Published:Updated:

`பிரதமர் அப்படிச் சொன்னாரா?!’ - `4 வேலை நாள்’ கருத்தை நிராகரித்த பின்லாந்து

இனி வாரத்துக்கு 4 நாள்கள் வேலை செய்யலாம் என வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என அந்நாட்டு அரசு முற்றிலும் மறுத்துள்ளது.

பின்லாந்து பிரதமர் சன்னா மரின்
பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சமூக ஜனநாயகக் கட்சி, இடதுசாரி கூட்டணிக் கட்சி, மத்திய கட்சி, கிரீன் லீக், ஸ்வீடிஸ் மக்கள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. அங்கு சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக உள்ளார். இவர்தான் உலகிலேயே இளம் வயது பிரதமர். இதனால் இவர் மீதும் இவரது அரசு மீதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சன்னா மரின்
சன்னா மரின்

இந்நிலையில், பின்லாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இனி வாரத்துக்கு 4 நாள்கள், ஒரு நாளுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என அவர் அறிவித்துள்ளதாகச் செய்தி வெளியானது. ``மக்கள் தங்கள் வேலையைத் தாண்டி குடும்பத்தினர், பிடித்தவர்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றில் அதிக நேரம் செலவிட வேண்டும், அதுதான் உண்மையான கலாசாரமாக இருக்கும் என நான் நம்புகிறேன். மக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களது வேலையில் பிரதிபலிக்கும்” எனச் சன்னா பேசியதாகக் கூறப்பட்டது.

`27 வயதில் அரசியல் என்ட்ரி; 34 வயதில் நாட்டின் தலைவர்!' - உலகின் இளம் பிரதமராகிறார் சன்னா மரின்

இந்தச் செய்தி ஊடகங்கள், சமூகவலைதளங்கள் என அனைத்திலும் செம்ம வைரலானது. பின்லாந்து பிரதமரின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் பலரும் அதிக வரவேற்பு தெரிவித்திருந்தனர். சன்னா மிகச் சிறந்த பிரதமர் என்றும் தாங்களும் பின்லாந்தில் பணி செய்திருக்கலாம் என்பது போலவும் பல கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.

ஆனால், பின்லாந்து பிரதமர் அப்படி ஓர் அறிவிப்பை வெளியிடவே இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ``பின்லாந்து அரசு, 4 நாள்கள் வேலை செய்தால் போதும் என எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிரதமர் பேசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. சன்னா மரின், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த விஷயம் தொடர்பாகச் சிறிய ஆலோசனை நடத்தினார். ஆனால், பிரதமரான பிறகு, சமீபத்தில் வேலை நாள்கள் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.