போரினால் உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவ இங்கிலாந்து அரசால் கடந்த மார்ச் 18-ம் தேதி தொடங்கப்பட்டது, 'உக்ரைன் மக்களுக்கான வீடுகள் திட்டம் (Homes for Ukraine)'. இந்தத் திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருந்து வெளியேற விரும்பும் அகதிகள், இங்கிலாந்தில் உள்ள ஒருவரின் வீட்டில் ஆறு மாத காலம்வரை தங்கலாம்.
இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராபர்ட் ஜென்ரிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவ வேண்டும் என விரும்பினர். அதைத் தொடர்ந்து உக்ரைனிலிருந்து வந்த அகதிகளான மரியா, கிறிஸ்டினா, மற்றும் போடன் ஆகியோரை நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள தங்கள் வீட்டுக்கு வரவேற்றனர். 'உக்ரைன் மக்களுக்கான வீடுகள்' திட்டத்தின் கீழ், அகதிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் முதல் எம்.பி இவர்தான் என்று கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'எங்கள் இரு குடும்பத்தினருக்கும் அந்தத் தருணம் மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது. இப்போது இந்தக் குடும்பம் பாதுகாப்பான இடத்தில், மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறேன். இத்திட்டத்தின் கீழ் இங்கிலாந்துக்கு வரும் உக்ரேனியர்கள், தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் விட்டு வருவதால், கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்' என ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
'உக்ரைன் மக்களுக்கான வீடுகள்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 55,600 விண்ணப்பங்களில் 25,100 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.