Published:Updated:

உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் G20 மாநாடு…!

G20 மாநாடு

2023-ல் நடைபெறும் 18வது G20 மாநாட்டு கூட்டம் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரியும் என பொருளாதார வல்லுநர்களால் நம்பப்படுகிறது. G20 குழுவில் உள்ள நாடுகள் ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தில் 80% -ஐ கொண்டுள்ளனர்.

உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் G20 மாநாடு…!

2023-ல் நடைபெறும் 18வது G20 மாநாட்டு கூட்டம் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரியும் என பொருளாதார வல்லுநர்களால் நம்பப்படுகிறது. G20 குழுவில் உள்ள நாடுகள் ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தில் 80% -ஐ கொண்டுள்ளனர்.

Published:Updated:
G20 மாநாடு

இரண்டாம் உலகப் போர் வரையிலான காலத்தில் பெரும்பாலான வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்துக்கள் என்பது இருந்ததில்லை. வளர்ந்த நாடுகளுக்கிடையேயான கோட்பாடுகளும், மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் கொள்கைகளும் வேறுபட்டிருந்தது. இதன் விளைவாக பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றம் வளரும் நாடுகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

G20 மாநாடு
G20 மாநாடு

வளர்ந்த நாடுகளின் நிதி ஆதாரம்..!

தங்களுடைய கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் நாடுகளுக்கு மட்டுமே பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த உதவிகளை மேலை நாடுகள் செய்து வந்தன. இதன் காரணமாக அடிக்கடி போர் பதற்ற சூழலும், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக ஏற்ற - தாழ்வுகளும் காணப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலத்தில் இதனை களைய சில வளர்ந்த நாடுகள் புதிய கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தன. வளரும் மற்றும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த வாய்ப்புள்ள நாடுகளை கண்டறிந்து அவற்றுடன் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த துவங்கியது. இதன் மூலம் இரு தரப்புகளுக்கும் பயன்பெறும் வகையிலும், வளர்ந்த நாடுகள் தங்களது நிதி ஆதாரத்தை நீண்டகாலத்தில் தக்கவைத்து கொள்ளவும் இந்த ஒப்பந்தங்கள் உதவும் என நம்பின.

G5 குழு நாடுகள்

ஆரம்ப நிலையில், வளர்ந்த நாடுகள் மட்டுமே அரசியல் பொருளாதாரம் சார்ந்து தங்களை இணைத்து கொண்டன. 1970 -ம் ஆண்டின் மத்தியில் தொழிற்துறையை முக்கியத்துவமாக கொண்ட ஐந்து நாடுகளை கொண்டு ஒரு குழு துவங்கப்பட்டது. இவை G5 என்றழைக்கப்பட்டன. இந்த குழுவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய ராச்சியம் (UK) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கும்.

G20 மாநாடு
G20 மாநாடு

G7 குழு நாடுகள்

பின்னர் 1975 ம் ஆண்டில் கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை இணைத்து அவை G7 குழு நாடுகளாக மாற்றம் பெற்றன.

G7 குழு நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் அந்த நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆண்டுக்கு இரு முறை என கூட்டத்தை ஏற்படுத்தினர். பொருளாதாரம், நிதி சார்ந்த சிக்கல்கள் மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகளை அலசுவதற்கான மன்றமாக இது செயல்பட்டன.

G10 குழு நாடுகள்

G10 குழு நாடுகள் என்ற அமைப்பு பெரும்பாலும் கடன் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தமாகவே சொல்லப்பட்டு வந்தது. G7 குழுவில் சொல்லப்பட்ட நாடுகளை சேர்த்து பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து G10 குழு அமைப்பு ஏற்பட்டது.

இவற்றில் உள்ள பெரும்பாலான நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்பினர்களாக இருந்தனர். 11 நாடுகள் இருந்தாலும், இந்த அமைப்பு G10 குழு என்றே அழைக்கப்பட்டன.G5, G7 மற்றும் G10 என பல குழுக்கள் வந்திருந்தாலும் இது வளரும் நாடுகளுக்கு பெரும்பாலும் வளர்ச்சிக்கான வாய்ப்பை அளிக்கவில்லை.

G20 குழு தோன்றக் காரணம்

1990 -ம் வருடத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி, வளரும் நாடுகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது எனலாம். அப்போது அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததும், எண்ணெய் வள நாடுகளில் காணப்பட்ட கடுமையான எண்ணெய் விலைவாசியும் (Oil Crisis) ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வேலை வாய்ப்பின்மையும், நிதி சிக்கலும் அதிகரித்திருந்தது. அடுத்து வரும் காலங்களில் இது போன்ற பெரும் சவாலை சமாளிக்க 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் துவங்கப்பட்டது தான் G20 குழு அமைப்பு. நிதி ஆதாரத்தை வலுப்படுத்தவும், சர்வதேச நிதி கட்டமைப்பை நவீனப்படுத்தவும் இந்த குழு உருவாக்கப்பட்டது. அந்த வருடத்தின் G7 மாநாட்டிலும் G-20 துவங்குவதன் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது.

G20 மாநாடு
G20 மாநாடு

G20 நாடுகள்

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய ராச்சியம் (UK), அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் G20 குழுவில் உறுப்பினர்களாக உள்ளன.

சர்வதேச நிலைத் தன்மை, காலநிலை மாற்றங்கள், பொருளாதாரத்தில் நீடித்த வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரம் தொடர்பான மற்ற சிக்கல்களுக்கும் தீர்வு காண இந்த G20 குழு செயல்படுகிறது. G20 குழுவின் பொருளாதார தீர்வில் உலக வங்கி, சர்வேதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கும் பங்குண்டு.

 கனடா நாட்டின் நிதி அமைச்சர் பால் மார்ட்டின், G20 குழுவின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறுகிய நாடுகளை கொண்டிருந்த குழுவை 20 நாடுகளாக விரிவாக்கம் செய்ய துணைபுரிந்த பெருமையும் இவருக்கு உண்டு. சீனா - கனடா நாடுகளின் நட்புறவை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்பு முக்கியமாக சொல்லப்படுகிறது.

G20 குழுவின் கட்டமைப்பு

1999-ம் ஆண்டு இந்த குழு அமைக்கப்பட்டாலும், முதல் மாநாடு அமெரிக்கா வாஷிங்டனில் 2008 -ம் ஆண்டு தான் நடைபெற்றது. இதற்கடுத்தாற் போல் 2009-ம் ஆண்டில் லண்டன் மற்றும் பிட்ஸ்பர்க் நகரங்களில் என இருமுறையும், 2010ம் ஆண்டு கனடா நாட்டின் டொரோண்டோ மற்றும் தென் கொரியாவின் சியோல் என இரு முறையும் நடைபெற்றது. இதுவரை 16 முறை இக்குழுவின் மாநாடு நடைபெற்றுள்ளது. தற்போது 17வது மாநாடாக இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.

G20 மாநாடு
G20 மாநாடு

G20 குழுவை பொறுத்தவரை நிரந்தர செயலாளர் இல்லாமல் செயல்பட்டு வரும் ஓர் அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் அதன் தற்காலிக செயலாளரை நியமிக்க உறுப்பினர் நாடுகளிடையே நாற்காலிகள் சுழலும் (Chair Rotation). ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கான மாநாட்டில் தலைமை தாங்குவதற்கான உறுப்பு நாட்டை தேர்ந்தெடுக்க ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் நான்கு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

ஒரே பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் பெரும்பாலும் ஒரே குழுவின் கீழ் அமையும். இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவில் அமைந்துள்ளன. இது போல சீனா, இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஐந்தாம் குழுவில் அமைந்துள்ளன. ஒவ்வொரு குழுவில் உள்ள நாடுகளுக்கும் சுழற்சி முறையில் பொறுப்பு வழங்கப்படுகிறது. ஒரு குழுவிற்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கிடைக்கும் போது, அவற்றில் உள்ளடங்கிய நாடுகள் தங்களின் அடுத்த தலைவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்பதனை பேச்சுவார்த்தை மூலமும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

G20 மாநாட்டின் முதற்கட்ட நோக்கமாக உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதாகும். நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான உள்நாட்டு சீர்திருத்தங்கள், உலகளாவிய ஆற்றல், வளமான பொருட்சந்தையை கட்டமைத்தல், காலநிலை மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள், எதிர்வரும் பொருளாதார சவால்களுக்கான தீர்வுகள் என பல பொருளாதார நிலைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். ஒவ்வொரு மாநாட்டிலும் அப்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தாற் போல, அதன் கருப்பொருளும் எடுத்து கொள்ளப்படுகிறது. 2007-2008 காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

G20 மாநாடு
G20 மாநாடு

 G20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உலக வங்கி குழுமம், உலக சுகாதார நிறுவனம் (WHO), உலக வர்த்தக அமைப்பு (WTO), ஐ.நா. (United Nations), சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஆப்பிரிக்க யூனியன் போன்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதுண்டு.

 G5, G7, G8, G10, G15 போன்ற குழுக்களில் தீர்க்கப்படாப்படாத பிரச்னைகள், G20 மூலம் தீர்வை எட்டியது எனலாம். இதன் காரணமாகவே G20 மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. G20 குழுவில் உள்ள நாடுகள் ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தில் 80 சதவீதத்தையும், உலக வர்த்தக சந்தையில் (World Trade) 75 சதவீதத்தையும் மற்றும் உலக மக்கள் தொகையில் 60 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

2008 -ம் ஆண்டின் உலக பொருளாதார நிதி நெருக்கடி, சிரியா உள்நாட்டு போர், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் கொரோனா பெருந்தொற்று வரை G20 மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஊழல், பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு, வேலைவாய்ப்பின்மை, பயங்கரவாதம், சுகாதார மேம்பாடு, வரி விதிப்பு, வருவாய் குறைவாக உள்ள நாடுகளில் வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சி என பல உலகலாவிய விவாதங்களை G20 குழு மாநாடு முன்னெடுத்துள்ளது. முக்கியமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார ஊக்குவிப்புகளையும் இந்த குழு ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகளாவிய சுகாதார கட்டமைப்பு, டிஜிட்டல்மயம், நிலையான ஆற்றல் மாற்றம் மற்றும் உக்ரைன் - ரஷ்ய போருக்கான கருத்துகளும் நடப்பு இந்தோனேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.   

நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com
நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com

நிரந்தர செயலாளராக அல்லாமல் இயங்கும் இக்குழுவிற்கு நிரந்தரமான செயலாளர் தேவை என்ற கோரிக்கையும் சில உறுப்பினர் நாடுகளிடமிருந்து வலுப்பெற்றிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை காரணமாக கொண்டு, G20 குழுவிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையும் சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது.

G20 மாநாடு
G20 மாநாடு

அடுத்த ஜி-20 குழு மாநாடு

தற்போது இந்தோனேசியாவில் நடைபெறும் 17வது ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. 18வது ஜி-20 மாநாடு அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து, 19-வது மாநாடு 2024-ம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 2023-ம் வருடத்தில் நடைபெறும் 18வது மாநாட்டு கூட்டம் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரியும் எனவும் பொருளாதார வல்லுநர்களால் நம்பப்படுகிறது.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவின் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் (USD 5 Trillion Economy) என்ற கனவை அடைய உதவும் வகையிலும், உலகின் மிகப்பெரிய நுகர்வு சந்தையான இந்தியாவில் முதலீட்டை ஈர்க்கவும் இந்த மாநாடு உதவலாம். இன்றளவும் உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நிறைய குழு அமைப்பு நாடுகள் இருந்தாலும், G20 குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பல பொருளாதார சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை.