Published:Updated:

`வடகொரியாவின் ஃபர்ஸ்ட் ஃபீமேல் டிக்டேட்டர்’ – உலகமே எதிர்நோக்கி இருக்கும் கிம் யோ ஜாங் யார்?

கிம் யோ ஜாங்
News
கிம் யோ ஜாங்

மன்னர் ஆட்சியில் ரத்த உறவுகளின் குருதியில் நனைந்து ஆட்சி அரியணையில் வாரிசுகள் அமர்வார்கள். இதே கான்செப்ட்தான் கிம் ஜாங் உன் கையாண்டது.

வடகொரியாவின் ஆட்சி அதிகாரம் ஒரு பெண்ணின் கைகளுக்கு மாறப்போகிறது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு வதந்தி.. அதைச் சுற்றி பல கதைகள் என கொரோனா காலத்திலும் விஸ்வரூபம் எடுக்கிறது வடகொரிய அரசியல்.

`வடகொரியா’ ஒரு மர்மதேசம்.. மாய உலகம் என கதைகளை அளக்க விரும்பவில்லை. கருத்து, அரசியல் சுதந்திரம் இல்லாத ஒரு தேசம். நாட்டில் இருப்பதோ ஒரே ஒரு கட்சி அதன்பெயரோ கொரிய தொழிலாளர் கட்சி. வடகொரிய அதிபராக கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கிம் ஜாங் உன் தனது முன்னோர்கள் வழியில் சர்வாதிகார ஆட்சியை கச்சிதமாக நிலைநிறுத்தி வருகிறார்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

போராட்டம்.. ஆர்ப்பாட்டம் என்ற வார்த்தைகளே அங்கு குற்றமாக பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிராகப் பேசுவது பெருங்குற்றமாக கருதப்படும். பத்திரிகைகளும் இணையதளங்களும் அரசின் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. நாட்டில் புரட்சி ஏற்பட்டு நம் கைகளில் இருந்து ஆட்சி அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருப்பதுதான் இந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் காரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆட்சியாளர்கள்தான் கடவுள்!

கொரிய தொழிலாளர் கட்சியின் ஆட்சியில்தான் மக்கள் சுரண்டப்பட்டார்கள், சுரண்டப்படுகிறார்கள் இனியும் சுரண்டப்படுவார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிறீர்களா. சர்வாதிகார ஆட்சிக்கான அடித்தளத்தை ஆழமாக பதித்துவிட்டு சென்றுவிட்டார் கிம் ஜாங் உன் தாத்தா கிம்-இல்-சுங். இங்கு ஆட்சியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். இல்லை ஆட்சியாளர்கள்தான் கடவுள்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

கொரோனா காலத்திலும் வடகொரியாவின் பெயரை நாம் உச்சரிப்பதற்கு ஒரே காரணம் அதன் ஆட்சியாளர் கிம் ஜாங் உன். ஏப்ரல் 11-ம் தேதிக்குப் பின்னர் கிம் ஜாங் உன் நடவடிக்கைகள் எதுவும் பெரிதாக இல்லாததால் அவர் தொடர்பாக வதந்திகள் வட்டமடிக்கத் தொடங்கிவிட்டன. வடகொரியாவை உருவாக்கியவரும் கிம் ஜாங் உன் தாத்தாவுமான கிம்-இல்-சுங் பிறந்தநாள் விழா ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது. இதில் அதிபர் கலந்துகொள்ளவில்லை. இதுவே, அவர் உடல்நலம் தொடர்பான சந்தேகங்களை அதிகரிக்கச்செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிம் ஜாங் உன் எனும் சர்வாதிகாரி!

உலகநாடுகளின் எச்சரிக்கையையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்தியது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என அவ்வப்போது ஹாட் நியூஸாக வந்துப்போவார் கிம். மூன்றாவது மனைவிக்குப் பிறந்த மகனுக்கு அரியணை அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா என்ன. கிம்-இல்-சுங்கின் ஆஸ்தான வாரிசான கிம்-ஜொங்-இல்-ன் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவர்தான் கிம் ஜாங் உன். மன்னர் ஆட்சியில் ரத்த உறவுகளின் குருதியில் நனைந்து ஆட்சி அரியணையில் வாரிசுகள் அமர்வார்கள். இதே கான்செப்ட்தான் கிம் ஜாங் உன் கையாண்டது. அவருக்கு எதிராக இருப்பவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டிவிட்டுதான் அதிகாரத்துக்கு வந்தார்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

அரியணை கிடைக்க உதவியவர்களையும் பாரபட்சமின்றி தீர்த்துக்கட்டினார் கிம். துரோகிகளை அருகில் வைத்துக்கொள்ளக் கூடாது என நினைத்தாரோ என்னவோ. மிகுந்த நாட்டுப்பற்றுடைய கிம், மேற்கத்திய கலாசாரத்தை விரும்பியதில்லை. இத்தனைக்கும் அவர் பட்டப்படிப்பு படித்தது சுவிட்சர்லாந்தில். படிப்பு முடிந்ததும் நாடு திரும்பிய கிம் தந்தையுடன் அரசியல் பணிகளில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிம்-ஜொங்-இல் இறப்பதற்கு முன் கிம் ஜாங் உன் தான் தன்னுடைய அரசியல் வாரிசு எனக் கூறியதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இவரின் கையில் இருந்து ஆட்சி அதிகாரம் எப்படி ஒரு பெண்ணின் கைகளுக்கு செல்லப்போகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஏப்ரல் 11-ம் தேதிக்குப் பின்னர் கிம் ஜாங் உன் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுக்கவில்லை. அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விஷயத்தை சீனா, அமெரிக்கா பத்திரிகைகள் மோப்பம் பிடித்தது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கிம் கோமாவுக்குச் சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்டை நாடான தென்கொரியாவோ, கிம் நலமாக இருக்கிறார். நாங்கள் வடகொரியாவை கண்காணித்தது வரை அங்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

’கிம் ஜாங் உன் இடத்தில் ஒரு பெண்ணா!’ என நாம் புருவங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அந்த அரியணை அலங்கரிக்கப்போகிறவர் அவரது சகோதரி கிம்-யோ-ஜாங் தான் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

ஒரு பெண் வடகொரிய அதிபர் அரியணையில் அமரப்போகிறார் வடகொரிய மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று நினைத்தால் அது தவறான எண்ணம் என எச்சரிக்கை மணியை அடிக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். கிம் ஆட்சியை விட மிகவும் பயங்கரமாக இருக்கும். கிம் யோ-ஜாங் பதவிக்கு வந்தாலும் வடகொரியாவின் அரசியல் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது என்கிறார்கள்.

கிம் யோ ஜாங் வடகொரியா வருகை!

கிம் யோ ஜாங் தனது சிறுவயதிலே சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் பள்ளி, கல்லூரி படிப்பு. பல்கலைக்கழக படிப்புக்காக வடகொரியா திரும்பியதாகக் கூறப்படுகிறது. 2011-ம் ஆண்டு தன் தந்தை கிம்-ஜொங்-இல்-லின் இறுதிச்சடங்கின்போதுதான் முதன்முதலில் வடகொரிய மக்கள் முன்பு தோன்றினார். கிம்-ஜாங்-உன்னுடன் மிகவும் சகஜமாக அவர் சென்றதைப் பார்த்தவர்கள் அவரின் மனைவி என்றே நினைத்தனர். பின்னர்தான் கிம் யோ-ஜாங் அவரது சகோதரி என்ற விவரம் தெரியவந்தது. இருவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் என்று கூறப்படுகிறது. இருவரும் சிறுவயதில் இருந்தே மிகவும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

கிம் ஜாங்
கிம் ஜாங்

ஆட்சி அதிகாரத்தில் கிம்-ஜாங்-உன் அமர்ந்ததும் அரசியலில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார். கிம்-மின் மாமா ஜாங் சாங்- தைக் தூக்கிலிடப்பட்டதும் அதிகார வட்டத்துக்குள் இருந்த அவரின் மனைவியும் கிம்-மின் அத்தையுமான கிம் கியோங் ஹூய் பொதுப்பார்வையில் இருந்து 2013-ம் ஆண்டு விலகினார். இதையடுத்து அதிகார வட்டத்தில் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமான இடத்துக்குச் சென்றார் கிம் யோ-ஜாங். ஆளும் தொழிலாளர் கட்சியின் துணை இயக்குநராக 2014-ம் ஆண்டு அறியப்பட்டார். கிம் ஜாங் உன்னின் நிழலாக இவர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வடகொரியாவின் இவாங்கா ட்ரம்ப்!

2018-ம் ஆண்டு தென்கொரியா – வடகொரியா இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க அந்த சந்திப்பின்போது கிம் ஜாங் உன்னுடன் கிம் யோ ஜாங் உடன் சென்றிருந்தார். அதற்கு முன்பாகவே தென்கொரியாவின் பியோங்சாங்கில் பிப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டார். அப்போது அனைவரின் பார்வையும் கிம் யோ ஜாங் மீதுதான் இருந்தது. சூழலுக்கு ஏற்ற நேர்த்தியான உடைகளை அணிவதை விரும்புவார். இதன்காரணமாக வடகொரியாவின் இவாங்கா ட்ரம்ப் என்றும் அழைக்கப்படுகிறார்.

கிம் யோ ஜாங்
கிம் யோ ஜாங்

1953-ல் கொரியப்போர் முடிவடைந்ததிலிருந்து இந்தப்பகுதியை பார்வையிட்ட வடகொரிய ஆளும்வர்க்கத்தைச் சேர்ந்த முதல்நபர் என்ற பெருமையை கிம் யோ ஜாங் பெற்றார். தென்கொரியா அதிபருடனான விருந்திலும் அவர் கலந்துகொண்டார். கொரிய தொழிலாளர் கட்சியின் முக்கியபொறுப்பிலும் அவர் இருக்கிறார். அமெரிக்கா அதிகாரிகளின் தடுப்புப்பட்டியலில் மனித உரிமை மீறல்களுக்காக 2017-ம் ஆண்டு அவரது பெயர் இணைக்கப்பட்டது.

கிம் யோ ஜாங் ஒரு புத்திசாலி. கிம்மின் நிழலாக இருந்தவர். அவரது பலத்தை குறைத்து மதிப்பிடமுடியாது என்கிறார்கள். கிம்- ஜாங் –உன்னின் சகோதரர் மரணம் 2018-ல் சர்ச்சையை ஏற்படுத்தியது. தந்தையின் மரண செய்திகேட்டதும் நாட்டைவிட்டு அவரின் மகன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியே இருந்து இருந்தாலும் கிம் தீர்த்துக்கட்டியிருப்பார். கிம் ஜாங் உன்-க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வயதில் மிகவும் சிறியவர்கள் என்பதால் ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் வர வாய்ப்பில்லை.

கிம் ஜாங் உன் - கிம் யோ ஜாங்
கிம் ஜாங் உன் - கிம் யோ ஜாங்

கிம் மரணமடைந்தால் அவருக்குப் பிறகு கிம் யோ ஜாங் ஆட்சி அதிகாரத்துக்கு வருவது 90 சதவிகிதம் உறுதி என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஆட்சி அதிகாரத்தை கிம் யோ ஜாங் கைப்பற்றினால் 1948-ல் கிம்-இல்-சுங் தொடங்கிய குடும்ப சர்வாதிகார ஆட்சி சத்தமே இல்லாமல் தொடரும். `தி ஃபர்ஸ்ட் ஃபீமேல் டிக்டேட்டர்' என்ற அடைமொழியுடன் கிம் யோ ஜாங், வடகொரிய அரசியல் வரலாற்றில் இடம்பெறுவார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.