Published:Updated:

`கொரோனாவை வெல்வதற்கான முதல்படி ட்ரம்ப்பைத் தோற்கடிப்பதே..!’ - ஜோ பைடன்

ஜோ பைடன்
ஜோ பைடன் ( Carolyn Kaster )

``நீங்கள் அனைவரும் வாக்களிப்பதை ட்ரம்ப் விரும்பவில்லை. அமெரிக்கர்கள் வாக்களிப்பதை அவர் விரும்பவில்லை. செல்வந்தர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்’’ - ஜோ பைடன்

கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் தேர்தல்களம் சூடுபிடித்திருக்கிறது. அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இதேபோல் துணை அதிபர் பதவிக்கு ட்ரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பைடன் கட்சியில் கமலா ஹாரிஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், நேற்று அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் தன் தேர்தல் பரப்புரையின் இறுதி வாதத்தை முன்வைத்த ஜோ பைடன், கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையானதை ட்ரம்ப் வழங்கத் தவறியதால், அவரைத் தோற்கடிக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஜோ பைடன், ``நான் சொல்லவரும் செய்தி மிகவும் எளிமையானது. இந்த நாட்டை மாற்றும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் எனக்குக் கவலையில்லை, இந்த நாட்டின் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க எப்படி முயன்றாலும் சரி, அவரால் எதுவும் செய்ய முடியாது" என்றார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Andrew Harnik

கடந்த வாரம் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கட்டுரையை மேற்கோள்காட்டிப் பேசிய பைடன், ``அதிபர் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னர் ட்ரம்ப் அளவுக்கு எந்த ஒரு வேட்பாளரும் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிகள் எடுத்ததில்லை" என்று கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா: `நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனா தடுப்பூசி இலவசம்!’ - ஜோ பைடன்

மேலும்,``நீங்கள் அனைவரும் வாக்களிப்பதை ட்ரம்ப் விரும்பவில்லை. அமெரிக்கர்கள் வாக்களிப்பதை அவர் விரும்பவில்லை. செல்வந்தர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். டொனால்டு ட்ரம்ப், தனது பைகளை கட்டிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டிய நேரம் இது. ட்ரம்ப் வீட்டுக்குச் செல்லுங்கள்.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே செயல்படப்போகிறேன். கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாங்கள் செயல்படப்போகிறோம். கொரோனா வைரஸை வெல்வதற்கான முதல்படி ட்ரம்பைத் தோற்கடிப்பதே. வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியையும்விட ஆப்பிரிக்க - அமெரிக்கர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் ட்ரம்ப் செயல்பட்டிருக்கிறார்’’ என்றார்.

ட்ரம்ப் - ஜோ பைடன்
ட்ரம்ப் - ஜோ பைடன்

ஜோ பைடன், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, அதிபர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பிட்ஸ்பர்க்கிலேயே பேரணியுடன் தன் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். தனது இறுதிப் பேரணியில், ``இந்தத் தேர்தல் நம் தேசத்தின் ஆன்மாவுக்கான ஒரு போர். நாடு தொற்றுநோயிலிருந்து மீண்டு முன்பைவிட சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்" என்று ஜோ பைடன் உணர்ச்சிவசப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு தன் ட்விட்டர் பக்கத்தில், `அடுத்த 12 மணி நேரத்துக்குள், வாழ்நாளின் முக்கியமான தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்’’ என்று ஜோ பைடன் பதிவிட்டிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு