Published:Updated:

முறைகேடான முதலீடு: சிக்கிய சச்சின் டெண்டுல்கர்; பண்டோரா பேப்பரின் புதிய அம்பலங்கள்! - முழு அலசல்

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனச் சுமார் 91 நாடுகளைச் சேர்ந்தவர்கள் `பண்டோரா பேப்பர்ஸ்' பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலக மக்களையெல்லாம் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது `பண்டோரா பேப்பர்ஸ்' விவகாரம். சட்டவிரோதமாகத் தங்கள் வருமானத்தை மறைத்து, வரி கட்டுவதைத் தவிர்த்து, வெளிநாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் பணப்பதுக்கல் செய்த உலகப் பிரபலங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர்.

அரசியல் தலைவர்கள், பல நாடுகளின் பிரதமர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனச் சுமார் 91 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலில், சுமார் 380 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. அவர்களில், அனில் அம்பானி, நிரவ் மோடியுடன் சேர்த்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றிருப்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சச்சின் - நிரவ் மோடி- அனில் அம்பானி
சச்சின் - நிரவ் மோடி- அனில் அம்பானி

என்ன நடந்தது என்பதை கழுகுப்பார்வையில் தெரிந்துகொள்வோம்.

பண்டோரா பேப்பர்ஸ்:

வெளிநாடுகளில் முறைகேடாகப் பணமுதலீடு செய்து சொத்துக் குவித்தவர்களின் பட்டியலை, சர்வதேசப் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) `பண்டோரா பேப்பர்ஸ்' எனும் பெயரில் வெளியிட்டிருக்கிறது. உலகின் முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களான பிபிசி, தி கார்டியன், இந்தியாவின் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' முதலிய 150 ஊடகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் புலனாய்வில் பல திடுக்கிடும் ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

கிட்டத்தட்ட 1.9 கோடி கோப்புகளைக்கொண்டிருக்கும் அந்த ஆவணத்தில் உலகின் 956 கார்ப்பரேட் நிறுவனங்களின் திரைமறைவு ரகசியச் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, அதில் ரகசியப் பங்குகொண்டிருக்கும் உலகின் 91 நாடுகளைச் சேர்ந்த அதிகாரம்மிக்க 356 அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகளின் ஊழல் கைரேகைகளும் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

பண்டோரா பேப்பர்ஸ்
பண்டோரா பேப்பர்ஸ்

உலக அளவில் சிக்கிய பெரும்புள்ளிகள்:

உலக அளவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்கியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்
AP

இவர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, துருக்கி, ஜோர்டான், உக்ரைன், கென்யா, ஈக்வடார், செக் குடியரசு போன்ற பல்வேறு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசியல் தலைவர்களைத் தவிர்த்து 130 ரஷ்யப் பணக்காரர்களும், பாப் இசைப்பாடகி ஷகிரா உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கியிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய அளவில் சிக்கிய பெரும்புள்ளிகள்:

இந்திய அளவில் மட்டும் இந்தப் பெயர் பட்டியலில், சுமார் 380-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கின்றனர். இவர்களில், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி உள்ளிட்டோருடன் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி நிதி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இந்தியாவைவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தன்னுடைய சகோதரி புர்வி மோடியின் பெயரில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதும் ஆவணத்தில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Vikatan
சச்சின் - நிரவ் மோடி- அனில் அம்பானி
சச்சின் - நிரவ் மோடி- அனில் அம்பானி

அதேபோல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏ.டி.ஏ நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், ஜெர்சி, சைப்ரஸ் ஆகிய பகுதிகளில் 18 நிறுவனங்களை நடத்திவருவதும், அதன் மூலம் வெளிநாடுகளில் சுமார் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் இருப்பதும் புலனாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலதிபர்களான இவர்களைத் தவிர்த்து, உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் இடம்பெற்றிருப்பதுதான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சச்சின்
சச்சின்
ICC

சச்சின் மீதான குற்றச்சாட்டு:

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில், சச்சின், அவருடைய மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மாமனார் ஆனந்த் மேத்தா ஆகிய மூவரும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் (Saas International Ltd) எனும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்ததாகவும், அதன் மூலம் பலகோடி ரூபாய் அளவுக்குப் பலனடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதேபோல் 2015-ல் `பனாமா பேப்பர்ஸ்' (Panama Papers) ஆவணங்கள் வெளியானபோது, பாலிவுட் பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், தொழிலதிபர் வினோத் அதானி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பனாமா பேப்பர்ஸ் வெளியான மூன்று மாதங்களில், சச்சின் டெண்டுல்கர் விர்ஜின் தீவுகளிலுள்ள தனது சாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளை அவசர அவசரமாக மார்க்கெட் விலையைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் விற்றிருக்கிறார் எனவும் பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு அந்த நிறுவனம் முற்றிலுமாக மூடப்பட்டது.

சச்சின் தரப்பின் மறுப்பு:

இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி மிரின்மோய் முகர்ஜி விளக்கமளித்திருக்கிறார். அதில், ``சாஸ் நிறுவனத்தில் சச்சின் டெண்டுல்கரின் முதலீடு சட்டபூர்வமானது. அந்த முதலீடு அவரது சொந்த வருமானத்திலிருந்தே செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் வரி குறித்தும் முறையாக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், வரி செலுத்திய ஆவணங்கள் எங்களிடம் முறையாக இருப்பதால், பண்டோரா பேப்பர்ஸில் குறிப்பிட்டதுபோல சச்சின் எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது" என பதிலளித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

முறைகேடான அந்நிய நிதி முதலீட்டுக்குக் காரணம்:

இந்தியாவிலிருக்கும் பெரும் பணக்காரர்கள், ஊழல் அரசியல்வாதிகள், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கும் நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட கறுப்புப் பண முதலைகள் பெரும்பாலானோர் பனாமா, பிரிட்டிஷ் வெர்ஜினியா, சைப்ரஸ் போன்ற வரிக் கட்டுப்பாடுகள் குறைவான வெளிநாடுகளில் தங்கள் பணத்தைப் பதுக்கிவைக்கின்றனர்.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

அதாவது, அந்த நாடுகளின் வங்கிகளில் முதலீடுகள் செய்வது, போலியான நிறுவனங்களைத் தொடங்கி அதில் முதலீடு செய்வது, சொத்துகள் வாங்கிக் குவிப்பது போன்ற பல்வேறு வழிகளில் வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதன் மூலம் தங்களின் வருமானத்தை மறைத்து, சொந்த நாடுகளை ஏமாற்றி வரி கட்டாமல் பணத்தைப் பதுக்கிவைத்துக்கொள்கின்றனர்.

அந்நிய முதலீடுகள்
அந்நிய முதலீடுகள்

இது போன்ற சட்டவிரோத ரகசிய முதலீடுகள் செய்தவர்களை , சர்வதேசப் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ), `பண்டோரா பேப்பர்ஸ்' எனும் பெயரில் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, `பனாமா பேப்பர்ஸ்' எனும் பெயரில் இது போன்ற முறைகேடுகளை ICIJ வெளிக்கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு