Election bannerElection banner
Published:Updated:

பிரான்ஸ்: தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்! - கொடூரத்துக்குக் காரணமான கேலிச் சித்திரம்

பிரான்ஸ் பேரணி
பிரான்ஸ் பேரணி

அந்த வகுப்புக்குப் பின் அவர், பல்வேறு மிரட்டல்களை எதிர்க்கொண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகமது நபியின் கேலி சித்திரங்களை தனது வகுப்பில் காட்டியதற்காக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள பள்ளியில் கொடூரமாகத் தலை துண்டிக்கப்பட்டு வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஆசிரியருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிபர் மெக்ரான், ``ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக தூங்க முடியாது" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள இடம் கான்ஃப்ளான்ஸ் செயின்ட் ஹொனோரின் (CONFLANS-SAINTE-HONORINE). அங்கு செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 47 வயதான சாமுவேல் பேட்டி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தான் பணியாற்றும் பள்ளிக்கு அருகே தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டி
ஆசிரியர் சாமுவேல் பட்டி

ஆசிரியரைக் கொலை செய்த 18 வயது இளைஞர் சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயற்சி செய்தபோது, உள்ளூர் காவல் துறையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை சரணடையுமாறு அறிவுறுத்தியபோது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் காவல்துறை தரப்பில், ``ஆசிரியரைக் கொலை செய்த 18 வயதான அன்சோரோவ், ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர். அவரின் சகோதரர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தைப் படம் பிடித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு அன்சோரோவ் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான காரணம் என்ன?

கடந்த 2015 ம் ஆண்டு பிரான்ஸ் பத்திரிகையான `சார்லி ஹெப்டோ’ (Charlie Hebdo) முகமது நபியின் கேலிச்சித்திரத்தை பதிவிட்ட காரணத்திற்காகத் தாக்குதலுக்கு உள்ளானது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில், இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் வரலாற்று ஆசிரியரான சாமுவேல் பேட்டி, கருத்துச் சுதந்திரம் பற்றிய தனது வகுப்புக்கு அந்த கேலிச்சித்திரங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். அவற்றை மாணவர்களுக்குக் காட்டும் முன்னர், இதனால் உங்கள் நம்பிக்கை புண்படுத்தத் தாம் விரும்பவில்லை என்று கூறி இஸ்லாமிய மாணவர்கள், வகுப்பை விட்டு வெளியேறலாம் என்றும் ஆசிரியர் சாமுவேல் கூறியதாகத் தெரிகிறது.

பாரிஸ் பேரணி
பாரிஸ் பேரணி

இந்த கேலிச் சித்திரத்தை வகுப்பறையில் காட்டியது தொடர்பாக இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர், சாமுவேல் பேட்டி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களில் ஒருவர், இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன் அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அந்த வகுப்புக்குப் பின், அவர் பல்வேறு மிரட்டல்களை எதிர்க்கொண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் குற்றம்சாட்டினார். இந்தக் கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாகச் சென்றனர்.

பேரணி
பேரணி

இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அதிபர் மெக்ரான், ``நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக தூங்க முடியாது” என்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி

ஐரோப்பிய நாடாளுமன்றம் நேற்று காலை கூடியது. அந்த கூட்டத்தில் ஆசிரியர் சாமுவேல் பேட்டிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரணி
பேரணி

விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் பள்ளி திரும்பும்போது பிரான்ஸ் பள்ளிகளிலும் ஆசிரியர் சாமுவேல் பேட்டிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு