Published:Updated:

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரிட்டன்... இந்தியாவுக்கு பாதிப்பா?

ப்ரெக்ஸிட்
ப்ரெக்ஸிட்

நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த ப்ரெக்ஸிட் தற்போது நிறைவேறியுள்ளது. இதன் சாதக பாதங்களை விளக்கக்கூடியதே இந்தக் கட்டுரை.

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ஜனவரி 31-ம் தேதி நள்ளிரவோடு அதிகாரபூர்வமாக வெளியேறியது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான 47 ஆண்டுகால பிரிட்டனின் உறவு இத்துடன் முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் பிரிட்டன் அரசியலை வாட்டிவதைத்த ப்ரெக்ஸிட் தலைவலி ஓய்ந்துவிட்டது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதைக் குறிக்கும் சொல்லே ப்ரெக்ஸிட் (Brexit).

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக 52% வாக்குகள் விழுந்தன. இதைத் தொடர்ந்து ப்ரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. மார்ச் 31, 2019 ப்ரெக்ஸிட்டுக்கான நாளாகக் குறிக்கப்பட்டது.

ப்ரெக்ஸிட்
ப்ரெக்ஸிட்

ஆனால் பிரிட்டனில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் இந்தக் காலக்கெடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு ஜனவரி 31, 2020 புதிய காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் பொதுத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி ப்ரெக்ஸிட்டை வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டது.

பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டாலும் 11 மாதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளையே பிரிட்டன் பின்பற்ற வேண்டும். புதிய விதிகளை நிர்ணயிப்பதற்கான கால அவகாசமாக இது கருதப்படுகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பது பற்றி எந்தத் தரப்பினரிடமும் தெளிவான கணிப்பு இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கதை:

20-ம் நூற்றாண்டின் முற்பாதியில் இரண்டு உலகப்போர்கள் பூமியைத் துண்டாடியிருந்தன. ஐரோப்பாவைவை மையப்படுத்தி நடைபெற்ற இந்த இரண்டு போர்களால் மேற்குலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. காலனிய ஆதிக்கம் உடைந்து மூன்றாம் உலக நாடுகள் உருவாகத் தொடங்கின. இந்த சமயத்தில் அமைதிக்கான தேவையை உணர்ந்து ஐ.நா அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய கண்டத்திற்கென்று பொதுவான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்

அதன் அடிப்படையில் ஃபிரான்ஸ், அப்போதைய மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பெர்க், பெல்ஜியம், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 நாடுகளை நிறுவன உறுப்பினர்களாகக் கொண்டு ரோம் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்துக்கான முன்னோடி அதுவே. ஆறு நாடுகளுடன் தொடங்கிய இந்த அமைப்பு காலப்போக்கில் 28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியமாக உருப்பெற்றது. தற்போது பிரிட்டன் விலகியதைத் தொடர்ந்து இதில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பொதுவான நாணயம், தடையற்ற வர்த்தகம், கட்டுப்பாடுகளற்ற மக்கள் போக்குவரத்து ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. உலக அரசியலில் முடிவெடுப்பதிலும் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை ஒரு வலுவான சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாடுகளுக்குள்ளாக சுதந்திரமாக பயணம் செய்யமுடியும், வேலைகளுக்கும் செல்ல முடியும். பிரிட்டன் கடந்த 1973-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்தது.

ஏன் ப்ரெக்ஸிட்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றிய விவாதங்கள் பிரிட்டனில் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. கடந்த 1975-ம் ஆண்டே இதுபற்றிய பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மூன்றில் இரண்டு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டுமா என்கிற விவாதம் பிரிட்டனில் மீண்டும் எழுந்தது. அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு தற்போது பிரிட்டன் வெளியேறிவிட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூட பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

நோ டீல் ப்ரெக்ஸிட்
நோ டீல் ப்ரெக்ஸிட்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதனால் பிரிட்டன் பெறுவதைக் காட்டிலும் அதிகம் இழக்கவே செய்கிறது என்பது இதில் ஒரு விவாதம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் தஞ்சமடைந்து அவர்களின் வாய்ப்புகளைப் பறித்துவிடுகிறார்கள் என்பது மற்றுமொரு விவாதம்.

அடுத்த 11 மாத காலம் முடிவதற்குள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்குமான உறவு அடுத்து எவ்வாறு இருக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டாக வேண்டும். அப்படி ஒரு தீர்வு எட்டப்படவில்லையெனில் தீர்வில்லாமலே (நோ டீல் ப்ரெக்ஸிட்) பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நேரிடும். இது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

Vikatan

சாதக, பாதகங்கள் என்ன?

ப்ரெக்ஸிட்டின் தாக்கம் இரண்டு தரப்புக்கும் என்னவாக இருக்கும் என்பதை எவராலும் யூகிக்க முடியவில்லை என்பதே உண்மை. இதன் நிறை, குறைகள் தெரிவதற்கு நீண்ட காலங்கள் தேவைப்படும் என்கின்றனர். ஆனாலும் இதன்மூலம் சில உடனடி தாக்கங்கள் இருக்கவே செய்கின்றன. பிரிட்டன் இனி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தன்னுடைய அரசியல், வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளைச் சுயமாகவே வகுத்துக் கொள்ளலாம்.

பிரிட்டன் வெளியேறியது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஆதாரத்துக்கும் அரசியல் முக்கியத்துவத்துக்கும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பிரிட்டன் மீண்டும் இணைந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான கதவுகளைத் திறந்தே வைத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ப்ரெக்ஸிட்
ப்ரெக்ஸிட்

ஜெர்மனிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக பிரிட்டன் விளங்கிவந்தது. பிரிட்டன் வலுவான ராணுவத்தைக் கொண்டதோடு மட்டுமல்லாது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகவும் உள்ளது.

பிரிட்டன் விலகியதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இனி தடையற்ற வர்த்தகம் செய்துகொள்ள முடியாது என்பது பிரிட்டனுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய மக்களின் எதிர்காலமும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பிரிட்டன் மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தொடரும் பிரெக்ஸிட் குழப்பம்... பிரிட்டன் வெளியேறுமா, வெளியேறாதா?

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றி சார்ட்டர்ட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் ஆர்.மோகனப் பிரபு எழுதுகையில், ``பிரிட்டனில் 800-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. பிரிட்டிஷ் - இந்திய நிறுவனங்களில் லட்சக்கணக்கானவர்கள் பணிபுரிகிறார்கள். குறிப்பாக, டாடாவின் ஜே.எல்.ஆர் தொழிற்சாலையில் பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவிலும் பிரிட்டனின் ஏராளமான முதலீடுகள் உள்ளன. எனவேதான், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை நம் நாடு விரும்பவில்லை. குறிப்பாக, `நோ டீல்’ வெளியேற்றம், ஒருவிதமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சம் இந்தியாவில் நிலவுகிறது. வாகன உதிரிப் பொருள்கள், மென்பொருள் மற்றும் மருந்துப் பொருள்கள் துறைகளில் இந்தியாவின் மிகப் பெரிய இறக்குமதி நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பொருளாதாரப் பின்னடைவு நமது ஏற்றுமதியாளர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பவுண்ட் மதிப்பு குறைந்துபோனதன் காரணமாகப் பல ஒப்பந்தங்கள் மறுபரிசீலனைக்கு உள்ளாகியுள்ளதும் இந்திய ஏற்றுமதியாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.” என்கிறார்.

ஆர்.மோகனப் பிரபு
ஆர்.மோகனப் பிரபு

சர்வதேச சூழல்!

சர்வதேச அரங்கில் தனித்துச் செல்கிற அமெரிக்கா ஒருபுறமும் மெல்ல தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சீனா மறுபுறமும் இருக்க ஒருங்கிணைந்த வலுவான ஐரோப்பிய ஒன்றியம் தேவை என்பதைப் பல ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் உணர்ந்தே இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவ்வப்போது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீண்டி வருகிறார். ரஷ்யாவும் சர்வதேச அரங்கில் தான் இழந்த செல்வாக்கை திரும்பப் பெற முயல்கிறது. சீனா தன்னை ஆசியாவின் சூப்பர் பவராக நிர்மாணித்துக் கொள்வதில் முழு முனைப்புடன் இயங்கி வருகிறது.

அமெரிக்காவைச் சார்ந்திடாமல் ஐரோப்பிய ஒன்றியம் தனக்கான ராணுவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான பிரிட்டன் அதிலிருந்து விலகியிருப்பது பலராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு