிசுகளை துபாயில் விற்றதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
அந்தப் பரிசுகளில், ரோலக்ஸ் வாட்ச், பிரேஸ்லெட், ஐபோன் உள்ளிட்ட பல பரிசுகளை, அரசு கருவூலத்தில் அதன் உண்மை விலையைவிடவும் குறைவான அளவிலேயே பணம் செலுத்தி இம்ரான் கான் வைத்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.