Published:Updated:

`பால்கோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலி!’- பாகிஸ்தான் முன்னாள் அதிகாரி ஒப்புதல்?!

பால்கோட்
பால்கோட்

2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அந்நாட்டு தூதரகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஜாஃபர் ஹிலாலி (Zafar Hilaly) கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், 2019-ல் இந்தியா நடத்திய பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் 300 பேரை இழந்ததாகக் கூறியதாகத் தகவல் வெளியானது. மேலும் அவர், ``அந்தத் தாக்குதல் ஒரு போர்ச் செயல். ஆனால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தவறிவிட்டது’’ என்றார். அதேபோல், தாக்குதல் குறித்த பாகிஸ்தானின் பதிலும் பலவீனமாக இருந்ததாக அவர் விமர்சித்திருக்கிறார்.

எனினும் அந்த அதிகாரி, தான் அவ்வாறு பேசவில்லை என மறுத்திருக்கிறார். `சர்வதேச எல்லையைத் தாண்டி இந்தியா ஈடுபட்ட போரில் அவர்கள் குறைந்தது 300 பேரைக் கொல்ல நினைத்தனர்’ எனப் பேசியதாக வீடியோ ஆதாரமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

பால்கோட் தாக்குதல்
பால்கோட் தாக்குதல்

பாகிஸ்தானின் பலவீனமான பதிலடியால்தான் அதே போன்று மீண்டுமொரு முறை தாக்குதல் நடத்துவோம் என இந்தியா கூறியதாக அவர் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியானது. 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ல் பாகிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கால்பந்து மைதானங்களில்தான் குண்டு வீசினோம் என்று சொன்னது. இதை மறுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தின் 25-வது படைப்பிரிவின் தலைமையகத்தையும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையும் குறிவைத்ததாகக் குற்றம்சாட்டியது.

ஆனால், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் (ISPR- Inter Services Public Relations) அமைப்பின் நிர்வாக இயக்குநர் அசிஃப் காஃபர், தங்களது விமானப்படை இந்திய ராணுவ தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்றார்.

2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், வீரமரணமடைந்தனர். அந்தத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு என்பது தெரியவந்தது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் பால்கோட்டிலிருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை 2019, பிப்ரவரி 26-ம் தேதி, அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.

Vikatan

அதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா கூறியது. ஆனால், பாகிஸ்தான் அதை மறுத்துவந்தது. தங்கள் மண்ணில் தீவிரவாதம் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், இந்தியத் தாக்குதலில், 300 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி கூறியதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை பற்றவைத்திருக்கிறது. எனினும், அதை அவர் மறுக்கவும் செய்திருக்கிறார். வீடியோ மூலம் அவர் அவ்வாறு பேசவில்லை என்பதும் உறுதியாகிறது.

அடுத்த கட்டுரைக்கு