Published:Updated:

`மனித உரிமை மீதான தலைமையின் தோல்வி!’- ட்ரம்பின் பதிலும் பெர்னி சாண்டர்ஸின் விமர்சனமும்

பெர்னி சாண்டர்ஸ்
பெர்னி சாண்டர்ஸ்

டெல்லிக் கலவரம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்தை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன் குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இவர் வந்திருந்த சமயத்தில்தான் வடகிழக்கு டெல்லியில், குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களும் இடையே மோதல் நிலவி வன்முறையாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் இதுவரை 25-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கிடையில் தன் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாளில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் இந்தியாவில் நடக்கும் காஷ்மீர் பிரச்னை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, டெல்லி வன்முறை போன்ற பல்வேறு விசயங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. டெல்லிக் கலவரம் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், `டெல்லியில் நடக்கும் தனிப்பட்ட தாக்குதல்கள் பற்றி நான் கேள்விப்பட்டேன். ஆனால், அது தொடர்பாக இந்தியப் பிரதமரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. இது இந்தியாவின் பிரச்னை” என்று கூறியிருந்தார்.

`வெள்ளை மாளிகை டு டெல்லி; ட்ரம்ப்பை சீண்டும் சி.என்.என் பத்திரிகையாளர்!' - யார் இந்த ஜிம் அகோஸ்டா?

இந்நிலையில் ட்ரம்பின் இந்தப் பதிலையும் அவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உள்ள பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders). இது பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றர். டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது 27 பேராவது உயிரிழந்திருப்பார்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இது ‘இந்தியாவின் பிரச்னை’ என்று ட்ரம்ப் கூறுகிறார். இவரின் செயல் ‘மனித உரிமைகள் மீதான தலைமையின் தோல்வியைக் காட்டுகிறது’ என்று விமர்சித்துள்ளார்.

ட்வீட்
ட்வீட்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், அமெரிக்க செனட்டருமான எலிசபெத் வரன் தான் முதன்முதலில் டெல்லியில் நடக்கும் வன்முறைக்கு எதிராகப் பேசினார். இவரைத் தொடர்ந்து தற்போது அதே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸும் பேசியுள்ளார். ஜனநாயகக் கட்சியினரையும் தாண்டி பல்வேறு அமெரிக்க செனட்டர்கள் டெல்லிக் கலவரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

``அண்மையில் டெல்லியில் நடந்த வன்முறைகளால் நாங்கள் பீதியடைந்துள்ளோம். நம் நீண்டகால உறவை முன்னேற்றுவதற்காகக் குறிப்பிடத்தக்க அக்கறை கொண்ட பிரச்னைகள் குறித்த உரையாடலை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஜனநாயகத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். மேலும், மதவெறியின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தவிர்க்க வேண்டும்” என்று செனட்டர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு